இந்தோனேசிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. லயன் ஏர் (Lion Air) விமான நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 188 பேர் இருந்துள்ளனர் ( 178 பெரியவர்கள், 1 குழந்தை, இரண்டு கைக்குழந்தைகள், 2 விமானிகள், 5 விமானப் பணியாளர்கள்).

ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம், இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் (Jakarta ) இருந்து பன்ங்கால் பினாங் (Pangkal Pinang) நகரத்துக்குச் சென்று கொண்டிருந்தது.
விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13 – வது நிமிடத்தில், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. காலை 6.33 மணியளவில் விமானம் கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்பு துண்டிக்கப் பட்ட சிறிது நேரத்திலேயே இழுவைப் படகு ஒன்று, விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பதைப் பார்த்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சற்று முன் விமானம் விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசியத் தேடுதல் மற்றும் மீட்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். விமானத்தில் பயணித்த 189 பேரும் விபத்தில் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்தோனேசியா ஆசியக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய தீவுக்கூட்டம். ஏராளமான சிறு தீவுகள் நிரம்பிய இந்த நாட்டின் உள்நாட்டுப் போக்குவரத்து பெரிதும் விமானங்களையே நம்பியுள்ளது. இதனால் இந்த விமான விபத்து மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.