லண்டன் நகரத்திலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் (Dusseldorf) நகரத்திற்கு கிளம்பிய பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானமான BA3271 பாதை மாறி ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறது. விமானம் பறக்கும் பாதையை வடிமைத்ததில் ஏற்பட்ட சிக்கல் தான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எடின்பர்க் விமான நிலையத்திலிருந்து பின்னர் மீண்டும் டஸ்ஸல்டார்ப் நகரத்திற்கு பறந்திருக்கிறது இந்த விமானம்.

சிறு பிழை
BA3271 விமானம் BA CityFlyer என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தது. ஜெர்மனியின் WDL Aviation நிறுவனம் இந்த விமானத்தை லீசுக்கு எடுத்திருந்தது. விமானத்தின் மொத்த பராமரிப்பு இயக்கம் ஆகியவற்றை WDL Aviation நிறுவனம் தான் மேற்கொள்கிறது. விமானத்தின் பாதையை வடிவமைப்பதில் நேர்ந்த சிறிய தவறினால் தான் இலக்கு மாற்றப்பட்டிருக்கிறது என WDL Aviation நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜெர்மனியில் ஏது மலை?
லண்டனில் இருந்து டஸ்ஸல்டார்ப் நகரத்திற்கு இதே விமானத்தில் பயணித்த Piotr Pomienski என்னும் மாணவர், தென் திசையில் பறக்க வேண்டிய விமானம் வடக்கு நோக்கிப் பயணிப்பதாக திரையில் தோன்றியிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறாக இருக்கும் என நினைத்து Piotr Pomienski தூங்கியிருக்கிறார். விமானம் தரையிறங்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தவுடன் ஜன்னல் வழியாக பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

அவர் பார்த்தது ஸ்காட்லாந்தின் மலைத்தொடர்களை. ஜெர்மனி முழுவதும் பெரும்பாலும் தொழிற்சாலைகள் மட்டுமே இருக்கும் என்பதால், அப்போதே Piotr Pomienski க்கு விபரம் தெரிந்துவிட்டது. அவர் அருகிலிருந்த சக பயணிகளிடம் விஷயத்தை தெரிவிக்க குழப்பம் அதிகரித்திருக்கிறது. இதனை பணிப்பெண்களிடம் கேட்க கொஞ்ச நேரத்திலேயே விமானி நேரிடியாக பயணிகளிடம் வந்து பேசியிருக்கிறார்.
ஜெர்மனினு நெனச்சேன்
விமானம் தரையிறங்கிய உடனையே பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் விமானி. எல்லாம் திட்டப்படி தான் நடந்தது. நானும் ஜெர்மனிக்கு தான் விமானத்தை ஓட்டினேன். எப்படி ஸ்காட்லாந்திற்கு நாம் வழிமாறினோம் எனத் தெரியவில்லை. ஒருவேளை பாதையைத் தீர்மானிக்கும் மென்பொருளில் ஏதாவது சிக்கல் நேர்ந்திருக்கலாம். எனினும் பயணிகள் யாரும் பயப்பட வேண்டாம் இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் டஸ்ஸல்டார்ப் நகரத்திற்கு நாம் கிளம்பிவிடலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.
WDL Aviation நிறுவனமும் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.