ஆர்டிக் (Arctic) என்பது பூமியின் வட முனையில் அமைந்துள்ள கடுமையான குளிர் உறைய வைக்கும் பனி நிறைந்த பனிப் பிரதேசமாகும். ஆர்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் மட்டம் உயர்வதுடன் உலகம் முழுவதும் பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஆர்டிக் பகுதியை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பருவநிலை மாற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் எனவும் எச்சரிக்கின்றனர்.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பனித்தகடுகள் ஆர்டிக் பகுதியில் உள்ளவை தான். இது கிரீன்லாந்தை பாதி மூடும் அளவுக்குப் பெரியது. காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் தட்பவெப்பநிலை காரணமாக இந்தப் பகுதியில் உள்ள பனித்தகடுகள் மற்றும் பனிப்பாறைகள் அனைத்தும் உருகிக் கடலில் கலந்துகொண்டிருக்கின்றன. இந்த பகுதிகளில், சமீபகாலமாக வெப்பநிலை வழக்கத்தைவிட வேகமாக அதிகரிப்பதால், உருகும் பனித்தகடுகளின் அளவும் அதிகரித்தவாறு உள்ளது. 2000-ஆம் ஆண்டிலிருந்து, ஆர்டிக் பகுதி மற்ற பகுதிகளை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.


ஆர்டிக், போலார் கரடி மற்றும் வால்ரஸ் இவற்றின் வாழ்விடமாக மட்டுமல்லாமல் வட துருவத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. பனியானது குளிர்காலத்தில் உறைந்து கோடையில் உருகிவிடும். கடந்த 42 ஆண்டு செயற்கைக்கோள் பதிவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டில்தான் இதுவரை இல்லாத அளவில் மிகக் குறைவான அளவில் பனிப்பாறை பகுதிகள் இருப்பதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு (National Oceanic and Atmospheric Administration – NOAA) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 முதல், ஆர்டிக் கடல் பனி பரப்பளவு பத்தாண்டுகளுக்கு சுமார் 13% குறைந்து வந்துள்ளது. சமீபத்தில், சைபீரியாவில் பனிப்பாறைகள் பெரும்பகுதி உருகியது, அங்கு வெப்பநிலை சராசரியை விட 5 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாதிப்புகள்:
1. தட்பவெப்பநிலை: ஆர்டிக் மற்றும் அண்டார்டிகா ஆகியவை உலகின் குளிர்சாதன பெட்டியாகும். வெண்மையான பனித் தகடுகளால் மூடப்பட்டிருப்பதால் அவை வெப்பத்தை விண்வெளியில் பிரதிபலிக்கின்றன. தற்போது குறைவான அளவில் பனிப்பரப்பளவு இருப்பதால், சூரிய வெப்பமானது குறைவான அளவே பிரதிபலிக்கப்படுகின்றது. இதனால் உலகளவில் மிகவும் தீவிரமான வெப்ப அலைகள் உருவாகக்கூடும்.
2. கடலோர மக்கள்: 1900-ஆம் ஆண்டிற்கு பிறகு கடல் மட்டம் சராசரியாக 7-8 அங்குலங்கள் உயர்ந்துள்ளது. மேலும் அது மோசமடைந்து வருகிறது. இதன்மூலம், கடலோர நகரங்களுக்கும் சிறிய தீவுகளுக்கும் கடல்கள் ஆபத்தை விளைவிக்கும்.
3. உணவு பற்றாக்குறை/விலை: காலநிலை மாறுபாடுகளால் உண்டாகும் நிலையற்ற வானிலை மாற்றங்களால் பயிர்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடும். இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு உணவுப் பொருட்களின் விலை நெருக்கடிக்குள்ளாகும்.
4. கப்பல் போக்குவரத்து: பனி உருகும்போது, ஆர்டிக்கில் புதிய கப்பல் வழிகள் கிடைக்கும், ஆனால் இது பாதுகாப்பானதாக இல்லாமல் ஆபத்தானதாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். கப்பல்கள் விபத்துக்கள் மற்றும் எண்ணெய்க் கசிவுகளை சந்திக்க நேரிடும்.
5. வனவிலங்குகள் பாதுகாப்பு: பனிப்பாறை மற்றும் பனித்தகடுகளின் பரப்பளவு குறைவாகும்போது, உயிர்வாழ்வதற்காக அதைச் சார்ந்திருக்கும் விலங்குகள் அதன் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும் அல்லது அழிய நேரிடும். துருவ கரடிகள், வால்ரஸ்கள், ஆர்டிக் நரிகள், பனி ஆந்தைகள், கலைமான் மேலும் பல விலங்குகள் பாதிக்கப்படும். இவர்களின் வாழ்விடம் பாதிக்கப்படுவதால், வேறு இடங்களுக்கு இடம்பெயர்கையில் மனித-விலங்குகள் மோதல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். துருவ பிரதேச விலங்குகளை சார்ந்து வாழ்கின்ற விலங்குகளும் அதனால் கண்டிப்பாக பாதிப்படையும்.
6. நிரந்தர பனிக்கட்டிகள்: ஆர்டிக் பகுதியில் நிரந்தரமாக உறைந்திருக்கும் பனிப்பாறைகளில், காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கும் கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் பெரிய அளவில் சேமிக்கப்பட்டிருக்கும். பனி உருகுவதால் வெளிவரும் மீத்தேன் மூலம் வெப்பநிலை உயரும். இதனால் எஞ்சியிருக்கும் பனிப்பாறைகளும் உருகும் வேளையில், மீண்டும் மீத்தேன் வாயு வெளிவரும். இதனால் மேலும் தட்பவெப்பநிலை மோசமாகி பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.
2020-ஆம் ஆண்டின் 4-ல் 3 பங்கு காலத்தை கொரோனா வெற்றிகொண்ட சூழ்நிலையில், தற்போது பூமியின் ஒரு பக்கம் பனிப்பாறைகள் அதிகளவில் உருகிக்கொண்டிருக்க, மறுபக்கம் அதிக வெப்ப அலை வீசி வருகிறது. காலநிலை மாற்றமானது பல்வேறு வகைகளில் இன்னும் பல நம்பவே முடியாத பாதிப்புகளை எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகிறது. 2021-எப்படி இருக்கப்போகின்றது என்பது இயற்கையின் கைகளிலேயே உள்ளது. இயற்கையை மிஞ்சிய சக்தி ஏதும் இல்லைதானே.!
Also Read: காலநிலை மாற்றம்: பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நடவேண்டும் தெரியுமா?