காதலர் தினம் வந்தால் பெற்றோரையும் நண்பர்களையும் ஏமாற்றிவிட்டு காதலி/காதலனை சந்திக்கப் போவார்கள் காதலர்கள். ஆனால் சீனாவிலோ நிலைமை தலைகீழ்… காதலர் தினத்தன்று புது ஆடை உடுத்தி வேலைக்குப் போகிறேன் என்று பெற்றோரை ஏமாற்றிவிட்டு மனநல மருத்துவமனைக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர் சீன இளைஞர்கள்.
ஒரு குழந்தை கொள்கை
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பொருட்டு 1979 ஆம் ஆண்டு சீனாவில் கொண்டுவரப்பட்டது தான் இந்த ஒரு குழந்தை கொள்கை. அதன்படி இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு அபராதம், அரசு மானியம் ரத்து, சிறைவாசம் என தண்டனை வழங்கப்பட்டது. இதில் ஒரு சில இன மக்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பெற்றனர். அதாவது இவர்கள் மட்டும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் முதல் குழந்தை பெண்ணாக இருப்பின்.

கணக்கெடுப்பு
சுமார் 30 ஆண்டுகள் இருந்த கட்டுப்பாடுகளால் சீனாவில் ஆண் மற்றும் பெண்களுக்கு இடையேயான விகிதாச்சாரம் மோசமானது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களிலும் இதுதான் நிலைமை. தொடர்நது குறைந்த திருமணப் பதிவுகளை கணக்கிட்டபோது இக்குறை கண்டறியப்பட்டது. 2013 ஆண்டுதான் இக்கொள்கை இருகுழந்தை கொள்கையாக மாற்றப்பட்டது. விளைவு, இன்று வரை சீன இளைஞர்கள் எழவு காத்த கிளியாக இருந்துவருகின்றனர். ஏழ்மையான மற்றும் கல்வியறிவு அற்ற குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் நிலை இன்னும் மோசம். ஆண்களுக்குள் கடும் பொறாமை மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடத்தல்
விளைவானது சீனாவில் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள நாடுகளையும் பாதித்தது. சீனா, மியான்மார், வடகொரியா, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து பெண் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. அக்குழந்தைள் சீனாவில் விற்கப்படுகின்றனர் திருமணத்திற்காக. மேலும் இந்த இடைப்பட்ட காலங்களில் நிகழ்ந்த சட்டவிரோத கருத்தடை, பெண் குழந்தை மீதான விருப்பமின்மையும் இதற்கு காரணமாகும்.

பெண்குழந்தைகளை நேசிக்கக் கற்றுக்கொள்ளாத சமுதாயம் ஒருபோதும் வாழாது. இதையே இயற்கை எல்லா வழிகளும் நிரூபித்து வருகிறது.