இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பல ஆண்டுகளாகப் பிரச்சனை நிலவி வரும் நிலையில் புல்வாமா தாக்குதல் இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தியது. இரு நாடுகளில் எந்த நாடு அதன் அணு ஆயுதங்களில் ஒரு பகுதியை போருக்கு பயன்படுத்தினாலும் அது இரு நாடுகளை மட்டும் இல்லாமல் உலகில் உள்ள எல்லா நாடுகளையும் உயிரினங்களையும் பாதிக்கும் என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புல்வாமா தாக்குதல்
கடந்த மாதம் 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், இந்திய துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
Credit: Rediff
அபிநந்தன் விவகாரம்
இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியா, காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு நிறைந்த பகுதியில் நடத்திய விமானப்படை தாக்குதலின் போது பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்தியாவின் போர் விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தி அதிலிருந்த இந்திய விமானி அபிநந்தனை கைது செய்தது.
தற்போது இந்திய வீரர் அபிநந்தனை நிபந்தனையின்றி பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதால் அணு ஆயுத போர் சாத்தியமில்லை என்றாலும், எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவியே வருகிறது.மேலும் பாகிஸ்தானில் உள்ள ஆயுதப்படைகள் கடுமையாக போரிடக்கூடியவை, எந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பதில் அளிக்கும் வகையில் தயாராக உள்ளவை என அந்த நாடு தெரிவித்துள்ளது. அதே சமயம் வலிமையான ராணுவங்களை கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவும் போருக்கு தயாரான நிலையில் தான் உள்ளது.
அணு ஆயுத வெடிப்புகள் 5 மில்லியன் டன் புகையை உருவாக்கும்!
Credit: Insidene
அணு ஆயுத போர்
இரு நாடுகளிடமும் 140 சுமார் 150 முதல் வரை அணு ஆயுதங்கள் உள்ள நிலையில் ஒருவேளை அணு ஆயுத போர் நடந்தால் அது இந்தியா பாகிஸ்தானை மட்டுமில்லாமல் உலகம் முழுவதையும் பாதிக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆம். போரின் போது குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் இரு நாடுகளுக்கு உள்ளே தான் நடக்கும் என்றாலும் விளைவுகள் கண்டிப்பாக உலகம் முழுவதையும் பாதித்து உலகமே ஸ்தம்பித்துப் போய் விடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஓசோன் அடுக்கு சேதமடைவதோடு பூமியின் காலநிலை பல ஆண்டுகளுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பயிர் விளைச்சல் மற்றும் மீன்வளம் போன்றவற்றை அதிகமாக பாதிக்கும். விளைவு உலகம் முழுவதும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உண்டாகும்.
அணு ஆயுதப் போர் குறித்து அமெரிக்க தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மைக்கேல் மில்ஸ் (Michael Mills) என்ற ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வின் முடிவு போரின் விளைவுகள் மனித இனத்தின் பேரழிவாக இருக்கும் என்கிறது.
வட கொரியா அண்மையில் நடத்திய அணு ஆயுத சோதனை ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அது போல 1000 மடங்கு சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்துள்ளன!
கதிரியக்கம்
நிலத்திற்கு அருகில் ஒரு அணு ஆயுதம் வெடித்ததும் பிரச்சனை அதோடு முடிந்து விடாது. அந்த கதிரியக்க குப்பைகள் சுமார் 100 மைல் தூரத்திற்கு பரவும். கூடவே மிகவும் அச்சுறுத்த கூடிய விஷயம் என்னவென்றால் இதனால் ஏற்படும் அதி தீவிர வெப்பம் சுற்றி இருக்கும் மொத்தத்தையும் எரித்து விடும். அதாவது ஏற்படும் அதீத தீ தீவிரமடைந்து அதற்கென ஒரு காற்று அமைப்பை ஏற்படுத்தி அதை தக்க வைத்துக் கொள்ளும். இது கனற்புயல் (Firestorm) என்று அழைக்கப்படுகிறது. அதுவும் தொழில்துறை பகுதிகள் அல்லது மக்கள் அதிகள் உள்ள இடங்களில் அணு ஆயுதம் வெடிக்கும் போது அது மிகவும் மோசமான ஒன்றாக மாறிவிடும். அணு ஆயுதத்தின் சக்தி மற்றும் வகையை பொறுத்து இந்த கனற்புயல் ஆற்றலை மீண்டும் மீண்டும் வெளியேற்றிக்கொண்டே இருக்கும்.
Credit: Real leaders
அணு ஆயுதங்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் ஒவ்வொன்றும் 1945 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஹிரோஷிமா வெடிப்பின் போது பயன்படுத்தியது போன்று சக்தி வாய்ந்தவை. அதிலும் இப்போது இருக்கும் அணு ஆயுதங்கள் அதை விட வலிமையானவை என்பதே உண்மை. எடுத்துக்காட்டாக வட கொரியா அண்மையில் நடத்திய அணு ஆயுத சோதனை ஹிரோஷிமாவில் போடப்பட்டதை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அது போல 1000 மடங்கு சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்துள்ளன. மேலும் இது போன்ற வெடிப்புகள் 5 மில்லியன் டன் புகையை உருவாக்கும்.
Credit: National interest
மிகச் சிறிய அளவிலான அணுகுண்டுகளே இந்த உலகை அழிக்கப் போதுமானது என்னும் போது போர் என்று வந்து விட்டால் நிலைமையை யோசித்து பாருங்கள். ஒருவேளை வலிமை குறைந்த குண்டுகள் என்றாலும் போடப்படும் எண்ணைக்கையை பொறுத்து விளைவுகள் நிச்சயம் அழிவை ஏற்படுத்தும்.
அணு ஆயுத போரால் ஓசோன் படலம் 20-50 சதவீதம் அழிந்துவிடும்!
கார்பன் துகள்கள்
போரின் போது ஏற்படும் கனற்புயலானது கட்டிடங்கள், வாகனங்கள், எரிபொருள் கிடங்குகள், தாவரங்கள் என எல்லாவற்றின் வழியாகவும் பரவும். இதனால் உண்டாகும் புகை பூமிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கான ட்ரோபோஸ்பியர் அடுக்கு (புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 20 கி.மீ வரை பரவி காணப்படுகிறது) வரை உயர்ந்து மேல் அடுக்கான ஸ்ட்ரோபோஸ்பியரில் (புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 80 கி.மீ வரை பரவி காணப்படுகிறது) படியும். அங்கிருந்து கருப்பு கார்பன் துகள்கள் உலகம் முழுவதும் பரவும். பொதுவாக புகையில் உள்ள துகள்களின் வாழ்நாள் ட்ரோபோஸ்பியர் அடுக்கில் ஒரு வாரம் தான். ஆனால் ஸ்ட்ரோபோஸ்பியர் அடுக்கில் அதன் வாழ்நாள் சுமார் 5 ஆண்டுகள். இதனால் ஸ்ட்ரோபோஸ்பியர் அடுக்கில் படியும் கருப்பு கார்பன் துகள்கள் அப்படியே இருந்து 250 மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஓசோன்
ஸ்ட்ரோபோஸ்பியரின் மேல் விளிம்பில் ஓசோன் அடுக்கு உள்ளது. ஓசோன் அடுக்கு சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ஸ்ட்ரோபோஸ்பியரில் இருக்கும் இந்த புகை ஸ்ட்ரோபோஸ்பியரின் வெப்பநிலையான உறைநிலைக்கும் கீழான வெப்பநிலையை சுமார் 12 டிகிரிக்கு அதிகரித்து விடும். இந்த நிலை மாற எப்படியும் 20 முதல் 25 வருடங்கள் ஆகும் என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். விளைவு ஓசோன் 20-50 சதவீதம் அழிந்துவிடும். சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக பூமிக்கு வரும் போது அது எல்லா உயிரினங்களையும் தாவரங்களையும் பாதிக்கும்.
கடுங்குளிர்
ஸ்ட்ரோபோஸ்பியரில் இருக்கும் புகை கரி சூரிய ஒளி பூமியை அடையாமல் உறிஞ்சி விடும். ஆயிரம் ஆண்டுகளாக இல்லாத அளவு பூமியின் வெப்பநிலை குறைந்து விடும். சுமார் 10-20 ஆண்டுகளுக்கு கடும் குளிர் ஏற்பட்டு உயிர்கள் மட்டுமல்லாமல் உலகமே உறைந்து போய் விடும் அபாயம் உள்ளது.
இது போன்ற ஆணு ஆயுத வெடிப்புகளால் ஐந்து வருடங்களில் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் குறையும். அதிலும் மக்கள் தொகை அதிகம் இருக்கும் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த விளைவுகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். அங்கு குளிர்காலங்களில் 2.5 டிகிரி குளிராகவும் கோடைகாலங்களில் 1 முதல் 4 டிகிரிகள் குளிராகவும் இருக்கும். வெப்பத்தால் விரிந்த பனிக்கட்டிகளும் மீண்டும் உறைந்து விடும்.
Credit: Earthsky
இது குறித்து ஆய்வு செய்த ரூட்கேர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆலன் ரோபோக் (Alan Robock) என்ற காலநிலை விஞ்ஞானி அணு ஆயுத போர் ஏற்பட்டால் உலகம் முழுவதும் குளிராகவும் இருட்டாகவும் நிலங்கள் வறட்சியாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். விளைவு, தாவரங்கள் பாதிக்கப்படும். காடுகள் அழியும். கடலில் ஏற்படும் இந்த வெப்பநிலை மாற்றம் கடல் உயிரினங்களை பாதிக்கும். உணவிற்கு வழியே இல்லாமல் பஞ்சத்தால் மனிதர்களும் பாதிக்கப்படுவோம். அதிலும் முன்பை விட இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் வளர்ந்துள்ளதால் விளைவுகள் இன்னும் 5 மடங்கு மோசமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
தீர்வு
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அணு ஆயுதங்களின் அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாட்டின் பலத்தை காட்ட ஆணு ஆயுதங்களை பெருமளவில் தயாரிக்கிறார்கள். ஆனால் போர் என்றால் பாதிப்பு என்பது எதிரிக்கு மட்டுமல்ல. நமக்கும் தான். சொல்லபோனால் அப்பாவிகள் தான் அதிகம் பாதிப்படுவார்கள். ஆறறிவு கொண்ட மனித இனத்தின் அழிவை மனிதர்களே ஏற்படுத்திவிட்டதாக அமைந்துவிடும். மொத்ததில் அணு ஆயுத யுத்தம் வந்தால் அதனை நடத்தியவர்கள் மட்டுமல்ல உலகமே அழியும் என்பதே தெளிவான உண்மை. இதனை உணர்ந்து போரைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சரியான தீர்வாகும் என்கின்றனர் நிபுணர்கள்.