மாதவிடாய் தள்ளிப் போவதற்கான 10 காரணங்கள்

0
164

அனுபவத்தையும் அறிகுறிகளையும் வைத்து எப்போது மாதவிடாய் எப்போது தொடங்கும் என்பதைக்  கிட்டத்தட்டத் துல்லியமாகக் கணிக்கலாம். இப்போது, மாதாமாதம் எப்போது மாதவிடாய் வரும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் செயலிகளும் வந்துவிட்டன. சில நாட்கள் மாதவிடாய் தாமதமானால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று பொருளா?

உண்மை என்னவென்றால், மாதவிடாய் தாமதமாவதற்கோ, சீரற்ற கால சுழற்சியில் ஏற்படுவதற்கோ பல்வேறு பிற காரணங்கள் உள்ளன. நீங்கள் கர்ப்பமாக இருக்கலாம் என்று சந்தேகித்தால் தாராளமாக கர்ப்பப் பரிசோதனை செய்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மாதவிடாய் தாமதமாவதற்கு சில பொதுவான காரணங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

மன அழுத்தம் (Stress)

மன அழுத்தம் நம் ஆரோக்கியத்தைப் பல வழிகளில் பாதிக்கிறது. வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதில் தொடங்கி எடை அதிகரிப்பு வரை பல்வேறு விளைவுகளை அது ஏற்படுத்தக் கூடும். அது மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கலாம். மன அழுத்தம் மாதவிடாயைத் தாமதப்படுத்தலாம், முன்கூட்டியே வரச் செய்யலாம், மாதவிடாய் நாட்களை அதிகரிக்கலாம் அல்லது மாதவிடாய் நாட்களில் வலியை வழக்கத்தை விட அதிகமாக்கலாம். மன அழுத்த ஹார்மோன்கள் அதிக அளவு உற்பத்தி ஆவதால், மூளை பிற செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியதாகிறது, இதனால் செரிமானம் போன்ற விஷயங்கள் பாதிக்கப்படுகின்றன.

சுகவீனம் (Illness)

கரு முட்டை வெளியிடப்படும் சமயத்தில் உடல்நலமின்றி இருந்தால், அதனாலும் மாதவிடாய் தாமதமாகலாம்.

எடையில் ஏற்படும் மாற்றங்கள் (Weight changes)

உங்கள் உடல் எடையானது, மாதவிடாய் சுழற்சி உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமஸ் சுரப்பியைப் பாதிக்கிறது. திடீரென எடை குறைந்தால், அது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் குறைக்கும், திடீரென்று எடை அதிகரித்தால் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி அதிகரிக்கும். எனவே இந்த இரு வகை மாற்றங்களுமே கணிக்க முடியாத மற்றும் சீரற்ற மாதவிடாய் ஏற்படக் காரணமாகலாம்.

தூக்கம் (Sleep)

தூக்கமின்மை அல்லது போதுமான தூக்கமின்மையும் மாதவிடாய் சுழற்சியை சீரற்றதாக்கலாம். உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் இனப்பெருக்க ஹார்மோன்களைப் பாதித்து, கருமுட்டை வெளியீடு மற்றும் மாதவிடாய் ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

உணவுமுறை (Diet)

உங்கள் உணவு முறையை மாற்றுவதும் உங்கள் மாதவிடாய் சீரற்றுப் போகக் காரணமாகக் கூடும். மிகக் குறைவாக சாப்பிடுவது அல்லது மிக அதிகமாக சாப்பிடுவது அல்லது திடீர் திடீரென்று வெவ்வேறு வகையான உணவு முறைக்கு மாறுவது போன்றவையும் மாதவிடாயைத் தாமதிக்கலாம்.

வெவ்வேறு நேர மண்டலங்களில் பயணித்தல் (Travelling across Time Zones)

இனப்பெருக்க ஹார்மோன்கள் செயல்படும் நேரமும் வெளியிடுதலும் ஒளியைச் சார்ந்திருப்பதால், வெவ்வேறு நேர மண்டலங்களில் அதிகப் பயணம் செய்வதால் கருமுட்டை வெளியிடுதல் மற்றும் மாதவிடாய் கால ஒழுங்குமுறை தற்காலிகமாக மாறக்கூடும்.

உடற்பயிற்சி (Exercise)

உடற்பயிற்சி செய்வது  எப்போதும் நல்லது. ஆனால், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி செய்தால் உடல் போதுமான ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாமல் ஆகி விடக் கூடும். தீவிர விளையாட்டு வீராங்கனைகளுக்கு மாதவிடாயின்மை ஏற்படும் அபாயம் ஏற்படலாம், இவர்களுக்கு சில மாதங்கள் வரை கூட மாதவிடாய் வராமல் போகக் கூடும். தொடக்கத்தில் குறைவாக உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போது எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து முறையாகச் செய்தால் பிரச்சினை தீரக்கூடும்.

மருந்து (Medication)

கருத்தடை மாத்திரைகள் உங்கள் உடல் கருமுட்டை வெளியிடுவதைத் தடுக்கச் செயல்படுவதால், மாதவிடாயில் அதிக மாற்றங்களை ஏற்படுகின்றன. இந்த மாத்திரைகளைத் தொடங்கும் போது அல்லது நிறுத்தும் போது, ​​உங்கள் உடல் மீண்டும் பழைய நிலையை அடைய உடலுக்குச் சிறிது காலம் பிடிக்கும். இதனால் உங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படலாம். மற்ற வகை மருந்துகளும் மாதவிடாயைப் பாதிக்கலாம். ஸ்டிராய்டுகள், தைராய்டு மருந்துகள் அல்லது ஆன்டிசைகோடிக்ஸ் போன்ற மருந்துகள் உங்கள் மாதவிடாயைப் பாதிக்கலாம்.

மாதவிடாய் நிறுத்தப் பருவம் (perimenopause)

பெரும்பாலான பெண்களுக்கு, 45 முதல் 50  வயதிற்குள் மாதவிடாய் நிற்கும் செயல் தொடங்கும், சிலருக்கு 40 வயதிலேயே (அல்லது இன்னும் முன்பே கூட) தொடங்கலாம். இந்த சமயத்தில், உடல் குறைவான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை உற்பத்தி செய்யும், ஆகவே மாதவிடாயில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம்.

தைராய்டு

தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிற காரணங்களாலும் மாதவிடாய் தாமதமாகலாம்.

உங்களுக்கு ஒரு சில நாட்கள் மாதவிடாய் தாமதமானால் கவலைப்பட வேண்டியதில்லை, ஆனால் எப்போதுமே மாதவிடாய் முன்போ அல்லது தாமதமாகவோ வந்தால், மாதவிடாய் சுழற்சியில் வேறு மாற்றங்களும் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.