அந்தமான்-நிக்கோபர் தீவுகளில் உள்ள மர்மங்கள் நிறைந்த நார்த் சென்டினல் தீவுக்கு (North Sentinel Island), அங்கு வாழும் பூர்வீக பழங்குடி மக்களைச் சந்திக்க அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ் (26) சென்றார். வெளியுலகத் தொடர்பை விரும்பாத அந்த பழங்குடி மக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தான் உலக ஊடக கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ஜான் ஆலன் அங்கு செல்ல உதவிய ஏழு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்டினல் பழங்குடிகள்:
அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவுதான் வடக்கு சென்டினல் தீவு. அந்தமானின் மக்கள் குடியிருப்புகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள இத்தீவு பவளபாறைகளால் சூழப்பட்டுள்ளது.
இந்த தீவில் வசிக்கும் சென்டினல் பழங்குடியினர் சுமார் அறுபதாயிரம் ஆண்டுகள் பழமையான இனத்தவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அருகில் இருக்கும் தீவு மக்களோடு கூட தொடர்பில் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது கற்கால மனிதர்களைப் போல இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்கின்றனர். இவர்களின் மொழி அருகில் இருக்கும் தீவினருக்கு கூட தெரியாதாம். அருகில் உள்ள தீவுகளில் பேசப்படும் மொழிகளாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இவர்களை பற்றிய ஒரு பரவலான வதந்தி இவர்கள் நரமாமிசம் உண்பார்கள் என்பது! ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
சென்டினல் தீவில் விவசாயத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர்கள் மீன்பிடிப்பது, வேட்டையாடுவது, காட்டுத் தாவரங்களை சேகரிப்பது போன்றவற்றை செய்கிறார்கள். மரப்பட்டையை ஆடையாக அணிகிறார்கள்.
தாக்குதல்கள்:
வெளி உலக தொடர்பை விரும்பாத இவர்கள் வெளி ஆட்களை அச்சம் காரணமாக அம்பெய்தி தாக்குகின்றனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பிறகு இவர்கள் நிலையை அறிய சென்ற போது இந்திய ஹெலிகாப்டர்களையும் தாக்கியுள்ளனர். ஹெலிகாப்டரை நோக்கி சுமார் 100 அடி உயரம் கூட அம்பு எய்திருக்கிறார்கள்.
2006 ஆம் ஆண்டு கூட அங்கு சென்ற இரு மீனவர்கள் அவர்களால் கொல்லப்பட்டனர். இந்திய கடற்படையினர் மீனவர்களின் உடல்களை மீட்கச் சென்ற போது அவர்கள் மீதும் சென்டினல் பழங்குடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மீட்பு பணிகளுக்கு செல்வது கூட சிக்கலாக உள்ளது. மேலும் இவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருப்பதால் தான் இவர்களை நெருங்க முடியவில்லை.
சென்டினல் பழங்குடி மக்களின் எண்ணிக்கை முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டே கணக்கிடப்படுகிறது.

1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி 117 பேர் என்று இருந்த எண்ணிக்கை 2011ல் 15 என்று சொல்லப்படுகிறது. அங்கு எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்று கூட அறிய முடியவில்லை என்பதே உண்மை. பிரிட்டிஷ் காலணியினரால் ஒரு முறை ஆறு சென்டினல் பழங்குடியினர் 6 பேர் கடத்தப்பட்ட போது இருவர் வெகு விரைவில் இறந்துவிட்டனராம். இதற்கு காரணம், அவர்களின் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி என்று நம்பப்படுகிறது. இதுவரை கடந்த 1991-ம் ஆண்டு இந்திய மானுடவியல் துறை சார்பில் சென்ற குழுவை மட்டும் சென்டினல் மக்கள் தாக்கவில்லை.

அவர்களைப் பாதுகாக்கும் விதமாக 2017-ல் மத்திய அரசு சென்டினல் தீவிற்கு செல்வதை தடை செய்தது. மேலும் சென்டினல் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் வெளியிட தடை விதித்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அங்கு செல்வதற்கு இருந்த தடையை விலக்கியது.
ஜான் வழக்கு
இந்த தீவுக்கு தான் ஜான், எந்த முன் அறிவிப்புமின்றி தனியாக சென்றுள்ளார். அவருக்கு உதவி செய்த மீனவர்கள் அவரை படகு மூலம் தீவுக்கு அருகில் இறக்கிவிட்டதாகவும், அடுத்த நாள் அவரை தேடும் போது பழங்குடியினர் அவரை இழுத்துச் சென்று கடற்கரை மணலில் புதைத்ததைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டிஜிபி தீபேந்திர பதக் “ஜான் ஏழு மீனவர்களின் உதவியோடு சட்ட விரோதமாக சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார். ஜான் ஒரு கிறிஸ்துவர் மற்றும் கிறிஸ்தவ மதபோதகர். மேலும் அவர் 2015 மற்றும் 2016 ல்அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சென்று இருக்கிறார். ஏற்கனவே அவர்களை சந்திக்க முயற்சித்தும் உள்ளார்” என்று கூறி உள்ளார்.
ஜான் தனது டைரியில் அவருடைய முதல் பயணத்தின் போது “என் பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று அவர் பழங்குடிகளைப் பார்த்து கத்தியதாகவும், ஒரு பழங்குடி எறிந்த அம்பு அவரது பைபிளை துளைத்ததாகவும் எழுதி இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அவரது குடும்பத்துக்கு அவர் அனுப்பிய செய்தியில் ஏசுவை அந்த மக்களுக்கு பிரகடனப்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்டதாக தெரிகிறது.
பழங்குடிகளை நெருங்குவது ஆபத்து என்பதால் இப்போது அவரது உடலை மீட்க அதிகாரிகள் சென்டினல் பழங்குடியினர் பற்றி தெரிந்த மானுடவியலாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பழங்குடி நல அலுவலர்கள் போன்றோரின் உதவியை நாடி உள்ளனர்.