காதல் என்றவுடன் இதயத்தின் படம் வரைந்து, இடம் வலமாக அம்பை வரைய வேண்டும். இது நம் கலாச்சாரத்தில் ஒன்றாகிப் போய் விட்டது. ஆனால், இந்த இதயத்தின் படம் வந்த கதை சுவாரஸ்யமானது. உண்மையில் இதயத்தின் குறியீட்டிற்குக்(Heart symbol) காதல் என்ற அர்த்தம் இல்லவே இல்லை என்கிறார்கள் ரோமானியர்கள்.

குறியீட்டின் கதை
பண்டைய கிரேக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சிரேனே (Cyrene) என்னும் நாட்டில், சில்பியம் (Silphium) என்னும் மலரினைப் பயிரிட்டிருக்கிறார்கள். சில்பியம் என்பது ஒருவகை மலர் செடி. அந்நாட்களில் சில்பியம் மிகுந்த செல்வாக்குள்ள பொருள். உணவு, மருந்து என எது தயாரித்தாலும் அதனோடு சில்பியம் சேர்க்கப்பட்டது. சகல நோயையும் போக்கும் சக்தி கொண்டது என்று கிரேக்கத்தின் எல்லா தெருக்களிலும் கூவிக் கூவி விற்றிருக்கிறார்கள் சில்பியத்தை.
இப்படி சில்பியம் மதிப்புப் பெற மற்றுமொரு முக்கியக் காரணமும் உண்டு. அதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்கும் மருந்தினைத் தயாரிக்கலாம் என்று மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துத் தொலைக்க ஊர் முழுவதும் சில்பியத்தை பயிரிடத் தொடங்கினார்கள் சிரேனியர்கள். இந்த மருந்தைப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் துவங்கியது கிரேக்கம். அதனாலென்ன என்கிறீர்களா? சில்பியத்தின் விதை இதயத்தின் குறியீடு போலவே இருக்குமாம். புரிந்ததா? அதே தான்.

Also Read: தனது “அந்தரங்க ஆசைக்காக” ரோம் நகரத்தையே அழித்த கொடுங்கோலன் நீரோவின் வரலாறு!!
கிரேக்கர்கள் சில்பியத்தை விற்றுப் பெரும்பணம் சம்பாதித்தார்கள். அதனாலேயே அவர்களின் நாணயங்களில் அதன் விதைகளின் ஓவியங்களைப் பொறித்திருக்கின்றனர். அதாவது நம்ம ஹார்ட் சிம்பல். இப்படி செல்வத்தினையும், மருந்தினையும் குறித்த இதயக் குறியீடு காதலுக்கான அடையாளமாய் மாறிப்போனது. அதற்கு அரிஸ்ட்டாட்டிலும்(Aristotle) ஒருவகைக் காரணம்.

இதயத்தின் மூன்றாவது அறை!!
அரிஸ்டாட்டிலை நம் எல்லோருக்கும் தெரியும். தத்துவ ஞானி. இவரும் கிரேக்கத்தைச் சேர்ந்தவரே. இவர் வெளியிட்ட மருத்துவத்தினைப் பற்றிய குறிப்பு ஒன்றில்,”மனித இதயம் மூன்று அறைகளுடனும், அதன் மையப்பகுதியில் கூம்பு போன்ற வடிவத்துடனும் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதற்கும் பல எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. ஆளுக்கு ஒரு வடிவத்தினை வரைந்து அப்படித் தான் இதயம் இருக்கும் என சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது 14 – ஆம் நூற்றாண்டில் தான். அதை வைத்தது, கைடோ டா விஜெனோவா (Guido da Vigevano). இந்த எளிமையான பெயரைக் கொண்டவர் ஒரு மருத்துவர். பல மனித உறுப்புகளின் வடிவத்தையும், அவை இயங்கும் விதத்தினைப் பற்றியும் உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர். பல வருட ஆராய்ச்சிக்குப் பின்னர் மேலே சொன்ன மருத்துவரின் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. அவரின் மனித இதயம் தொடர்பான ஓவியங்கள் அரிஸ்டாட்டில் கூற்றோடு ஒத்துப்போனது.

அதன் பின்னால் மறுமலர்ச்சிக் காலத்தின் போது இதயத்தின் குறியீடு காதலுக்குரிய சின்னமாக மாறிப் போனது. கையில் கரித்துண்டு கிடைத்தால் போதும் காதலிக்க தொடங்கினார்கள் இத்தாலியர்கள். காதல் அரசின் இந்தச் சின்ன ஒதுக்கீட்டைப் பற்றிப் பல நாடுகளுக்கும் தகவல்கள் காட்டுத்தீ போலப் பரவின. எல்லா நாட்டிலும் காதல் இருக்குமல்லவா? அதே போல் கரித்துண்டும் கிடைக்கும் தானே? ஐரோப்பா, அமெரிக்கா என எல்லா கண்டங்களிலும் இந்தச் சின்னம் காதலுக்கானது என்ற முடிவிற்கு, 15 – ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே வந்திருந்தனர். சுவற்றில் வரைந்ததெல்லாம் போதும் என்று காகிதங்கள் வழியாக இக்குறியீடு பயணித்தது. கூடவே வசீகரிக்கும் சொற்களுடனும். அதற்கும் ஒரு விடிவு காலம், காதல் அட்டைகள் மேற்கத்திய நாடுகளில் தோன்றிய போது வந்தது. இப்போது அலைபேசி வாயிலாக அலைகிறது இதயம். ஊடகம் மாறலாம் ஊடுபொருள் மாறாதல்லவா?