அரசு அறிவிக்கும் பல்வேறு திட்டங்கள், நீதிமன்றம் அனுமதிக்கும் பல்வேறு சட்டங்கள் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது. அதில் ஒன்று தான் இந்த ‘விசாகா கமிட்டி‘.
பெண் காவல்துறை அதிகாரி ஒருவர், தன் உயரதிகாரி தனக்கு பாலியல் தொல்லை தருவதாக சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். காவல் துறையில் ஏன் விசாகா கமிட்டி இல்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வியெழுப்ப, உடனே அதை அமைத்தது தமிழக அரசு.
விசாகா கமிட்டி
பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று 1997-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பின் படி, பத்துக்கு மேற்பட்ட பெண்களைப் பணியில் அமர்த்தி வேலை வாங்கும் ‘அனைத்து அலுவலகங்களும்’, அங்கு அவர்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க, அந்தப் புகாரை விசாரிக்க, ICC எனப்படும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டி’ என்ற குழுவை அமைக்க வேண்டியது கட்டாயம்.
அந்தப் புகார் கமிட்டிக்கு அலுவலகத்தின் மூத்தப் பெண் பணியாளர் தலைவராக இருக்க வேண்டும். அந்தக் கமிட்டியின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். ஓரு உறுப்பினர் நிறுவன ஊழியராக இல்லாமல், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இந்த கமிட்டி ஆண்டுதோறும் அதன் செயல்பாடுகளை அறிக்கையாகத் தயாரித்து அரசிடம் வழங்க வேண்டும்.
எவையெல்லாம் குற்றம் ?
பெண் ஊழியரைத் தொட்டுப் பேசுவது, அவரை பாலியலுக்கு அழைப்பது, அதிகாரத்தை வைத்து மிரட்டுவது, பாலியல் ரீதியான வார்த்தைகளைப் பேசுவது, ஆபாசமான படங்களைக் காட்டுவது உள்ளிட்டவை பாலியல் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், என்ன வகையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் வகுத்து, அதை சுற்றறிக்கை மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
விதிகள் திருத்தம்
மத்திய அரசின் அறிவிப்பின்படி, பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் (தடுப்பு, தடை, தீர்வு) அமலாக்கப்படுவது குறித்த விபரம் கம்பெனி இயக்குநர்களின் ஆண்டறிக்கையில் இடம் பெற வேண்டும்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் இது தொடர்பாக மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சருக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் கம்பெனிகள் சட்டத்தின் 134-ஆவது பிரிவின் கீழ், 2014ஆம் ஆண்டு விதிகளைத் திருத்தி, அந்த அறிவிப்பைக் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வெளியிட்டது.
எனவே, உங்கள் அலுவலகத்திலும் விதிப்படி அந்தக் குழு இயங்கியாகவேண்டும். இயங்குகிறதா?

புகார் மீது நடவடிக்கை இல்லை எனில் ?
அலுவலகத்தில் இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டியில் புகார் அளித்தும், குற்றவாளிமீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், என்ன செய்வது?
LCC – எனப்படும் உள்ளூர் புகார் குழுவை நாடலாம்.
உள்ளூர் புகார் குழு (Local Complaint Committee ) அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேக அலுவலர்கள் உள்ளனர். பெரும்பாலான லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்குகின்றன.
அந்தப் பெண் காவலர் அளித்த, ஐ.ஜி மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்கும் விசாகா குழுவின் முதல் கூட்டம் சென்னையில் இன்று துவங்கியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் மாநில குற்ற ஆவண காப்பகத்தில் விசாகா கமிட்டியின் கூட்டம் நடைபெற்று வருகிறது.