ரகசிய கேமராக்கள் எங்கெல்லாம் பொருத்தப்படுகின்றன என்றும் அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்றும் சென்ற பதிவில் பார்த்தோம். இப்படி ஒவ்வொரு இடத்தையும் உற்று பார்த்து ஆராய்வதையும், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு டார்ச் லைட்டை கொண்டு தேடுவதையும் தவிர, எப்போதும் உங்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போனை கொண்டே ரகசிய கேமராக்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
வழிகள்
- ஹோட்டல் அல்லது விடுதி அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள். இருட்டில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் (Flash)வெளிச்சத்தை ஆப் செய்து விட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் எல்லா பொருட்களையும் புகைப்படம் எடுங்கள். இப்போது எடுத்த புகைப்படத்தை கவனித்தால் ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டு புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதை வைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.
- இதே போல அறை முழுவதும் இருட்டாக்கி விட்டு அறையை செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.
Credit: Make use of
- செல்போனில் யாரிடமாவது கால் (Call) செய்து பேசிக் கொண்டே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் அல்லது “க்ளிக்” என்ற சத்தம் கேட்டால் அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம்.
- துணிக்கடையின் உடை மாற்றும் அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக செல்போனிலிருந்து போன் செய்து பாருங்கள். பின்னர் அந்த அறைக்குள் சென்றவுடன் மீண்டும் கால் செய்து பாருங்கள். பல முறை முயற்சித்தும் கால் போகவில்லை என்றால் கண்டிப்பாக அந்த அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
- ஏனெனில் ரகசிய கேமராக்கள் கண்ணாடி இழை கேபிள் (Fiber optic cable) மூலம் தான் இணைக்கப்பட்டிருக்கும். இவற்றின் குறுக்கீடு காரணமாக உங்களுடைய செல்போன் சமிக்கை பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதால் தான் கால் செய்ய முடிவதில்லை.
ஸ்மார்ட் போன்களில் உள்ள மாக்னெட்டோமீட்டர் என்ற சென்சார் தான் ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பதற்கு உதவுகிறது!
செயலிகள்
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இது போன்ற கேமராக்களை கண்டு பிடிக்க பல்வேறு மொபைல் செயலிகள் (Apps) உள்ளன. Hidden Spy camera Detector, Anti Spy camera, RadarBot, iAmNotified, Spy camera detector, DontSpy என பல செயலிகள் உள்ளன. சில செயலிகள் போலிகள் என்றாலும் சில செயலிகள் நல்ல பயன் தருகின்றன. உங்களது கைபேசியில் இது போன்ற செயலிகளை நிறுவுறுவதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கேமராக்களைக் கண்டறிய முடியும்.
செயல்பாடு
ஸ்மார்ட் போனில் இருக்கும் மாக்னெட்டோமீட்டர் (Magnetometer ) என்ற சென்சார் தான் கூகுள் மேப் செயலிக்கு நீங்கள் எந்த திசையை நோக்கி உள்ளீர்கள், நகர்கிறீர்கள் என்பதை தெரிவிக்கும். இந்த சென்சார் தான் ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பதற்கும் உதவுகிறது. ஒவ்வொரு மின்னணு பொருளும் காந்த அலைகளை வெளியேற்றி கொண்டே இருக்கும் என்பதால் இந்த செயலிகள் மூலம் உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் மாக்னெட்டோமீட்டர் சென்சார், எந்த இடத்தில் காந்த அலைகள் அதிகம் வெளிவருகிறது என்பதைக் கண்டறிந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும். செயலியை ஆன் செய்தவுடன் ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா வீடியோ தானாக செயல்படும். பின்னர் அறை முழுவதும் வீடியோ எடுக்க வேண்டும். ரகசிய கேமரா உள்ள இடத்தை வீடியோ எடுக்கும்போது செல்போனில் உள்ள சென்சார் மூலம் ‘பீப்’ ஒலி கேட்கும்.
Credit: 1Mobile
இது போன்ற முறையின் மூலம் சாதாரண வகை கேமராக்களை மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், அகச்சிவப்பு கதிர்களை (IR – Infrared) அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அதாவது இருட்டிலும் படம் எடுக்கும் ரகசிய கேமராக்களை கண்டறிவதற்கு, உங்களது ஸ்மார்ட் போனில் IR என்னும் சென்சார் இருக்க வேண்டும். ரகசிய கேமராக்களைக் கண்டறியும் செயலிகளில் இருக்கும் IR வகை கேமராவை கண்டறியும் வசதியை பயன்படுத்துவதற்கு முன்னர் உங்களது அறையில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டாக்கிவிடவேண்டும். இப்போது அந்த கைபேசி செயலியின் மூலம் நீங்கள் இருக்கும் அறையை ஆராயும் போது, IR கேமரா ஏதாவது இருந்தால் அப்போது கருப்பாக இருக்கும் போனின் திரையில் வெள்ளை நிறத்தில் தெரியும். இது போன்ற செயலிகள் மூலம் தான் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்தவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கல்கள்
விலை குறைவான ஸ்மார்ட் போன் என்றாலும் கிட்டத்தட்ட அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும். ஆனால் குறிப்பிட்ட செயலியின் அனைத்து சிறப்பம்சங்களையும் சில மலிவு விலை ஸ்மார்ட் போன்கள் மூலம் பெற முடியாது. இதனால் தான் இது போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்யும் போது “செயலி அளிக்கும் முடிவுகள் உங்களது கைபேசியின் திறனை சார்ந்தது. ஒருவேளை இந்த செயலி செயல்படுவதற்குரிய திறன் உங்களது கைபேசியில் இல்லையென்றால், நீங்கள் தவறான முடிவுகளை பெறக்கூடும்” என்று அந்த செயலிகள் குறிப்பிடுகின்றன. இதனால் கேமரா எதுவும் இல்லை என்று அந்த செயலிகள் சொல்வதையும் முழுவதுமாக நம்ப முடியாது.
தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67,67A மற்றும் 66E மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 354C யின்படி,ரகசிய கேமரா வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பக்கப்பட்டால் மூன்றாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்!
மேலும் இது போன்ற சில செயலிகள் மூலம் உங்கள் ஸ்மார்ட் போன் ஹேக் செய்யபடும் அபாயமும் உள்ளது என்பதால் , அதிலும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படவேண்டும். அதுமட்டுமல்ல, உங்கள் செல்பேசியில் வைரஸையும் ஏற்றிவிடலாம்.
சோதனை
ஒரு செயலியை சோதனை செய்ய இது போன்ற செயலியை நிறுவி வைத்துள்ள போனைக் கொண்டு இன்னொரு போனை சோதிக்கலாம். காந்த அலைகளின் அளவைப் பொறுத்து உங்களிடமுள்ள மற்றொரு போனின் பகுதிகளான கேமரா, ஸ்பீக்கர் போன்றவற்றை இந்த செயலிகள் காட்டும். இதன் மூலம் அந்த செயலியின் நம்பகத்தன்மையை கண்டுபிடிக்கலாம்.
Credit: nypost
தீர்வு
ரகசிய கேமராக்களைப் பயன்படுத்தி பெண்களைத் தவறாக படம் எடுத்து அவர்களை மிரட்டவோ, அல்லது இணைய தளங்களில் வெளியிடவோ செய்கிறார்கள். பல வழக்குகளில் பாதிப்புக்கு ஆளான பெண்கள் புகார் கொடுப்பதில்லை.ஒருவேளை இது போன்ற ரகசிய கேமராவை கண்டு பிடித்தால், பதற்றமடையாமல் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். அல்லது மகளிர் கால் நிலையத்தில் புகார் செய்யலாம். ரகசிய கேமரா பொருத்திய நபருடன் வாக்குவாதம் கூட செய்யவேண்டாம். ஏனெனில் அந்த நேர இடைவெளியில் கூட அவர்கள் தப்பித்து விடலாம். மேலும் கேமராவைத் தொட வேண்டாம். ஏனெனில் அதில் பதிந்திருக்கும் குற்றவாளியின் கைரேகையை, உங்கள் கைரேகை அழித்துவிடும். தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 67,67A ,66E மற்றும் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 354C ன்படி, ரகசிய கேமரா வைத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பக்கப்பட்டால் மூன்றாண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.