இஸ்ரேல், சிரியா அருகில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் நேற்று இரவு மிக அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் நடந்துள்ளது.
ஹிரோஷிமா – நாகசாகி அணுகுண்டு வெடிப்புக்கு பிறகு இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பை மனிதர்கள் இப்போது தான் கண்டிருப்பார்கள். இதனால் பெரும் சேதமும் அழிவும் ஏற்பட்டது என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. அணுகுண்டு வெடித்தால் தோன்றும் காளான் மேகம் போல பெய்ரூட் நகரத்துக்கு மேலே காளான் மேகம் உயரும் அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது.

இதற்கு காரணம் அம்மோனியம் நைட்ரைட் எனப்படும் வேதிப்பொருள் என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். வெடித்த அம்மோனியம் நைட்ரைட்டின் அளவு 2750 டன் ஆகும். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் ஆபத்து தரக்கூடிய வகையில் 2750 டன் அளவுக்கு வேதிப்பொருளை 6 ஆண்டுகளாக அங்குள்ள துறைமுகத்தில் இருப்பு வைத்துள்ளனர் என்றும் அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
1 டன் என்பது 1000 கிலோகிராம்! 2750 என்பது 27,50,000 கிலோகிராம் ஆகும்! அம்மோனியம் நைட்ரேட் மோசமான பக்க விளைவுகளை, நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பலத்த சத்தத்துடன் இந்த குண்டு வெடிப்புநடந்ததை அந்த வீடியோக்கள் காட்டுகின்றன. மேலும், அருகில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கும் காட்சிகளும் வீடியோவில் உள்ளன. 2 கிலோமீட்டருக்கு மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. சாலைகளில் கூட பெரிய விரிசல்கள் ஏற்படும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக அந்த வெடி விபத்து உள்ளது.
இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.