பெண்கள் என்றாலே புரியாத புதிர் என்ற எண்ணம் ஆண்களிடத்தில் இருந்து வருகிறது. “நேத்து நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்தவ இன்னைக்கு சிடுசிடுனு எரிஞ்சு விழறா, தேவையில்லாம கோவப்படுறா, காரணமேயில்லாம கத்துறா, ரொம்ப தைரியமா எல்லாத்தையும் சமாளிக்குறவ அப்பப்போ சின்ன விஷயத்துக்குக்கூட உடைந்துபோய் அழுது விடுகிறாள்” என பெண்களின் மனநிலையை புரிந்துகொள்ள முயற்சித்து குழம்பித் தவிக்கும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
ஹார்மோன் மாற்றங்களால் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள்.
மாதவிடாய் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், 75 சதவீதப் பெண்கள் இந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் அதாவது PMS (Premenstrual syndrome) என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மாதவிடாய் முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்களில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் இந்த காலக்கட்டத்தில் பெண்கள் அதிக உற்சாகத்துடனும், சகிப்புத்தன்மையுடனும், மகிழ்ச்சியாகவும் காணப்படுவார்கள்.
Also Read: மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? தினமும் வெறும் பத்து நிமிடம் ஒதுக்குங்கள்
PMS அறிகுறிகள்
- உடல் அசதி
- தலைவலி
- பசியின்மை
- தூக்கமின்மை
- வயிறு உப்புதல்
- மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு
- அஜீரண கோளாறு
- பதற்றம்
- தனிமையாக உணர்தல்
- காரணமில்லாமல் அழுதல்
- தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுதல்
- மன அழுத்தம்
- மிகப்பிடித்த விஷயங்களைக்கூட செய்வதற்கு ஆர்வமில்லாமல் இருத்தல்
மேற்சொன்ன எல்லா அறிகுறிகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. இதன் தாக்கம் குறைவாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
நூறில் ஐந்து பெண்களுக்கு PMS -ன் தாக்கம் தீவிரமாகி அவர்களது அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கும். அது மாதவிடாய்க்கு முந்தைய பதற்ற மனநிலை (Premenstrual Dysphoric Disorder) என சொல்லக்கூடிய மனநலம் சார்ந்த கோளாறாக இருக்கக்கூடும். அதனால், மேற்சொன்ன அறிகுறிகள் மிகத்தீவிரமாக இருக்கும் பட்சத்தில் ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களுக்கும் மாதவிடாய் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: மாதவிடாய் தள்ளிப் போவதற்கான 10 காரணங்கள்!
PMS-ஐ எதிர்கொள்ள கடைப்பிடிக்க வேண்டியவை

- தினசரி அரை மணி நேர உடற்பயிற்சி (நடைப்பயிற்சி, நடனம், நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல்)
- நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்,
- சிறு தானியங்கள் முளைக்கட்டிய உணவுகள், பழங்கள், காய்கறிகள்
- பால், முட்டை, ஆரஞ்சு பழச்சாறு
- முறையான தூக்கம் யோகா அல்லது தியானம் செய்தல்
- குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது அதிகாலை சூரிய ஒளி உங்கள் உடல் மீது விழ வேண்டும்.
Also Read: உடற்பயிற்சியை ஏன் காலை உணவிற்கு முன்பே செய்ய வேண்டும்? காரணம் இது தான்!
தவிர்க்க வேண்டியவை
- அதிக உப்பு சேர்த்த உணவுகள்
- பதப்படுத்தப்பட்ட உணவுகள்
- டீ, காபி, குளிர்பானங்கள்
- பொரித்த உணவு வகைகள்
- துரித உணவு
- இரவில் கண்விழித்தல்
- ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்தல்
ஆண்களுக்கான டிப்ஸ்!
உங்கள் மனைவியோ, காதலியோ, சகோதரியோ, தோழியோ என்றாவது காரணமேயில்லாமல் எரிச்சலாகவும், சோகமாகவும் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அவர்களிடம் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.
அவர்களது குறைகளை அந்த நேரத்தில் அவர்களிடம் சுட்டிக்காட்டுவதை தவிர்த்து விடுங்கள். அவர்கள் சந்தோஷமாக இருக்கும்பொழுது அதை நீங்கள் பொறுமையுடன் எடுத்துக்கூறி தீர்வு காணலாம்.
அவர்கள் மிகவும் எரிச்சலுடன் காணப்படும் பட்சத்தில் அவர்களை அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று மெல்லிசை பாடல்களை கேட்க வைக்கலாம்.
தலைவலி அல்லது வயிறு வலியால் அவர்கள் அவதியுறும்பட்சத்தில், இஞ்சி புதினா தட்டிப்போட்டு கொதிக்க வைத்து, கொஞ்சம் சூடு ஆறியதும் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து மிதமான சூட்டில் அவர்களுக்கு பருகக் கொடுக்கலாம்.
தினமும் அவர்களை உடற்பயிற்சி செய்ய உற்சாகப்படுத்துங்கள்.
சரியான நேரத்தில் தூங்கி எழுகிறார்களா? சத்தான உணவுகளை உட்கொள்கிறார்களா? என கண்காணித்துக் கொள்ளுங்கள்.
இவை அனைத்தையும் மீறி அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையானதெல்லாம் உங்கள் அன்பும், அரவணைப்பும்தான். எனவே அவர்களை பொறுமையுடனும் அக்கறையுடனும் கையாளுங்கள்.
PMS – காலகட்டத்தில் அவர்களே வீம்பிற்கென சண்டைப் பிடிக்கும் பட்சத்தில் நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போய் இரண்டு வாரங்கள் அந்த சண்டையை ஒத்தி வையுங்கள். இரண்டு வாரங்கள் கழித்து ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அவர்களிடம் அதிகம் சுரக்கத் துவங்கும்பொழுது ஒத்தி வைத்த சண்டையை தொடர்வது உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது!
ஒத்திவைத்த சண்டையை முற்றிலும் மறந்தே விடுவது அதனினும் நன்று!!!
PMS காலகட்டத்தில் பொறுமையுடனும் அக்கறையுடனும் ஆண்கள் பெண்களை அணுகவேண்டும். பெண்கள் இந்த பிரச்சனை பற்றி ஆண்களிடம் பேசாமலே இருந்து வந்தது தான் அவர்களின் தவறான புரிதலுக்கு காரணம். அதனால், தவறாமல் உங்கள் கணவர், காதலர், நண்பர்கள், சகோதரர்கள் என உங்களை சுற்றியுள்ள ஆண்களுக்கும் இதை ஷேர் செய்யலாமே…