6 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட செயற்கை பனி நகரம் வட சீனாவின் ஹெய்லோங் ஜியாங் (Heilongjiang) மாகாணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டிலிருந்து பனிக்காலத்தின் போது கொண்டாடப்படும் Harbin International Ice and Snow Sculpture Festival இந்த ஆண்டு ஜனவரி 5 பிப்ரவரி 5 வரை நடக்க இருக்கிறது. இதன் உருவாக்கத்திற்காக பல ஐஸ் சிற்பக் கலையினார் அங்கே குழுமியுள்ளனர்.

இந்த குளுகுளு நகரத்தை வடிவமைக்கத் தேவைப்படும் ஐஸ் கட்டிகள் ஹெய்லோங் ஜியாங் மாகாணத்தின் அருகே பாயும் சோங்குவா நதியின் (Songhua River) கரைகளில் இருந்து எடுத்துவரப்படுகின்றன. இதன் உருவாக்கத்திற்கு மொத்தம் 110,000 கன சதுர மீட்டர் ஐஸ் கட்டிகள் மற்றும் 120,000 கனசதுர மீட்டர் பனித்துகள்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பனி புத்தர்
4,500 கனசதுர மீட்டர் ஐஸ் கட்டிகளைக் கொண்டு பிரம்மாண்ட புத்தர் சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முப்பரிமானத் தொழில்நுட்பம் மூலம் 340 மீட்டர் நீளத்திற்கு பிரத்யேக வடக்கொளியும் (Northern Lights) பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் 12 நாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க கலைப்படைப்புகளை பனிச் சிற்பங்களாக காட்சிப்படுத்த இருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க இன்னும் அதிக பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க இருப்பதாக அந்த அரசு அறிவித்துள்ளது. இந்த ஐஸ் நகரத்தைச் சுற்றிப்பார்க்க 48 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும்.
35 வருடங்கள்
ஹெய்லோங் ஜியாங் மாகாணத்தின் தொன்மை வாய்ந்த சிறப்புகளைப் பறைசாற்றவே முதன்முதலில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் இத்திட்டமானது விரிவாக்கப்பட்டது. தற்போது உலகின் மிகப்பெரிய ஐஸ் நகரக் கண்காட்சிகளில் இதுவும் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. இந்த வருடம் தனது 35 ஆம் ஆண்டை பூர்த்தி செய்கிறது இந்தத் திருவிழா.