உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணிகளின் பொன்மொழிகளை இன்றைய டூடுலில் வடிவமைத்திருக்கிறது கூகுள்.

புகழ் பெற்ற பெண்கள்
அமெரிக்காவின் புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் வானியல் அறிஞரான மே ஜெமிசன் (Mae Jemison), மெக்ஸிகோவின் சிறந்த ஓவியர் பிரிதா காலோ (Frida Kahlo), இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மேரி கோம் (Mary Kom), பிரிட்டிஷ் – ஈராக்கிய கட்டட வடிவமைப்பாளர் சாஹா ஹாதித் (Zaha Hadid) போன்றவர்களின் புகழ்பெற்ற வசனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
பெண்கள் தினம்
முதன்முதலில் பெண்கள் தினமானது கொண்டாடப்பட்டது அமெரிக்காவில்தான். அங்குள்ள சோசியலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நியூயார்க் நகரத்தில் 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 தேதி மகளிர் தினத்தைக் கொண்டாடினர். அடுத்த ஆண்டு முதல் அந்த கட்சி பெண்கள் அமைப்பு இதனை ஆண்டுதோறும் கடைபிடிக்கவேண்டிய நாளாக அறிவித்தது.
மார்ச் 8
ரஷியாவில் 1917 ஆம் ஆண்டுமுதல் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அவர்கள் தான் மார்ச் 8 ஆம் தேதியை பெண்கள் தினமாக முதலில் அறிவித்தவர்கள். அன்று ரஷியா முழுவதும் தேசிய விடுமுறை நாளாகவும் அறிவித்தது அரசு.
சர்வதேச மகளிர் தினம்
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டுவந்த பெண்கள் தினத்தை மார்ச் 8 உலகம் எங்கிலும் பொதுவாக சர்வதேச மகளிர் தினம் மற்றும் அமைதிக்கான தினமாக கொண்டாடவேண்டும் என 1975 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது ஐக்கிய நாடுகள் சபை.