ஜப்பானுக்கும், தென் கொரியாவிற்கும் இடையில் இருக்கிறது ராக்கி தீவுகள். எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலைகள், கணிக்க இயலாத கிழக்குக் கடலின் சீதோஷ்ணம், திடீரென பல அடிகள் உயரும் கடல் மட்டம், வெளியுலக தொடர்பே இல்லாமல் போகும் நிலை ஆகியவற்றினால் எவ்வித பாதிப்பும் இன்றி தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார் சின் யோல். (Sin-yeol)

தென்கொரியாவைச் சேர்ந்த யோல் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தனது கணவருடன் இந்தத் தீவில் வசிக்கத் தொடங்கினார். ஆழ்கடல் நீச்சலைத் தொழிலாகக் கொண்ட யோல் உடல்நிலை குறைபாட்டால் இப்போது கடலுக்குள் செல்வதில்லை. தனது கணவர் இறந்ததற்குப் பின்னரும் தனியாகவே அங்கே வாழ்கிறார் சியோல். தற்போது அவருக்கு வயது 81 ஆகும்.
சுற்றுலாப் பயணிகள்
ராக்கி தீவுக்கூட்டங்களில் ஒன்றான டோக்டோ தீவில் (Dokdo Island) தான் யோல் வாழ்கிறார். இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் அவர்கள் அங்கே தங்குவதில்லை. யோல் மட்டுமே அந்தத் தீவின் நிரந்தர மனிதர். பருவகாலம் தொடங்கியதற்குப் பின்னர் இங்கே மழை அதிகமாக இருக்கும். கூடவே சூறைக்காற்றும் சுழன்றடிக்கும். அதனால் அக்காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தீவிற்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

தொடரும் பஞ்சாயத்து
இந்த ராக்கி தீவுகளை ஜப்பானும் தென்கொரியாவும் சொந்தம் கொண்டாடுகின்றன. தென்கொரியா சட்ட விரோதமாக இந்தத் தீவுகளைக் கைப்பற்றியுள்ளதாக ஜப்பான் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் தென்கொரியாவோ எங்களுக்கும் இந்தத் தீவிற்கும் ஆறாம் நூற்றாண்டில் இருந்து பந்தம் உண்டு என்கிறது.

பூகோள ரீதியில் இந்த தீவு கொரியாவிற்கு அருகே அமைந்துள்ளது. அதனால் தீவின் மீதான தனது கட்டுப்பாட்டையும் கொரியா அதிகரித்து வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் இந்தத் தீவில் கொரிய பாதுகாப்புப் படையினர் ரோந்து போகின்றனர்.
கொரியாவில்
தீவில் உள்ள தனது வீட்டின் புனரமைப்புப் பணிகள் முடிவடையும் வரை கொரியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசிக்க இருப்பதாக யோல் தெரிவித்திருக்கிறார். இதனைக்கண்டு பொதுமக்கள் பலரும் தீவில் குடியேற அனுமதி கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அங்கே மக்களை குடியேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை எனவும் இதனால் யோல் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது எனவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.