மனிதன் நவீன காலத்திற்கு மாறுவதற்கு முன்பே வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிகள் தொடங்கிய பின் வைரஸ்களை எதிர்த்து போராடும் மருந்துகள் கண்டறியப்பட்டன. இதனால் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கமுடிந்தது. அப்படி தான், பெரியம்மை நோய் உலகம் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும், பல நேரங்களில் வைரஸ் நோய் தொற்றிலிருந்து போராடுவதற்கு நாம் மிகவும் தொலைவில் இருப்பதாகவே தோன்றும். கடந்த காலங்களில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்கள் பல ஆயிரம் உயிர்களை பலிவாங்கியது. மேற்கு ஆப்பிரிக்காவில் 2014-2016 வரை பரவிய எபோலா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சம் 90% மக்களை கொன்றது. இது எபோலா குடும்பத்தில் மிகவும் ஆபத்தான வைரஸ் என்று அறியப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் குடும்பத்தை சார்ந்த SARS-COV-2 உலகத்தில் பெருமளவில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. அத்துடன் இந்த நோயில், உயிரிழப்புகள் குறைவு என்று கணக்கிடப்பட்டாலும், இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை என்பதாலும் பரவும் விகிதம் அதிகமென்பதாலும் சிக்கல் நீடிக்கிறது.
இந்த தொகுப்பில் உலகில் மோசமான பாதிப்பை உண்டாக்கிய 12 வைரஸ்கள் பற்றி பார்க்கலாம்.
மார்பர்க் வைரஸ் (Marburg Virus)
ஆராய்ச்சியாளர்கள் மார்பர்க் வைரஸை 1967 ஆம் ஆண்டு கண்டறிந்தனர். இது பற்றிய ஆராய்ச்சி ஜெர்மன் ஆய்வகத்தில் நடைபெற்றது. அதில், உகண்டாவிலிருந்து குரங்குகள் மூலம் பரவியது தெரியவந்தது.
மார்பர்க் வைரசும், எபோலா வைரஸ் போன்ற பாதிப்பை கொடுக்கிறது. இதன் மூலமும் இரத்த போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படும். உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படும். முதலில் இந்த வைரஸ் பரவிய வேளையில் 25 சதவீதம் பேர் மட்டும் உயிரிழந்தனர். 1998 ல் காங்கோ ஜனநாயக குடியரசில் இரண்டாவது முறையாக பரவிய வேளையில் 80 சதவீதம் பேர் உயிரிழந்தனர். அதன் பின் 2005 ஆம் ஆண்டு அங்கோலாவில் பரவியதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் காட்டுகிறது.
எபோலா வைரஸ் (Ebola Virus)
எபோலா வைரஸ் தொற்று 1976 ல் சூடான் மற்றும் காங்கோவில் ஒரே நேரத்தில் கண்டறியப்பட்டது. இரத்தம், உடல் திரவம், பாதிக்கப்பட்ட நபர்களின் திசுக்கள் மூலமும் இந்த வைரஸ் பரவும். இது ஒரு வியத்தகு கொடிய உயிர் கொல்லி வைரஸ் என்று Boston University நுண்ணுயிரியல் இணை பேராசிரியர் Elke Muhlberger தெரிவித்துள்ளார்.
எபோலா வைரஸின் திரிபுக்கு (Mutation) 50 சதவீத இறப்பு விகிதம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் சூடானில் 71 சதவீதம் பேர் இறந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2014 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிலும், எபோலாவின் தாக்கம் இருந்தது. இது மிக மோசமான பாதிப்பை உண்டாக்கியதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ரேபிஸ் (Rabies)
செல்லப்பிராணிகள் மூலம் பரவிய இந்த நோய் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கடுமையான பிரச்சனையாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளில், ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி மூலம் இதன் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை அழிக்கப்பட்டு மிகவும் மோசமாக பாதிப்படையச் செய்கிறது. அத்துடன் இந்த நோய்க்கு முறையாக சிகிச்சை வழங்கப்படாவிட்டால் இறப்பு நிச்சயம்.
எச்.ஐ.வி (HIV)
நவீன உலகில் மிகவும் ஆபத்தான வைரஸ் எச்.ஐ.வி. இதனால் ஏற்படும் AIDS தற்போதும் உயிரை பறிக்கும் கொடிய நோயாக உள்ளது. 1980 ல் 3 கோடிக்கும் அதிகமானோர் எச்.ஐ.விக்கு உயிரிழந்திருப்பதாக கண்டறியப்பட்டது. இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்.
ஆனால், சக்தி வாய்ந்த எதிர்ப்பு மருந்து ஒன்று, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை நீண்ட காலம் வாழச் செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில், பாதிப்பு இன்றும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுபடி ஆப்பிரிக்க நாட்டில் 25 பெரியவர்களில் ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பெரியம்மை (Smallpox)
1980 ஆம் ஆண்டு பெரியம்மை நோயை உலக சுகாதார அமைப்பு பெருந்தொற்று என்று அறிவித்தது. ஆனால், அதற்கு முன்பும் பெரியம்மை நோயினால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவரை கொல்லும் அளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன், நிரந்தர தழும்புகள் மற்றும் குருட்டுதன்மை போன்ற பிரச்சனையும் ஏற்பட்டது.
இதுவரை பெரியம்மையால் உலகம் முழுவதும் 300 கோடி பேர் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்நோய் பாதிக்கப்பட்டு குருட்டுத் தன்மை பிரச்சனைக்கும் பலர் ஆளாகியுள்ளனர்.
ஹன்டாவைரஸ் (Hantavirus)
ஹன்டாவைரஸ் நுரையீரலை பாதிக்கும் நோயாகும். இது 1993 ல் கண்டறியப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு சில நாட்களில் உயிரிழந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் இருந்த மான் மற்றும் எலியிடம் ஹன்டவைரஸ் இருந்ததை சுகாதாரத்துறை கண்டறிந்தது.
இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை. மாறாக எலிகளின் நீர்துளிகளில் இருந்து இந்த நோய் மனிதர்களுக்கு தொற்றுகிறது. 1950ஆம் ஆண்டுகளின் முன்பு கொரியப் போரின் போது வேறுபட்ட ஹன்டா வைரஸ் பரவியது. இதில், 3000 க்கும் அதிகமான துருப்புகள் பாதிக்கப்பட்டு 12 சதவீதம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இன்புளுயன்சா வைரஸ் (Influenza)
இந்த வைரஸ் பரவும் நேரத்தில் உலகளவில் 5,00,000 பேர் வரை உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாகவே ஒரு வைரஸில் திரிபு(Mutation) ஏற்படும் போது அந்த வைரஸ் வேகமாக பரவ தொடங்கும். அதில் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.
அதிக உயிர்களை பலிவாங்கும் வைரஸாக கருதப்படும் இன்புளுயன்சா 1918 ஆம் ஆண்டில் பரவ தொடங்கியதில் உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் நோய்வாய்ப்பட்டனர். இதில், 5 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
டெங்கு (Dengue)
டெங்கு வைரஸ் 1950 ல் பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்தில் கண்டறியப்பட்டது. அதன் பின், உலகின் வெப்பமண்டலம் மற்றும் மிகவெப்ப மண்டலங்கள் முழுவதும் பரவியது. உலகில் 40 சதவீத மக்கள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டுக்கு 5 முதல் 10 கோடி மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு காய்ச்சலுக்கான இறப்பு விகிதம் மிக குறைவாக இருந்தாலும், 2.5 சதவீதம் டெங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எபோலா பாதிக்கப்பட்டால் ஏற்படுவது போன்று இரத்த கசிவுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.
சில நாடுகளில் கிட்டத்தட்ட 9 முதல் 45 வயதுடையவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைக்கிறது. ஆனால், அதை பெற வேண்டியவர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ரோட்டா வைரஸ் (Rotavirus)
ரோட்டா வைரஸ் சிறு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. இதற்கு இரண்டு தடுப்பூசிகள் தற்போது கிடைக்கிறது. இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வளர்ந்த நாடுகளில் ரோட்ட வைரஸ் தொற்று அரிதாகவே காணப்பட்டாலும், வளரும் நாடுகளில் அதிக குழந்தைகள் ரோட்ட வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
சார்ஸ் – கொரோனா வைரஸ் (SARS-CoV)
இது 2002 ல் சீனாவில் கண்டறியப்பட்டது. இது கிட்டத்தட்ட 26 நாடுகளில் பரவியது. 8000 பேர் கொல்லப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்டால் காய்ச்சல், குளிர் மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகள் தோன்றுகிறது. சார்ஸ் – கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் 9.6 என மதிப்பிடப்பட்டுள்ளது.
சார்ஸ் – கொரோனா வைரஸ்-2
சார்ஸ் – கொரோனா வைரஸ்-2 மிகப்பெரிய வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். இது 2019ல் சீனா நகரான வுஹானில் கண்டறியப்பட்டது. இது மனிதர்களை பாதிக்கும் முன் வெள்ளை வௌவ்வால்களில் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வைரஸ் கொவிட்-19 என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக வயதானவர்கள் மற்றும் அடிப்படையில் நோய் உடையவர்களுக்கு பெரும் ஆபத்தை கொடுக்கிறது. பொதுவாக காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. அத்துடன், நோயின் தீவிரம் அதிகரித்தால் நிமோனியாவாக மாறுகிறது.

மெர்ஸ்
மெர்ஸ் வைரஸ் 2012 ல் சவுதி அரேபியாவிலும், 2015 ல் தென்கொரியாவிலும் பரவியது. மெர்ஸ் வைரஸ் சார்ஸ் கொ.வி மற்றும் சார்ஸ் கொ.வி-2 வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல் போன்றவை இந்த வைரஸ் தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.
மெர்ஸ் பெரும்பாலும் கடுமையான நிமோனியாகவுக்கு முன்னேறுகிறது. மேலும், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இறப்பை சந்திக்க நேரிடும். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தப்பூசி எதுவும் இல்லை.
இவை அனைத்தும் உலகில் பரவியவைகளில் கொடிய வைரஸ்கள்!
Sources:
- https://www.who.int/news-room/fact-sheets/detail/ebola-virus-disease
- https://www.cdc.gov/vhf/marburg/
- https://www.who.int/gho/hiv/en/
- https://www.who.int/news-room/fact-sheets/detail/marburg-virus-disease
- https://www.cdc.gov/vaccines/vpd/rotavirus/index.html
- https://www.who.int/news-room/fact-sheets/detail/dengue-and-severe-dengue