மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கி உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் பல வருடங்களாக முதலிடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ். தற்போது உலகையே வதைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று குறித்து கடந்த 2015ம் ஆண்டிலேயே உலக நாடுகளை எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை கவனமாக எடுத்துக்கொள்ளாததன் விளைவை இன்று உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொண்டு வருகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன்னரே அவர் இதனை எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் நம் உலகம் சந்திக்க இருக்கும் பேரழிவுகள் குறித்து பில்கேட்ஸ் தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். ஆனால் இந்த முறை வரவிருக்கும் பேரழிவுகள் ஒன்றல்ல இரண்டு. சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பில் கேட்ஸ் பேட்டியளித்திருந்தார். அதில் “கொரோனா போன்ற வேறு ஏதும் பேரழிவுகள் உள்ளதா” என பில்கேட்ஸிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பில்கேட்ஸ், தன்னுடைய கணிப்புகள் சரியானதா என்பது தெரியவில்லை என்றும், இரண்டு பேரழிவுகள் இவ்வுலகத்தை நோக்கி இருப்பதாக கூறினார்.
பருவநிலை மாற்றம்
முதலாவது பருவநிலை மாற்றம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இறந்தவர்களைவிட, ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றத்தால் அதிக அளவிலான எண்ணிக்கையில் உயிரிழக்க நேரிடும் என கூறினார்.

பயோ தீவிரவாதம்
இரண்டாவது பேரழிவு குறித்து அவர் கூறும்போது, “மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள்” எனவும் “அது பயோ தீவிரவாதம்” எனவும் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், “பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு விரும்பும் ஒருவர், ஒரு வைரஸை உருவாக்க முடியும். இயற்கையாக ஏற்படும் தற்போதைய வைரஸ் தொற்றுநோய்களைக் காட்டிலும் இது உண்டாக்கும் பாதிப்பு அதிகமாக இருக்கும்” எனவும் பில் கேட்ஸ் எச்சரித்திருக்கின்றார்.
