மோமோ எனும் விபரீத சவால்..!! – பெற்றோர்கள் கவனத்திற்கு..!!

0
65
Credit : Malayala Manorama

சென்ற வருடம் உலகையே உலுக்கிய ப்ளூ வேல் விளையாட்டைப் பற்றி நாம் அறிவோம். ப்ளூ வேல் ஒரு தனி செயலி. அதன் மூலம் இணையத்தளத்தில் சென்று விளையாடுமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனால், மோமோ வாட்ஸாப் மூலம் பரவும் விளையாட்டு.

யார் இந்த மோமோ?

கோரமான சிரிப்பு, வெளிறிய நிறம், வீங்கி வெளியே வரத் துடிக்கும் கண்கள் எனப்  பார்த்தவுடன் மனதைப் பாதிக்கும் வகையில் இருக்கும், மோமோ என அறியப்படும் அந்த புகைப்படம் ஜப்பானில் இருந்து வந்திருக்கிறது.

மோமோவின் விரும்பத்தகாத முகமானது 2016-ல், டோக்கியோ நகரத்திலுள்ள வன்னிலா கேலரியில் (Vanilla Gallery, Japan) நடந்த கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலைக்குச் சொந்தமானது. விசித்திரமான மற்றும் அவலட்சணமான சிலை, ஓவியம், புகைப்படங்கள் போன்றவைகளின் சேகரிப்புகளை வன்னிலா கேலரி சேமிக்கிறது.

Credit : Catch News

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பேய்கள், ஆவிகள் குறித்த கண்காட்சியில் அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக ‘மோமோ’ இருந்தது. அப்போது நிறைய பேர் மோமோவுடன் படம் எடுத்துக்கொண்டனர். இன்ஸ்டாகிராமில் இப்படங்கள் நிறைய உலா வந்தன. அதில் ஒரு படத்தை எடுத்துத் தான் மோமோ என்னும் இந்த முகப்புப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

எங்கு தொடங்கியது?

கடந்த வாரத்தில். அர்ஜென்டினாவைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டாள். அதிர்ந்து போன அவளின் பெற்றோர், அவளின் அருகில் நடப்பது அனைத்தையும் பதிவு செய்யும் விதத்தில் கைபேசி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மேலும் அதிர்ந்தனர்.

அந்தச் சிறுமியின் கைபேசிக்கு தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸாப் மூலம் செய்தி வந்திருந்தது.

காவல் துறையினர் வந்து ஆய்வு செய்ததில், அந்தச் சிறுமியின் கைபேசிக்கு தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸாப் மூலம் செய்தி வந்திருந்தது. முதலில் நண்பர்களாக இருப்போம் எனத் தொடங்கி, பின் அந்தரங்கத் தகவல்களைத் திருடி, அதை வைத்துக் கொண்டு மிரட்டி, சின்னச்சின்ன டாஸ்குகள் கொடுத்துப் பின் கடைசியாக தற்கொலைக்குத் தூண்டுவதில் முடித்திருக்கிறார்கள்.

இருப்பினும், முதலில் இந்த மோமோ சவால் எந்த நாட்டில் உருவானது எனக் கண்டறிய இயலவில்லை. ஆனால், அதன் வாட்ஸாப் எண், ஜப்பான் நாட்டின் குறியீடு (+81), கொலம்பியா நாட்டின் குறியீடு (+52) மற்றும் மெக்சிகோ (+57) ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது .

Credit : Siasat

அபாயங்கள் என்ன?

முன்பின் அறியாத எண்ணுடன் தொடர்பு கொள்வது நல்லதல்ல. ஆனால், நீங்கள் ஏன் மோமோவைத் தவிர்த்து கடந்து போக வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்கள் இருக்கிறது என்கிறது காவல்துறை.

  • உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.
  • இது வன்முறையை தூண்டும். ஏன் தற்கொலை செய்யக் கூடத் தூண்டும்.
  • மனதை பாதிக்கும் வகையிலான புகைப்படங்களையோ, காணொளிகளையோ அனுப்பும்.
  • அந்தரங்கத் தகவல்களைத் திருடி, பயனர்களை மிரட்டி பணப்பறிப்பு செய்யப்படலாம்.
  • மன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோய் உள்ளிட்டவற்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படலாம்.
Credit : Parentune

பெற்றோர்கள் கவனம்

இத்தகைய விபரீத விளையாட்டுகளில் பெரும்பாலும் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகின்றனர். கைபேசி மற்றும் இணையதளங்களை குழந்தைகள் உபயோகிக்கும் போது பெற்றோர்கள் உடன் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் அடிக்கடி அவர்களைப் பெற்றோர்கள் கண்காணித்துக் கொண்டேனும் இருக்க வேண்டும்.

நம்மிடம் என்ன ரகசியம் இருக்கிறது நாம் பயப்பட ? என்ற அலட்சியம் வேண்டாம். நாம் பிறருக்குத் தெரிவிக்க விரும்பாத அனைத்தும் நம் ரகசியம் தான். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை. மோமோ செய்தி அனுப்பினால், பதில் அளிக்காமல் விட்டு விடுங்கள். அவ்வளவு தான்.