அணைக்கவே முடியாமல் 44 ஆண்டுகளாய் தொடர்ந்து எரியும் நெருப்பு – மீத்தேன் எடுத்ததால் வந்த வினை

மீத்தேன். சமகாலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுள் அதுவும் ஒன்று. எரிவாயுவாக உபயோகிக்ககூடிய இதனை எடுப்பதால் பல அபாய விளைவுகள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில் இந்த திட்டத்தை பொதுமக்கள் எதிர்த்து வருகின்றனர். சரி, மீத்தேன் ஆபத்தானதா? இதற்கு முன்னர் எங்குமே மீத்தேன் எடுக்கப்பட்டதில்லையா? அதனால் ஆபத்து நிகழ்ந்திருக்கிறதா? கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

turkmenistan-door-gate-of-to-hell-karakum-desert-gas-crater
Credit: CreativeJamie

மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தானில் இருக்கிறது கராகும் பாலைவனம். இங்கு இருக்கும் தர்வாசா என்னும் நகரத்திற்கு அருகே 1971 ஆம் ஆண்டு ரஷிய விஞ்ஞானிகள் மீத்தேன் எடுக்கும் மையத்தை அமைத்தனர். பொதுவாகவே மத்திய ஆசிய நாடுகள் பலவற்றில் எண்ணெய் வளம் அதிகம். துர்க்மேனிஸ்தானும் அதற்கு விதிவிலக்கல்ல. கராகும் பாலைவனத்திற்கு அடியில் பல மில்லியன் டன் கணக்கில் கச்சா எண்ணெய் இருக்கிறது. இதை எடுக்கத்தான் ரஷியாவோடு துர்க்மெனிஸ்தான் ஒப்பந்தம் செய்துகொண்டது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் மேற்கத்திய நாடுகளுடன் மோதலில் இருந்த நேரம் என்பதால் ரஷியா தனது ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் ஏற்படுத்த நினைத்தது. அதற்கான வாய்ப்பாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்பட்டது. கராகும் பாலைவனத்தில் உள்ள பனோரமா என்னும் இடத்தில் பெட்ரோலியம் எடுக்க ஆயத்தங்கள் செய்யப்பட்டன. திட்டத்தின் ஒருபகுதியாக அந்த இடத்தில் துளை ஒன்று போடப்பட்டு எரிவாயு சேமிக்கப்படும் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டன. ஆனால் ஒரு நாள் காலை திடீரென அந்த ஆராய்ச்சி மையம் இருந்த கட்டிடங்கள் இருந்த இடத்தில் பிரம்மாண்ட குழி ஒன்று உருவானது. இதனால் கட்டிடங்கள் பூமிக்குள் புதைந்து போயின. இந்த பிரம்மாண்ட பள்ளம் 70 மீட்டர் விட்டமும், 20 மீட்டர் ஆழமும்  கொண்டதாகும்.

gate to hell
Credit: Hürriyet Daily News

இந்த திடீர் விபத்தால் கலங்கிப்போயினர் ஆராய்ச்சியாளர்கள். ஆய்வுக்கூடங்கள், உபகரணங்கள் ஆகியவை பூமிக்கடியில் புதைந்து போனதை விட மிகப்பெரிய ஆபத்து ஒன்று இருப்பதை அவர்கள் கூடிய விரைவில் கண்டுகொண்டனர். சில நேரங்களில் பூமியின் இடைப்பட்ட அடுக்கில் வாயுக்கள் பெருமளவில் தஞ்சமடைந்து இருக்கும். அவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் மேற்பரப்பு முழுவதும், வாயுக்கள் இருந்த கீழ்பகுதிக்குள் புதையும். அப்போது பூமிக்குள் பன்னெடுங்காலமாக அடைபட்டுக்கிடந்த வாயுக்கள் வெளிவரும். இவை மிகுந்த ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதுதான் ரஷிய ஆராய்ச்சியாளர்களை விழிபிதுங்க வைத்தது.

பள்ளத்தில் தீ மூட்டிவிடுவதன் மூலம் விஷ வாயுக்கள் வெளியேறும் பட்சத்தில் அவை எரிந்து, வளிமண்டலத்தில் பரவாமல் தடுக்க முடியும் என நம்பி அந்த மாபெரும் பள்ளத்தில் தீ மூட்டப்பட்டது. அன்று துவங்கிய தீயின் பசி இன்று வரை தீரவேயில்லை. சுமார் 48 ஆண்டுகளாக இந்த தீயை யாராலும் அணைக்கவே முடியவில்லை. பூமியின் அடிப்பகுதியில் இருந்து கசியும் மீத்தேனால் தான் இந்த தீ தொடர்ந்து எரிகிறது. தர்வாசா நகரத்தின் அருகே இருக்கும் இந்த எரியும் பிரம்மாண்ட பள்ளத்தை அவர்கள் நகரத்தின் வாயில் என்று அழைக்கிறார்கள். இதனால் யாருக்கும் ஆபத்து இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பள்ளம் துர்க்மெனிஸ்தானின் மிக பிரபல்யமான சுற்றுலாத்தளங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நரகத்தின் வாயிலை காண வருகின்றனர்.  

turkmenistan
Credit: Daily Mail

சுரங்கங்களில் மீத்தேன் வாயு வெளிப்படும்போது அவை அடர்த்தி குறைந்த வாயுக்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றால் பிரச்சினை இல்லை. ஆனால் அதுவே அதிடர்த்தி கொண்ட மீத்தேன் மிகக்குறைவான நேரத்தில் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து தீ ஜுவாலைகளை ஏற்படுத்தும். இதனால் அதிகளவு வெப்பம் உண்டாகும். அந்த பிராந்தியமே இதனால் பாதிப்பிற்கு உள்ளாகும். அதே நேரத்தில் இந்த துறையில் பல பாதுகாப்பு அம்சங்களும் நவீன தொழில்நுட்பம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் உண்மை.

Featured Image Credit: © Michael Runkel/Robert Harding World Imagery/Corbis