திருமணத்திற்கு வரன் தேடுவதே இன்றைய உலகின் மிகவும் சிக்கலான வேலை. இதில் ஆண், பெண் என இருபாலார்க்கும் எதிர்பார்ப்புகள், ஆசைகள், கனவுகள் அதிகம். சிலருக்கு பெற்றோர் மூலம் எதிர்பார்ப்புகள் கைகூடிவிடும். காதலிப்பவர்களுக்கு பிரச்சினையே இல்லை. அல்லது அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. புதிதாக காதலிக்க இருப்பவர்கள்தாம் பாவம். யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் துவங்கி, கிடைத்தால் போதும் என சோர்ந்துபோகும் நண்பர்கள் எல்லோர்க்கும் உண்டு. அப்படியானவர்களுக்குத்தான் அருள்பாலிக்கக் காத்திருக்கிறார் யுயே லாவோ (Yue Lao). தைவானில் இருக்கும் காதல் கோவிலின் மூலவர் யுயே லாவோ தான். இங்குவரும் பக்தர்களுக்கு காதல்வரம் கிடைப்பதாக தொன்றுதொட்டே நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது.

வரலாறு
சீனாவின் டாங் வம்சம் ஆட்சியில் இருந்த காலம். அரசர் தனக்கு காதல் திருமணம் தான் நடக்கவேண்டும் என யுயேவை வேண்டிக்கொண்டதாக வரலாறில் ஓரிடம் வருகிறது. அதன்பின்னர் கிங் வம்சத்திலும் இதே கதை. இதே கடவுள். இதே வேண்டுதல். யுயே இருவருக்கும் காதல் வரத்தை அளித்திருக்கிறார். அன்று விஸ்வரூபமெடுத்த நம்பிக்கை இன்றுவரை வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்த ஆசியாவிலும் மக்கள் செல்ல விருப்பப்படும் கோவில்களில் இதுவும் ஒன்று.
கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 5000 ஜோடிகள் யுயேவின் அருளால் இணைந்தார்கள் என்று கோவிலின் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இங்குவந்து காதலைப் பெற்றவர்கள் திருமணமானபின் இதே கோவிலுக்கு வந்து இனிப்புகளை வழங்குகிறார்கள்.

சிங்கிள் கடவுள்
1859 ஆம் ஆண்டிலேயே இந்தக்கோவில் கட்டப்பட்டுவிட்டாலும் யுயேவின் சிலை 1971 ல் தான் நிறுவப்பட்டது. தைவான் மக்களால் ஆரம்பத்தில் காக்கும் கடவுளாகவே யுயே நம்பப்பட்டிருக்கிறார். விஷயமே தெரியாதா? என கிளம்பி வந்த வியட்னாம் மக்கள்தான் யுயே காதல் கடவுள் என்று வரலாற்றை எடுத்துவிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. யுயே சிங்கிள். தான் சிங்கிளாக இருந்தாலும் தன்னிடம் வருபவர்களுக்கு கம்மிட்டெட் ஆக வரம் அளிக்கும் அந்த மனசுதானே கடவுள்?