இயேசு பெருமான் இந்த உலகில் பிறந்த நாளே கிறிஸ்துமஸ் என்று கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தினை அறிவித்தது கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவராக இருந்த முதலாம் ஜூலியஸ்தான். இயேசு பிறந்த ஆண்டு குறித்தும் தேதி குறித்தும் பல்வேறு குழப்பங்கள் நீடித்துக்கொண்டிருந்த வேளையில் அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸாக கொண்டாட கட்டளை பிறப்பித்தார். அன்றுமுதல் ரோமன் கத்தோலிக்கத்தைச் சேர்ந்த மக்கள் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மாதிரியான நம்பிக்கைகள் இருக்கின்றன. அத்தோடு கிறிஸ்துமஸ் தேதியும் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. அல்பேனியாவில் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ரஷியா, உக்ரைன், எத்தியோப்பியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் ஜனவரி 7 இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தின்போது வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்ளும் வழக்கம் முதன்முதலில் பின்பற்றப்பட்டது இங்கிலாந்தில்தான். அலபாமாவில் தான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.
கொண்டாடும் முறைகள்
ஸ்காண்டி நேவியாவில் பறவைகளுக்கு விருந்தளித்து கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடுகிறார்கள். அன்றைய நாளில் கோதுமைக் கதிர்களை தூண்போல கட்டிவைத்து பறவைகளுக்காகக் காத்திருப்பர்.
அயர்லாந்து நாட்டு மக்களின் கிறிஸ்துமஸ் வழக்கம் நம்மை கண்ணீர் விடச்செய்து விடும். கிறிஸ்துமஸின் இரவுகளில் வீட்டில் உள்ள ஜன்னல்களில் விளக்குகளை எரிய விடுவார்கள். யோசேப்பும் மரியாவும் பிரசவ நேரத்தில் இடமில்லாமல் தவித்ததைப் போல் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக யார்வேண்டுமானாலும் எங்களது வீட்டிற்கு வரலாம் என்பதன்பொருட்டு இந்த விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

போலந்துக்காரர்கள் விரதம் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மெக்சிகோ நாட்டினர் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக உறியடி விழாவை நடத்துகின்றனர். இதற்கு பினாடா உடைப்பு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இத்தாலிய நாட்டினரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொஞ்சம் வித்தியாசமானது. அங்குள்ள பசுக்களை அலங்கரித்து அவற்றிற்கு ராஜ மரியாதை செலுத்துவார்கள் இத்தாலியர்கள். ஆயிரம் வழிகளில் கிறிஸ்துமஸ் தினமானது கொண்டாடப்பட்டாலும் அன்பின் மகத்துவத்தை இந்த பூமிக்கு உணர்த்தும் செயலாகவே இந்தப் பண்டிகை நினைவுகூறப்படுகிறது.