வரலாற்றில் நிலை பெற்ற காதலர்கள் ரோமியோ – ஜூலியட் சிலிர்க்க வைக்கும் காதல் கதை!

Date:

இத்தாலிய நகரமான வெரோனா இரவிற்குள் கவிழ்ந்திருந்தது. காபுலத் பிரபுவின் வீட்டில் நடக்கும் இசைக் கச்சேரியை பனித்துகள் உறைந்த ஜன்னலின் வழியே பார்த்துக்கொண்டிருந்தன வானத்து நட்சத்திரங்கள். பூலோகத்திற்கு வழி தவறி வந்துவிட்ட புனித தேவதையான ஜூலியட்டின் கரங்களைக் கைப்பற்றியிருந்தான் ஆடவன் ஒருவன். அவனுடைய முகத்தை மறைத்த துணியை விலகச்சொல்லி மூன்னூறு முறை இறைவனிடம்  மன்றாடினாள் ஜூலியட். ஆகட்டும் பார்க்கலாம் என்றான் ஆண்டவன். அதுவரை தங்களைச் சுற்றி நடனம் புரிந்த கால்கள் ஓய்வின் உறைவிடத்திற்குச் சென்றும் அவன் விடவில்லை இவள் கையை.

மதுவின் மயக்கத்தில் இவள் வீனஸ் தேவதையா என்றான் ஒருவன். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அற்புதப் பூ என்றான் மற்றொருவன். ஆதி அந்தம் இல்லா பெருவெளியில், இந்த உலகத்தை தங்கள் வசமாக்கும் குறிக்கோளுடன் நடனமாடினார்கள் முக்காடிட்ட முதல்வனும் ஜூலியட்டும். கச்சேரிக்குள் காட்டாறு போலப்பரவியது அந்தச் செய்தி. மாண்டேகு வம்சத்தின் வாரிசு ஒருவனின் வருகைச் செய்தி வதந்தியில்லை என்றான் தூதுவன். கூட்டம் கலைந்தது.

நடுங்கும் குளிரில் நடந்து செல்லும் மக்களை மாடத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தாள் ஜூலியட். கரம் பிடித்தவனின் உடல் சூடு இன்னும் உள்ளங்கையில் மிச்சமிருந்தது. முக்காடிட்ட முகம் இதயத்தை இயக்கிக் கொண்டிருந்தது. மூன்றாம் பிறை எப்போது முழு நிலவாகும் என்னும்போது அவள் நெஞ்சு ஏறி இறங்கியது. இரவு தூக்கத்தின் மஞ்சம் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. வெரோனாவின் ஏதோவொரு தெருவில் அவன் தனக்காக நின்று கொண்டிருப்பான் என்ற ஜூலியட்டின் எண்ணத்தைப் பொய்யாக்கக் கூடாது என்பதற்காகவே தூரத்து இருளில் நின்று உப்பிரிகையை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ரோமியோ. கைகளை தந்தவளின் கன்னத்தை தடவாமல் வந்தது அவனை வாட்டியது. இத்தாலியக் குளிரிலும் இவனுக்கு வேர்த்தது. அங்கே சீனத்துப் பட்டு மெத்தையில் தலையணையோடு போர் புரிந்தாள் புனிதி. இருவரும் தூக்கத்தைத் தொலைத்தார்கள்.

வலிய மனிதர்களின் கட்டளைக்கு காதல் என்றுமே கதவு திறந்ததில்லை. உள்ளங்கள் இடம் மாறுவதற்கு முகங்களே அவசியம் இல்லாதபோது முகவரி எதற்கு? காபுலத்தின் பரம வைரியான மாண்டேகுவின் மகன் ரோமியோ கனவுகளின் வழியே புது உலகத்தை சஞ்சரித்துக் கொண்டிருந்தான். ஜூலியட்டின் உதட்டோரச் சிரிப்பில் வாழ்க்கை முழுவதும் சிறையிருக்கத் தயாரானான்.

வரலாறு முழுவதும் காதல் இப்படியான வினோத முடிச்சுகளைப் போட்டவண்ணமே பயணித்திருக்கிறது. எதிரெதிர் துருவங்கள் தானே ஈர்க்கும். நெருங்க முடியாத நெருப்பு வளையத்திற்குள் இருப்பவளைத்தான் இந்தக் காதலர்கள் தேடியிருக்கிறார்கள். கடினம் தான் காதலின் முதல் படி. அதுதான் உயிரைக் கொழுத்திக் காதல் வளர்க்கிறது. கையில் சிக்காத தங்கப்பதுமை ஒன்று தனதென்று ஆகிவிட்டால் குரங்கிடம் புத்தியை கடன் வாங்குகிறான் மனிதன். சமாதானத்திற்காக ஏங்கும் சண்டைகளும், சமாதனம் தரும் சலுகைகளுக்காக தூண்டப்படும் சண்டைகளுமே காதல். கடந்து போகும் ஆயிரம் முகங்களில் அவள் முகத்தினை மட்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுபிடித்துவிட வைக்கிறது காதல்.

அடுத்தநாள் இரவு பல்லாண்டுகளுக்குப் பின்னர் வந்ததாகத் தோனியது ரோமியோவிற்கு. காற்றினும் கடுகி நடந்தான் கயல்விழியாள் வீடு தேடி. வானத்து நிலவொன்று உப்பிரிகையில் உட்கார்ந்து கொண்டிருந்தது. தனக்கானவனின் வருகை அவளுடைய சிந்தையை வதைத்தது. சுவரோரம் பதுங்கி வந்த ரோமியோவைப் பார்த்து பூக்களின் மொழியில் புன்னகைத்தாள் ஜூலியட். காட்டுக்கொடி ஒன்றின் மீது கைவைத்தே மேலேறினான் காதலன். பதட்டத்தில் துடித்துக்கொண்டிருந்த அவளது  உதடுகளுக்கு தன் உதட்டால் ஆறுதல் சொன்னான். இரவு ஆயிரம் கால்களுடன் இத்தாலியை விட்டு நீங்குவதாக இயற்கையை வாசைபாடினார்கள். காதுகளுக்கு ரகசியம் சொல்லச் சென்ற அவனுடைய உதடுகள் கன்னத்தில் கால்பதித்து  நின்றன.

இந்த ரகசிய பரிமாற்றங்கள் நாள்தோறும் நடந்தன. பகலெல்லாம் தூங்கி இரவெல்லாம் இருட்டை வெளுத்தார்கள் இருவரும். எத்தனை நாள் இந்த வேஷம் என்று மார்பில் முகம்புதைத்து அழுதாள் ஜூலியட். கொலைகார ஊரில் ஒரே நல்லவரான லாரன்ஸ் பாதிரியாரிடம் காதலைப் போட்டுடைத்தான். இரு குடும்பத்திற்கும் உள்ள பகையைத் தீர்க்க பகடை உருட்டினார் பாதிரியார். அடுத்த நாள் இரவில், நிலவும் தூங்கும் பொழுதில் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார் லாரன்ஸ்.

அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய மணமக்களைப் பார்த்து விதி சிரித்தது. இரவிற்கு மட்டுமே தெரிந்திருந்த விஷயம் காபுலத் பிரபுவின் காதுகளை எட்டியிருந்தது. காபுலத் விசுவாசி ஒருவன் ரோமியோவை வாளால் வழிமறித்தான். உயிர் அவளிடம் இருக்கும் தைரியத்தில் வாள் வீசினான் ரோமியோ. காற்றைக் கிழித்து சுற்றிச் சுழன்ற வாள் எதிராளியின் தலையை தரையில் இறக்கி வைத்ததிற்குப் பின்னரே ரோமியோவின் உறைக்குத் திரும்பியது. கலவரக் காற்று பலமாக வீசியது.

ரோமியோவை நாடு கடத்த உத்தரவிட்டான் காபுலத். காலம் கனியும் வரைக் காத்திரு என லாரன்சும் கண்ணசைக்கவே உடலின் பிரிவை ஒப்புக்கொண்டான். தீவு ஒன்றில் ஜூலியட்டின் நினைவுகளோடு தனித்து விடப்பட்டான் ரோமியோ. வீட்டில் சிறைபட்டாள் ஜூலியட். கல்யாணத்தைப் பற்றி பேச்செடுத்தான் காபுலத். பாரிஸ் என்னும் ஆண்மகனை ஊருக்கு அழைத்து வந்தான்.

உண்மை ஓய்வெடுக்கச் செல்லும்போது சூழ்ச்சி விழித்துக் கொள்கிறது. பரபரக்கும் கல்யாண ஏற்பாடுகளை கண்ணீரோடு பாதிரியாரிடம் விவரித்தாள் ஜூலியட். சிக்கலைத் தீர்க்க தன்னிடம் மருந்து இருக்கிறதென்றார் அவர். பாட்டிலில் பத்திரப்படுத்திய விசேஷ விஷம் ஒன்றினை அவள் கையில் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு மட்டுமே மரணத்தைத் தரும் அற்புதத்தை மேலாடையில் மறைத்துக்கொண்டாள் ஜூலியட். விழாகோலம் பூண்டது காபுலத் வீடு. விடிந்தால் கல்யாணம். வான வேடிக்கைகள் சந்திரனுக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. யுகங்களாய் நீண்ட இரவின்  விளிம்பில் கண்திறந்தான் கதிரவன். ஜூலியட்டின் தூக்கம் நிரந்தரமானது என்று காலையில் அலறினாள் தோழி ஒருத்தி. வெரோனா வெறிச்சோடியது. பூங்கொத்துகளை அவிழ்த்து மலர்வளையம் தயாரித்தார்கள். ஜூலியட்டின் மரணத்திற்குக் காரணம் காபுலத்தின் பாவப்பட்ட பகைதான் என வேரோனாவின் வாய்கள் முணுமுணுத்தன.

அங்கே தீவில் பாறைகளில் அவளை ஓவியமாக வரைந்தால் ஒருவேளை வலிக்குமோ என தன்னுடம்பில் கிறுக்கினான் ரோமியோ. இன்பத்தை மட்டுமே அளித்த இரவுகள் இப்போது தூரதேசம் போயிருப்பதாகத் துடித்தான். முழு விவரத்தையும் ரோமியோவிடம் சொல்ல பாதிரியார் பயணித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரோமியோவின் நண்பன் ஒருவன் ஜூலியட் மண்ணுலகைத் துறந்தாள் என அரைகுறை சேதியிட்டான் ரோமியோவிடம்.

வாழ்வதற்கான தகுதி நேற்றிரவே தன்னைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்த ரோமியோ குதிரையில் புறப்பட்டான். தேவதையின் திருக்கால்களில் தன்னுயிர் போகவேண்டும் என கொடும் விஷம் ஒன்றினை வாங்கினான் வழியில். குதிரையின் குளம்பில் தீப்பொறி பறக்க வேரோனாவிற்கு வந்துசேர்ந்தான். கல்லறைத் தோட்டத்தில் விதைக்கப்பட இருந்த ஜூலியட்டின் உடலைக் கண்டான். தடுக்கவந்த வீரர்களின் விலா எலும்புகளை உடைத்தெறிந்தான். வெண்ணிற உடையில் இருந்தவளின் உடலெங்கும் முத்தமிட்டான். அவள் கன்னத்தை கண்ணீரால் நனைத்தான். துக்கம் அறிவிற்குத் திரை போட்டது. பதுக்கிவைத்த விஷத்தை ஒரே மிடறில் குடித்தான்.

அவள் இனி எப்போதும் தனக்கில்லை என்பது எத்தனை பெரிய துயரம். நேற்றுவரை நினைவில் இனித்த நியாபகங்கள் நாளை உயிரை வாட்டும் என்று தெளிந்த பின்னர் எடுக்கப்படும் சாதாரண முடிவைத்தான் ரோமியோவும் எடுத்தான். ஆயுள் அதிகமிருந்தும் வாழ்க்கை கசப்பது எத்தனை கொடுமை? மரணத்தின் நிழலிலாவது அவள் மடியில் இளைப்பாறலாம் என நினைத்திருப்பான் ரோமியோ.

சற்று நேரத்திற்கெல்லாம் தற்காலிக விடுப்பில் விண்வெளி சென்றிருந்த ஜூலியட் உடல் திரும்பினாள். எழுப்ப முடியாத தொலைவு சென்றுவிட்ட ரோமியோவை தன் பங்கிற்கு எழுப்பிப் பார்த்தாள். இமைக்காமல் தன்னைப் பார்க்கும் ரோமியோவின் கண்களில் கடந்த காலத்தைத் தெரிந்துகொண்டாள். குற்றவுணர்ச்சி பெரும் வேகத்துடன் பிரவகித்தது. அவனுடைய உதடுகளில் முத்தமிட்டு எச்சிலில் இருக்கும் விஷத்தை இரவல் கேட்டாள். ஒருதுளி மிச்சமில்லாமல் உண்டிருந்தான் ரோமியோ. தாளாத அழுகையிலும் தன்னருகே கிடந்த வாளினை எடுத்தாள். நெஞ்சில் குறிவைத்தவள் ஏனோ தயங்கி வயிற்றில் பாய்ச்சினாள் வாளை. அற்ப மனிதர்களின் அதிகாரம் செல்லுபடியாகாத காதல் கோட்டைக்கு குடியேறியது இந்த இளம் ஜோடி.

இன்றும் எத்தனையோ ரோமியோவும் ஜூலியட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனில் இந்த உலகில் காபுலத்திற்கும், மாண்டேகுவிற்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. காதலர்களைப் பிரித்து விட்டதாய் அவர்கள் நினைத்தாலும் காலம் அந்தக் காதலர்களை பெயரளவில் கூட பிரிப்பதில்லை. இன்றும் ரோமியோ தனியாகவோ ஜூலியட் தனியாகவோ அழைக்கப்பட்டதில்லை. நேற்று அல்ல, இன்று அல்ல, என்றும் அவர்கள் ரோமியோ – ஜூலியட் தான்.

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!