கலியுகத்தில் மனிதன் விரும்புவதெல்லாம் என்ன ?…வெறென்ன சொகுசுதான். பஞ்ச பூதங்களில் நெருப்பை மட்டுமே மனிதன் விட்டுவைத்திருக்கிறான். மற்ற சதுர்ப் பூதங்களிலும் பயணம் செய்யலாம். உல்லாசமாக. விண்வெளிப் பிரயாணத்திற்குப் பிறகு நாம் விரும்புவது தள்ளாடும் கப்பல்கள் தான். அதுதான் இங்கே சமாச்சாரம்.

சொகுசுக்கப்பல்
உல்லாசம் விரும்பு சல்லாப விரும்பிப் பணக்காரர்கள் கடலில் தள்ளாட கட்டப்படும் பிரம்மாண்ட சொகுசு விடுதியைதான் ஆங்கிலத்தில் “யாச்சட் (Yacht) என்பார்கள். நமக்குத் தெரிந்த சொகுசுக் கப்பல் என்றால் அது டைட்டானிக் தான். உண்மையில் அது வெறும் பயணிகள் கப்பல்தான். யாச்சட் என்பது கேளிக்கை விருந்துகளுக்காகவே கட்டப்படும் சொகுசான மிதவைக் கப்பலாகும். இவற்றுள் “பாண்டிச்சேரி முதல் பம்பாய்” வரை பணத்திற்குக் கிடைக்கும். ஆனால் இதைக்கண்டு நடுத்தர வர்க்கம் பொறாமை கொண்டது போதும். இந்திய மதிப்பில் 57,000 கோடி ரூபாயில் உருவாகப்போகும் இந்த ஆழிப்பேருந்து முழுக்க முழுக்க நடுத்தர வர்க்கத்தினர்க்காக மட்டுமே. நமது ஊரில் கட்டப்படும் நவீன கழிப்பறைகளே கட்டிமுடித்து பல மாதங்கள் ஆனாலும் நம் பயன்பாட்டுக்கு வருவதில்லை. ஆனால் இப்பிரம்மாண்ட ஓடத்தை நமக்கு அளிக்க எப்படித்தான் மனசு வந்ததோ?

அப்படி என்ன இருக்கிறது?
கொரியாவில் உருவாகி உலகம் சுற்றப்போகும் இக்கப்பல் உலகிலேயே மிக பெரிய (750 அடி) சொகுசுக் கப்பலாகும். இதற்கு வால்கைரி (Valkyrie) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புதிய வேற்றுக்கிரக படகு போன்று இருக்கும் இந்தக் கப்பலை Palmer Johnson மற்றும் Chulhun Park ஆகிய இரண்டு வல்லுனர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். உள்ளே போனாலும் அப்படித்தான் உணரும்படி இருக்கும். கண்ணாடியில் துவங்கி கதிரியக்க தன்மையற்ற அனைத்து உலோக உள்வேலைப்பாடும் கொண்டவையாகவும் கண்கூசச் செய்யும் வண்ண மந்திரஜாலங்களும் நிரம்பியதாகவும் தயாரகப் போகிறது வால்கைரி. பயணிகளுக்காக 26 அறைகளும், கப்பல் ஊழியர்களுக்கு 46 அறைகளும் கப்பலில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதனுள்ளே விளையாட்டு அரங்கம் ஒன்றும் திரையரங்கம் ஒன்றும் வர இருக்கிறது.

ராட்சசன்
கடலில் இதுவரை மிதக்கும் கப்பல்களிலே அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பலில் வைக்கப்படும் ஒரு பந்துகூட உருளாது. அப்படியான பொறியியல். உலகில் பணக்காரத் திமிங்கலங்களுக்காக மட்டுமே கட்டப்படும் இவை பெரும்பாலும் ஏதாவது அரேபியருக்குச் சொந்தமாக இருக்கும். இந்தியாவில் ஒரு இந்தியர் மட்டுமே இது போன்ற சொகுசான சொர்க்கத்தை சொந்தம் கொண்டாடினார். வேறு யார் ஸ்டேட் பாங்க் “ஆப்பு” மல்லையாதான்.