மனிதி வெளியே வா…

Date:

கள்ளிப்பால் கவிழ்த்து, முட்புதர் பாதை கடந்து, கயவர் கண் மறைத்து, உயர வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு சரித்திரமே!!!

நாகரீக உலகம், டிஜிட்டல் மயம் என்று அறிவியல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றாலும் இன்றும் கற்பழிப்பும், பெண்ணை அடிமைப் படுத்தி அடக்கி வைக்கும் ஆதிக்க மனோபாவமும் ஓங்கியே நிற்கிறதென்பதை நாம் மறுக்க இயலாது.

இன்னமும் பிறந்த குழந்தை ஆணா ? பெண்ணா ? என்பதை பொறுத்தே கொண்டாடப்படுகிறது என்பது எவ்வளவு அவமானகாரமானது. ஆண் குழந்தை தான் வம்சத்தின் வாரிசாகவும்,  கடைசிக் காலத்தில் பெற்றோரை கவனிப்பார்கள் என்ற எண்ணமும் இன்றும் மறையவில்லை என்பதையும் மறுக்க இயலாது.

பல பெற்றோர்கள், ஆம்பள பிள்ளை நீ அழக்கூடாதுடா என்று சொல்வதோடு அல்லாமல், பொண்ணு மாதிரி அழக்கூடாது என்கின்றனர். பெண் பிள்ளை சத்தமாகச் சிரிக்கவும் கூடாதாம். என்ன மாதிரியான மனநிலை இது?

அழுவது என்பது ஒரு உணர்ச்சி. அது பெண்களுக்கு மட்டுமே இருக்கவேண்டுமா? சிரிப்பது என்பதும் ஒரு உணர்ச்சியே, ஆண்கள் மட்டும் தான் சிரிக்க வேண்டுமா?

எவ்வளவு கயமைத்தனம் கொண்ட சிந்தைகள் இவை? நகரத்தில் இது கொஞ்சம் குறைவு தான். இருந்தும் முற்றிலும் துடைத்து எறியப்படவேண்டிய கேவலமான சிந்தனை அது.


பெரும்பாலான குடும்பங்களில் மருமகள் பெண் குழந்தை பெற்றால், அவளைப்  பழிப்பது பெரும்பாலும் மாமியாராகவே இருக்கிறார்கள், தானும் ஒரு பெண் என்பதை மறந்து! இங்கு கணவனின் ஈடுபாடு தேவை மனைவிக்கு ஆதரவாக. ஆனால் பலரும் இதை பேசாமல் கடந்து செல்வதே இயல்பாக நடக்கிறது இன்றும்.

அதே நேரத்தில் இன்று, பெண் உரிமை என்பது பல நேரங்களில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகிறது. ஆண் செய்யும் தவறை தட்டி கேட்பதற்கு பதிலாக, தானும் அந்த தவறை ஏன் செய்யக்கூடாது என போட்டி போடும் செயல் எப்படி சரியாகும்?

“நீங்க குடிச்சா உடலுக்கு கேடு, நாங்க குடிச்சா கலாச்சாரக் கேடா” என்ற கேள்வியும் மனோபாவமும் மிகவும் ஆபத்தானதன்றோ?

ஒரு குடும்பத்தில் தலைவன் குடித்து ஊதாரியாய் திரிந்தால் அவனை எதிர்பார்க்காமல், தன்னையும் தன் குழந்தைகளையும், ஊர் மெச்சும்படி வளர்த்து உயர்த்துவதே முழுமையான வலிமையான பெண்மையின் வெற்றியும், சிறப்பும்!!! “அவர் குடித்தார், நானும் குடித்தால் என்ன? என்பதன் பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்”.


ராணுவ போர் விமானம் ஓட்டுவது உட்பட பல துறைகளில் இன்று பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள், மிகவும் பெருமைக்குரியது தான். ஆனால் வேலைக்கு செல்லும் பல பெண்களிடம் உள்ள மனப்பான்மை, நானும் சம்பாதிக்கிறேன், நான் ஏன் அவன் சொல்றதை கேட்கணும்? நீங்கள் வேலைக்கே செல்லவில்லை என்றாலும் மிகச்சரியான கேள்வி இது. ஆனால், இந்தக் கேள்வியை விட உங்களை போன்றே எனக்கும் நியாயமான ஆசைகள் இருக்குமல்லவா? அதை யோசிக்கமாட்டிங்களா? என்று கேளுங்கள். இது இன்னும் கூர்மையான கேள்வியாக இருக்கும் என்பதே உண்மை.

அடங்கிபோக வேண்டுமென்பதில்லை; அரவணைத்து செல்லவைப்பதே பெண்மையின் வலிமை!

பெண்ணுக்கு சமமான உரிமை இல்லை, அடிமைப்படுத்தப் படுகிறாள் என்பது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வைக்கும் மிகப்பெரிய பொய், ஏமாற்று வேலை. நம் பாட்டானும் பாட்டி , பூட்டன் பூட்டி காலம் தொட்டே ஆணுக்கு நிகராக பெண் வேலை செய்து வந்திருக்கிறாள் என்பதே வரலாறு. அன்றைய உழவும், வயலும் பெண்கள் கால்கள் படாமல் ஒருபோதும் அறுவடைக்கு சம்மதித்தது இல்லை என்பதே உண்மை. நாற்று நடுவது முதல், களை எடுப்பது, அறுவடை செய்வது வரை பெண்களின் பங்களிப்பு இருந்து கொண்டே வந்துள்ளது.

ஆனால், இதை அடுத்த தலைமுறைக்கு கடத்திச்செல்ல நம் முன்னோரும், நாமும் மறந்து விட்டோமா இல்லை மறுத்து விட்டோமா என்பதே கேள்வி.

பெண்களின் பங்களிப்பு குறைந்ததால் தான் வேளாண்மையே கைவிட்டுப்போனதோ என்று கூட தோன்றுகிறது.  அய்யா நம்மாழ்வார் சொன்னபடி பெண்கள் உழவுத்தொழிலுக்கு மீண்டும் வந்தால் தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்பதையும் கவனிக்கவேண்டும்.


ஆண்கள் காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு ஓடிவிட்டால் பெரிது படுத்தாத பெற்றோர், பெண்பிள்ளைகள் ஓடி விட்டால் பித்துப் பிடித்து எந்த எல்லைக்கும் போகிறார்கள்.

எப்போதுமே குடும்பத்தின் உயர்ந்த இடத்தை பெண்களே அலங்கரிப்பர். ஆனால் அதை ஆண்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற முட்டுக்கட்டையான எண்ணம் மாற வேண்டும்.

பெண்பிள்ளைகள் இல்லாத வீடு வெறும் கூடு என்று பிற்காலத்தில் புலம்பும் கூட்டம்தான் உன்னை கள்ளிப்பால் கொடுத்து கொல்லப் பார்த்ததா என்று நன்கு பகுத்து ஆராய வேண்டும். ஆயிரம் பெண்கள், ஆண்கள் துணையின்றி சாதித்துக் காட்டியுள்ளனர், ஆனால் பெண் துணையின்றி சாதித்த ஆண்கள் மிகச்சொற்பமே!

ஆண் துணையின்றி ஒரு பெண்ணால் வாழ்ந்து காட்ட முடியும், ஆனால் பெண் துணையின்றி ஆண்கள் வாழ்வது மிகக்கடினம் என்பதே நிதர்சனமான உண்மை. இதை உணராத ஆண்களும் இல்லை, ஆனால் பொதுவெளியில் அதை ஏற்க மறுக்கிறது ஆண் மனோபாவம்.

உண்மையை ஏற்பதில் மானப்பிரச்னையோ, மனப்பிரச்சினையோ என்னவோ ?

பெண்களை குலசாமியாகவும், தேவதைகளாகவும் கொண்டாடப்  படவேண்டிய அவசியமில்லை. அப்படிதான் சங்ககால மகளிர் வாழ்ந்தனர். சக மனுஷியாக மதியுங்கள் அதுவே போதும் என்பது ஆண்களுக்கான செய்தி!!!

விடுதலை உனக்கு யாரும் கொடுக்க வேண்டியதில்லை, எடுத்துக்கொள்!

மனிதி வெளியே வா…! மனிதம் என்ற சொல்லுக்குள் நீ அடங்காதே…!

Also Read: வரலாற்றில் பெண்கள் – மகளிர் தின சிறப்புப் பதிவு!!

பெண்கள் பொது வெளியில் பாடக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை தாண்டி தனது தெய்வீக குரலால் சாதனை புரிந்த எம். எஸ். சுப்புலட்சுமி வரலாறு!

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!