துபாயைச் சேர்ந்த Nabeel Perfumes என்னும் நிறுவனம் வாசனைத் திரவியங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் ஷாமுக் (Shamukh) என்னும் வாசனைத்திரவியம் தான் உலகிலேயே மிக அதிக விலையுள்ள வாசனைத்திரவியம் என்னும் சிறப்பைப் பெற்றிருக்கிறது. விலை என்ன தெரியுமா? 8.97 கோடி!!

ஷாமுக் என்றால் சிறந்தவர்களின் சொத்து என்று பொருள்படும். நபீல் நிறுவனத்தின் மூன்று வருட ஆராய்ச்சியின் விளைவில் இந்த படைப்பு உருவாகியிருக்கிறது. இந்த மணத்தினை அடைய 494 முறை முயற்சித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
ஒரு மி.லி ஷாமுக்கின் மதிப்பு 25,000 ரூபாய்!!
சிறப்பு
இத்தாலியின் முரானோ கண்ணாடிக் குடுவையில் இந்த அதிசய திரவியமானது வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மேல் ராஜாளிப் பறவை, சிங்கம், குதிரை, ரோஸ் போன்ற உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டிலில் 3,571 வைரக் கற்கள், முத்துக்கள், 2.5 கிலோகிராம் எடையுள்ள 18 காரட் தங்கம், 5.9 கிலோ வெள்ளி ஆகியவை உள்ளன. இரண்டு மீட்டர் உயரமுள்ள தோலினால் செய்யப்பட்ட சிறிய பெட்டியின் உள்ளே கண்ணாடிப் பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த திரவிய தயாரிப்பிற்காக உலகம் முழுவதும் இருந்து பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சந்தனம், கஸ்தூரி, இலாங் – இலாங் (Ylang-ylang), துருக்கிய ரோஸ், இந்திய அகில் மரம், பச்சோளி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
இரண்டு கின்னஸ் சாதனைகள்
உலகின் மிக அதிக விலையுள்ள வாசனைத் திரவியமான இது இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. முதலாவது, அதிக வைரங்கள் பதிக்கப்பட்ட வாசனைத் திரவிய குடுவைக்காக. இரண்டாவது, உலகின் முதல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் வாசனைத் திரவியம் என்னும் சிறப்பிற்கு. மார்ச் 30 ஆம் தேதிவரை துபாய் மாலில் இந்த திரவியம் பொதுமக்களின் கண்காட்சிக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஷாமுக்கின் இந்த அசாத்திய சிறப்புகளால் உலகின் அதிக மதிப்புள்ள வாசனைத் திரவிய நிறுவனங்களின் பட்டியலில் நபீல் நிறுவனத்தை இடம்பெற வைத்துள்ளது. 3 லிட்டர் அளவுள்ள ஷாமுக் தான் தற்போதைக்கு உலகின் மதிப்புமிக்க வாசனைத் திரவியமாகும். ஒரு மி.லி ஷாமுக்கின் மதிப்பு 25,000.
போட்டி
ஷாமுக்கை பின்னுக்குத்தள்ள தயாராகிக்கொண்டிருக்கிறது மொராலே (Morreale) என்னும் பிரான்ஸ் நிறுவனம். தங்கம், வைரம், மரகதம் ஆகியவை பதித்துள்ள இந்த பாட்டிலில் 10 லிட்டர் திரவியம் நிரப்பப்பட இருக்கிறது. விலை 124 கோடியாம். இதற்கான ஆராய்ச்சிகள் மும்மரமாக நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் மற்றுமொரு உலக சாதனையை இந்த பிரான்ஸ் நிறுவனம் நிகழ்த்த இருக்கிறது.