‘MeToo’ புகார்கள் குறித்து ஆராய தனிக்குழு – இதெல்லாம் தேவை தானா என்கிறீர்களா?

0
39
Credit : USCB

நாடு முழுவதும், தமிழகத்திலும் MeToo விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எப்போதோ நடந்த ஒன்றை இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பது தான் MeToo பற்றிய பெரும்பாலானோரின் கருத்து. அந்த விவாதத்திற்குச் செல்வதற்கு முன்னர் இந்தப் போர் எப்படித் தொடங்கியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

MeToo உருவான கதை

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், ஹாலிவுட்டின் சக்தி வாய்ந்த தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டென் (Harvey Weinstein) மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு எழுந்தது. தன் படத்தில் நடிக்கும் நடிகைகள் மீது அவர் பாலியல்-ரீதியான அழுத்தங்கள் தருவதாகவும், அதில் நிறைய நடிகைகள் வேறு வழியின்றிச் சம்மதிக்க நேர்வதாகவும் புகார்கள் கிளம்பின. அப்போது அது அமெரிக்கா முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன் தொடர்ச்சியாகப் பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றிய விவாதம் இணையத்தில் துவங்கியது.

Credit : Reddif

இந்த விவாதத்தில் துணிச்சலுற்று சாதாரண பெண்களும், தாங்களும் தங்கள் அலுவலகங்களில் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பகிரத் துவங்கினர். அப்போது ஹாலிவுட் நடிகை அலிசியா மிலானோ (Alyssa Milano) அந்தப் பதிவுகளை #MeToo எனும் ஹேஷ்டேக் போட்டுப் பதியுமாறு கோரிக்கை விடுத்தார். (‘எனக்கும் இந்தப் பிரச்னை வந்தது,’ என்று அர்த்தம்.) சொன்ன சில நாட்களிலேயே உலகெங்கும் இந்த ஹேஷ்டேக் தீயாகப் பரவியது.

ஹாலிவுட்டிலேயே நிறைய பெரிய நடிகர், இயக்குனர்கள் மேல் பாலியல் குற்றச்சாட்டு கிளம்பியது. புகழ் பெற்ற நடிகர் கெவின் ஸ்பேஸி (Kevin Spacey) மேல் குற்றச்சாட்டுகள் எழும்ப அதில் சிலவற்றை அவர் ஒப்புக் கொண்டார். உடனே அவர் நடித்துக் கொண்டு பெரும் ஹிட்டடித்த House of Cards சீரியலை கைவிடப் போவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்தது. ஹாலிவுட்டின் லெஜண்ட் நடிகை ஆன மெரில் ஸ்ட்ரிப்பும் (Meryl Streep) கூட இந்த ஹேஷ்டேகில் கலந்து தான் ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளை அப்போது பகிர்ந்தார்.

இந்தியாவில் Me Too மீதான பார்வை

அப்போதே இந்த Me Too இயக்கம் இந்தியாவையும் பாதித்தது. பாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் என்று நிறைய பேர் மேல் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த இயக்கத்தை விமர்சிப்பவர்களின் முக்கிய குற்றச்சாட்டே பத்து வருடத்துக்கு முந்தைய பிரச்சினையை இப்போது ஏன் எடுக்கிறாய்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தாய் என்பது தான். ஆனால் இந்த MeToo இயக்கத்தின் முக்கிய அம்சமே அது தான். பாலியல் அழுத்தங்கள், பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாக பேசுவதில் பெண்களுக்குப் பெரும் சமூக அழுத்தங்கள் இருக்கின்றன. நாமே பார்த்திருக்கிறோம். ஒரு வன்புணர்வு குற்றச்சாட்டே வந்தால் கூட அதில் அந்தப் பெண் மேல் ஏதாவது தவறு காண முடியுமா என்று முயற்சி செய்யும் சமூகம் நம்முடையது. அந்த ராத்திரி நேரத்தில் வெளியே என்ன செய்து கொண்டிருந்தாய்? குடித்திருந்தாயா? ஏன் அவ்வளவு டைட்டாக டி-ஷர்ட் போடுகிறாய்? என்றெல்லாம் குற்றத்தின் பழியை அந்தப் பெண்ணின் மீதே சுமத்த முயற்சி செய்யும் சமூகம் நாம். இதற்குப் பெயர் தான் Blaming the victim for the crime. இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட பாலியல் சீண்டல்களை பெண்கள் அமைதியாக விழுங்க முனையவே செய்வார்கள்.

இதனால் தான் இந்த Me Too இயக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. உலகெங்கிலும் பெண்கள் துணிச்சலுடன் தங்கள் வாழ்வில் தாம் எதிர்கொண்ட சவால்கள் குறித்து வெளிப்படையாக விவாதிக்க இந்த இயக்கம் மேடை அமைத்துக் கொடுத்தது.

இது தேவை தானா ?

எப்போதோ நடந்த விரும்பத் தகாத ஒன்றை இப்போது பகிரங்கப் படுத்துதல் தேவை தானா என்றால், தேவை தான். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்களை அவள் வெளியே சொல்லமாட்டாள் என்ற தைரியம் ஒன்றே ஆண்களை அத்துமீறச் செய்கிறது. வழக்கு வேண்டாம். கைது வேண்டாம், தண்டனை வேண்டாம். ஆனால், இவன் என்னிடம் தவறாக நடந்து கொண்டான் அல்லது நடந்து கொள்ள முயன்றான் என்று பெண் வெளி உலகிற்குச் சொல்லி விடுவாள் என்ற அச்சம் சிறிதேனும் இதன் மூலம்  ஆணுக்கு ஏற்படலாம்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு கோணம் இருக்கிறது. பாலியல் அத்துமீறல்கள் பெண்கள் மீது மட்டும் நிகழ்த்தப் படுவது அல்ல. குழந்தைகள் மீதும், ஆண்கள் மீதும் கூட நிகழ்த்தப் படுகின்றன. ஆணுக்கு இதனால் என்ன பிரச்சினை பெண்ணுக்குத் தானே என்று நாம் ஒதுக்கி விட முடியாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் விருப்பமின்றி, கட்டாயத்தினால் செய்யும் எது ஒன்றும் காலம் கடந்தும் ஆறா ரணமாகி வலித்துக் கொண்டே தான் இருக்கும். அந்த வலியில் இருந்து சிறிதேனும் விடுபட, ஏதோ ஒரு எதிர்வினை ஆற்றி விட்டதாக திருப்திப் பட்டுக் கொள்ள  MeToo உதவும். அதன் நோக்கமும் அதுவே. எனவே, வழக்குத் தொடுக்கலாமே என்ற கேள்வி அர்த்தமற்றது.

சில கரும்புள்ளிகள்

எல்லா விதமான நல்ல முன்னெடுப்புகளிலும் சில எதிர்மறையான விஷயங்கள் நடக்கவே செய்கின்றன. வரதட்சணைப் புகார்களைப் பழி வாங்கும் நோக்கிற்காகக் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். MeToo – விலும் அது போன்ற குற்றச்சாட்டுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உண்மையில் இதற்கு நம்மால் எதுவுமே செய்ய முடியாது. அத்தகையவர்களே இது பாதிக்கப்பட்டவர்களுக்கானது என்று புரிந்து கொண்டு விலகுவதே சிறந்தது.

 MeToo – வைப் பயன்படுத்திப் பணியிடங்களில், பொதுவெளிகளில் பெண்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள், சீண்டல்கள், அழுத்தங்கள் பற்றி நாம் உரையாட வேண்டும். அவற்றை விவாதிக்க வேண்டும். அலுவலகங்கள் தாண்டி இணையத்தில் சந்திக்கும் இன்பாக்ஸ் இம்சைகள், வாட்ஸ்அப் வம்புகள் இவற்றைப் பற்றி பேச வேண்டும். அப்போது தான் மற்ற பெண்கள் சிறிது துணிச்சலுடன் எதிர்க்க முன் வருவார்கள்.

புகார்கள் குறித்து ஆய்வு செய்ய தனிக் குழு

இந்த சூழலில் பாலியல் புகார்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து ஆய்வு செய்ய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் இந்தக் குழுவில் இடம் பெறுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. MeToo புகார்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டங்கள் மற்றும் புகார் அளிக்கும் நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து இந்தக் குழு அறிக்கை தாக்கல் செய்யும்.