அதிர வைத்த இந்தோனேசிய விமான விபத்து – கருப்புப் பெட்டி கிடைத்தது

0
440
indonesia plane crash

ஜெடி-610 என்ற எண்ணுடைய லயன் ஏர் விமானம் இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கால் பினாங் நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த போது உள்ளூர் நேரப்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்துப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்.

விமானத்தில் என்ன கோளாறு?

விமானி விமானத்தை இயக்கும் வேகத்தைக் காட்டும் கருவி நம்ப முடியாத நிலையில் இருந்ததாகவும், உயரத்தை அளக்கும் கருவியில் தகவல்கள், விமானி மற்றும் இணை விமானிக்கு வெவ்வேறாக காட்டியதாகவும் விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த ஆரம்பகட்டத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Credit : NY Times

முன்னதாக லயன் ஏர் முதன்மை நிர்வாக அதிகாரி, விமானம் ஜகார்த்தாவிலிருந்து பறக்கத் தயாராகும் போது விமானத்தில் குறிப்பிடப்படாத தொழில்நுட்பக் கோளாறு இருந்ததாகவும், ஆனால் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்திருந்தால் பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க மாட்டாது என அவர் தெரிவித்தார். விமானக் குழுவின் புகாரை நாங்கள் பெற்றவுடன் அது உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

போயிங் 738 மேக் 8 ரக விமானங்களில், 11 விமானங்களை லயன் ஏர் விமான சேவை நிறுவனம் இயக்கி வருகிறது. பிற விமானங்களில் இம்மாதிரியான தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.

விமானத்துக்கு என்ன ஆனது?

பங்கல் பினாங்கில் உள்ள விமானநிலையத்தில் ஒரு மணி நேரத்தில் தரையிறங்குவதாக இருந்தது அந்த விமானம். ஆனால், புறப்பட்ட 13 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு அறுந்து போனது.

விமானியும் இணை விமானியும் இதற்கு முன்பாக 11,000 மணி நேரங்கள் ஒன்றாக பயணித்துள்ளனர். விமானக் குழுவில் மூன்று பேர் பயிற்சி ஊழியர்கள் ஒருவர் தொழில்நுட்ப வல்லுநர்.

மோசமான வான் பயண பாதுகாப்பு

தீவுகள் நிறைந்த நாடான இந்தோனேசியா விமானப் பயணங்களைப் பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் அதன் விமான சேவை நிறுவனங்களின் பாதுகாப்பு மோசமான நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

லயன் ஏர் விமான சேவை 1999 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்ளூர் விமான சேவை மற்றும் தெற்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

கடந்த காலங்களில் மோசமான நிர்வாகம் மற்றும் பராமரிப்பால் 2016 – ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய வான் வெளியில் பறப்பதற்கு இந்த விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Credit : NY Times

கருப்புப் பெட்டி கிடைத்தது

இந்த நிலையில் தான், இன்று காலை அந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாவா கடலில் விமானம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதால் விரைவில் விபத்திற்கான காரணம் தெரிய வரும். ஆனால், இந்த கருப்புப் பெட்டி விமானத்தின் டேட்டாக்களைப் பதிவு செய்யும் பெட்டியா இல்லை விமானிகள் பேசிக் கொள்வதை பதிவு செய்யும் பெட்டியா என்ற தகவல் வெளியாகவில்லை. இதை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளனர் இந்தோனேசிய அதிகாரிகள்.