கோதிக் மறுமலர்ச்சியின் போது ஏற்பட்ட கட்டிடக்கலை நுணுக்கங்களையும், சிற்ப வடிவமைப்பில் நிகழ்ந்த அற்புதங்களையும் தெரிந்துகொள்ள இந்த உலகத்தில் மிச்சமிருக்கும் ஒரே சாட்சி ஹங்கேரியின் பாராளுமன்றக் கட்டிடம் மட்டுமே. வருடத்திற்கு சுமார் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தக் கட்டிடத்தை பார்வையிடுகின்றனர். ஐரோப்பாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாக ஹங்கேரி இருப்பதற்கும் இந்தக் கட்டிடம் மிக முக்கிய காரணமாகும். நூற்றாண்டு கால வரலாற்றை சுமந்து பிரம்மாண்டமாய் நிமிர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடத்தில் 800 க்கும் அதிகமான வேலையாட்கள் பணிபுரிகின்றனர்.

பல அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்தக்கட்டிடத்தை வடிவமைத்தவர் இம்ரே ஸ்டெய்ண்டில் என்னும் புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர் ஆவார். 1904 ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் திறக்கப்படும்போது இம்ரேவின் கண்பார்வை பறிபோயிருந்தது தான் வரலாற்றுச் சோகம்.
1885 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கட்டடத்தின் வேலைகள் 20 வருடங்களுக்கு நீடித்தன. ஹங்கேரி மொழியில் இந்த கட்டிடம் Országház என்று அழைக்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் நாடாளுமன்றம் என்பதாகும். மன்றம் கூடும் சமயம் தவிர்த்து மற்ற நேரங்களில் பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தக் கட்டிடம் முழுவதும் மொத்தம் 365 கோபுரங்கள் உள்ளன. வருடத்தில் உள்ள எல்லா நாட்களிலும் கட்டிடமானது இயங்கும் என்பதை உணர்த்தவே இவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிரீடம்
12 ஆம் நூற்றாண்டிலிருந்து 50 க்கும் மேற்பட்ட மனிதர்களை மன்னர்களாக்கிய புகழ்பெற்ற ஸ்டீபன் கிரீடம் பொதுமக்களின் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. பைசாந்தியர்களின் காலத்தில் உபயோகிக்கப்பட்ட கிரீடங்களில் இரண்டு மட்டுமே தற்போது இந்த உலகத்தில் இருக்கிறது. புதாபெஸ்ட் நகரத்தில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தில் மற்றொன்று கிரீடம் வைக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டம்
உலகின் மிகப்பெரிய நாடாளுமன்றக் கட்டிடங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தினை இந்தக் கட்டிடம் பெறுகிறது. 18,000 சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் இதில் மொத்தம் 691 அறைகள் உள்ளன. இந்தக் கட்டிடத்திற்குள் நுழைவதற்கான வாயில்கள் மட்டுமே 28 இருக்கிறதென்றால் இதன் பிரம்மாண்டத்தை கற்பனை செய்துபாருங்கள்.

ஹங்கேரியின் கடும் குளிர்காலத்தில் இருந்து இந்தக்கட்டிடத்தின் பணியாட்களைக் காப்பதற்கு மிகப்பெரிய திட்டம் ஒன்றினையும் ஸ்டெய்ண்டில் வடிவமைத்திருக்கிறார். அதாவது கட்டிடத்தின் கீழ் பகுதியிலிருந்து எல்லா பகுதிக்கும் வெப்ப ஆவியை எடுத்துச்செல்ல குழாய்களை பதித்திருக்கிறார். எல்லா பகுதியையும் வெப்பமாக வைத்துக்கொள்ள இந்த உக்தியானது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோடைகாலத்தில் பனிக்கட்டிகளை கட்டிடத்தின் கீழே கொட்டி பனிக்காற்றை பரவச் செய்வார்களாம்.

நினைவுச் சின்னம்
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின் போது இந்தக் கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சியிலும் பெரும்பான்மையான பகுதிகள் சிதலமடைந்தன. அதன்பிறகு தான் இந்தக் கட்டிடத்தை அரசாங்கம் புதுப்பித்து கட்டியிருக்கிறது. ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இந்த கட்டிடத்தைக் காண விதிக்கப்படும் கட்டண முறை சற்றே வித்தியாசமானது. ஐரோப்பிய யூனியனை சேராதவர்களுக்கு 21 டாலரும், ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் மக்களுக்கு 8.40 டாலரும் கட்டணமாக விதிக்கப்படுகிறது. மாணவர்களாக இருந்தால் அதுவும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவராக இருந்தால் கட்டணம் 11 டாலர்கள் ஆகும். 4.50 டாலர்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
