வடக்கு நார்வே பகுதியில் உள்ளது மேற்கு சம்மராய் (Sommarøy) தீவு. ஆர்டிக் வட்டத்தின் வட திசையில் இருக்கும் இந்த தீவில் கடந்த 21 ஆம் தேதி தான் கோடைகாலம் துவங்கியது. இனி அடுத்த ஜூலை 26 வரை இங்கே சூரியன் அஸ்தமிக்காது. அதனால் இங்குள்ள மக்கள் தங்களது தீவை உலகின் நேரமில்லாத பகுதியாக அறிவிக்க என்று கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

வினோத தீவு
சம்மராயின் மக்கள்தொகை 500 க்கும் குறைவுதான். இங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆமாம். நவம்பர் வந்துவிட்டால் இவர்களுக்கு நீண்ட இரவு வந்துவிடும். அப்போதுதான் இங்கு குளிர்காலம் துவங்கும். ஜனவரி வரையில் இங்கே சூரியன் உதிக்காது. இதனால் வீட்டிற்குள்ளேயே இம்மக்கள் முடங்கிவிடுகின்றனர்.ஆனால் கோடைகாலம் வந்துவிட்டதென்றால் இவர்களை கையிலேயே பிடிக்க முடியாது. 24 மணி நேரமும் பகல் போலவே இருக்கும். முழுநாளும் சூரிய ஒளி இருந்தால் எப்படி இருக்கும்? இங்கு இரவு 3 மணிக்கு சிறுவர்கள் இங்கே கால்பந்து விளையாடுகிறார்கள். மக்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
நேரமில்லாத பகுதி
இங்குள்ளவர்கள் உலகில் மற்ற பகுதிகளில் வசிக்கும் உபயோகிக்கும் கடிகாரம் தங்களுக்கு பயனளிக்காது என்கின்றனர். இதனாலேயே இவர்கள் நேரத்தை விரும்புவதில்லை. இப்பகுதி எம்.பி. இடம் இதுகுறித்து கோரிக்கை ஒன்றையும் இம்மக்கள் வைத்துள்ளனர். இந்த வினோத தீவைக்கான ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்தக்காலகட்டத்தில் வருகின்றனர்.
சம்மராயிற்கு வந்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு கடிகாரம் சுமையாகி விடுகிறது. ஆமாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது மணி இரவு 11 என்று காண்பித்தால் பகீரென்று இருக்காது? இதனாலேயே இந்த தீவின் பாலம் ஒன்றில் சுற்றுலாப்பயணிகள் தங்களது கைக்கடிகாரத்தை கட்டிவிட்டு போகிறார்கள்.

மக்கள் எப்போதும் இயற்கையை மையமாகவே வைத்து வாழ்கின்றனர். நம்முடைய கடிகாரங்கள் பூமியில் விழும் சூரிய கதிர்களைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் இயற்கை சில சமயங்களில் ஆச்சர்யங்களை அளிக்கும். அப்போது மனிதனின் கணக்கீடுகள் எல்லாம் பொய்த்துப்போகிறது. விலங்குகள் இவ்வகையில் மனிதர்களைவிட மேம்பட்டவை. தன்னுடைய நாள் கணக்கை இயற்கை தன்னை எப்போது அனுமதிக்கிறதோ அப்போதுதான் துவங்கும். இந்த புரிதல் தான் இப்போது சம்மராய் மக்களுக்கு வந்திருக்கிறது.