உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சேதமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆம். கட்டுமானங்களில் பல சாதனைகளைப் படைத்துவரும் அதே சீனாவில் தான் இந்த நிலைமை. சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் கவரப்படும் இந்த நீண்ட சுவற்றைப் பார்க்க வருடத்திற்கு 10 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர். தற்போதைய நிலையில் சீனப் பெருஞ்சுவர் 30% அழிந்திருக்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சீனப் பெருஞ்சுவரின் பாதிப்பு, கவலை அளிப்பதாக யுனெஸ்கோ (UNESCO) தெரிவித்துள்ளது.
1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
பெருஞ்சுவரின் நீண்ட வரலாறு
சீனப் பெருஞ்சுவர் ஒரே அரசரால் கட்டப்படவில்லை. சீனாவை ஆண்ட கின், ஹான் மற்றும் மிங் என்னும் மூன்று தலைமுறை அரசர்களால் பல்வேறு காலக்கட்டதில் கட்டப்பட்டு, பின்பு இணைக்கப்பட்டது. மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்கத் தான் இதனைக் கட்டினார்கள் சீனர்கள்.
- பெருஞ்சுவரின் கட்டுமானத்தில் முக்கியப் பங்கு சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹூவாங்கயே (Qin Shi Huang) சேரும். இவர் கட்டிய பகுதிகள் (220-206 BC) பெரும்பாலும் மண், கற்கள் மற்றும் மரம் கொண்டு 7,300 கி. மீ வரை கட்டப்பட்டது.
- சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படும் சுவரின் பெரும்பாலான பகுதிகள் மிங் (Ming Dynasty) ஆட்சி காலத்தில் (1368-1644) சுமார் 6300 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டவையாகும். மிங் காலத்தில் சுவரைக் கட்ட செங்கற்கள், கருங்கற்கள், ஓடுகள் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
- பெருஞ்சுவர் யாலு நதியில் உள்ள கொரியாவுடனான எல்லையில் இருந்து கோபி பாலைவனம் வரை 8,851.8 கி.மீ வரை நீண்டுள்ளது.
- சுவரின் உயரம் 16 முதல் 29 அடியாகும். சுவர்களுக்கு இடைப்பட்ட அகலம் 20 அடி. சில இடங்களில் 15 அடியாகவும் இருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு சீனா வெளியிட்ட அறிக்கையின்படி சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் 21,196 கி.மீ ஆகும்.
- 1987 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.

காரணங்கள்
2000 வருடம் பழமையான சீனப் பெருஞ்சுவர் பாதிப்படைந்ததற்கு பருவநிலை மாற்றமும் இயற்கைச் சீற்றங்களும் ஒரு முக்கியக் காரணமாகும். அங்கு ஏற்படும் மணற் புயல்களால் சுவரின் கற்களில் அரிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. மழை மற்றும் வெயில் காரணமாக கோபுரங்கள் பல விழுந்துவிட்டன. இன்னும் பல விழும் நிலையில் உள்ளன.
2003 ஆம் ஆண்டு வரை சீன அரசும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இதற்காக எடுக்கவில்லை. பாதிப்புகள் குறித்து முறையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பிறகு புதுப்பித்தல் பணி ஆங்காங்கே நடைபெற்றாலும் முழுமையாக நடைபெறவில்லை.
மேலும் சீனாவின் வடக்கு மாகாணத்தில் வாழும் கிராம மக்கள் வீடு கட்ட, இச்சுவரில் உள்ள செங்கல் மற்றும் கற்களை திருடிச் செல்கின்றனர். அதோடு புராதான சின்னமாக விளங்குவதால் அதன் கற்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கவும் செய்கின்றனர். இவ்வாறு சேதப்படுத்துவோருக்கு அபராதம் வழங்கப்பட்டாலும் முழுவதும் தடுக்க முடியவில்லையாம். உண்மையில் இந்த சுவரில் எவ்வளவு பகுதிகள் எஞ்சி உள்ளது என்று கூட கணிக்க முடியவில்லை சீன அரசால்.

சீர் செய்யுமா சீனா ?
இப்போது சீனப் பெருஞ்சுவரைப் பாதுகாக்க சீன அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே சுவரின் நிலைமை காரணமாக பல பகுதிகளுக்கு பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிக்கலான கட்டுமானம் என்பதால் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி சுவரின் பல இடங்களை முப்பரிமாண புகைப்படங்கள் எடுத்துள்ளது சீன அரசு. இன்டெல் நிறுவனத்தின் Falcon 8+ ட்ரோனை சீனா இதற்காகப் பயன்படுத்துகிறது. இந்தப் படங்களின் உதவியோடு சேதத்தை சீர் செய்ய ஆரம்பித்துள்ளது.
உலகிலேயே நீளமான பாலத்தை அண்மையில் திறந்த சீனா, பெருஞ்சுவர் விஷயத்தில் முன்பே கவனம் செலுத்தியிருக்கலாம்.