மனிதர்களை விட உயரமான உடலமைப்பு கொண்ட பனிமனிதன் இமயமலையில் வாழ்வதாக பன்னெடுங்காலமாக இந்திய மக்கள் நம்பிவருகின்றனர். இதுகுறித்து நேபாள மக்களுக்கு நம்பிக்கை அதிகம். அவர்கள் இந்த பனிமனிதனை எட்டி என்று அழைக்கிறார்கள். முழுவதும் பனி சூழ்ந்த பகுதியில் மட்டுமே வாழும் பனிமனிதனைப் பற்றிய கதை உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால் இதுவரை அதனை நம்பத்தகுந்த ஆதாரங்கள் எதுவுமே கிடைக்காததால் இதெல்லாம் பித்தலாட்டம் என்றே பலர் சொல்லிவந்தனர். இந்நிலையில் பனிமனிதனின் காலடித்தடம் ஒன்றின் புகைப்படத்தை இந்திய இராணுவமே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இமயமலையின் மாகலு – பருன் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று மலையேற்றத்தில் ஈடுபடும் பொது ராட்சத கால்தடம் ஒன்றினைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 32 இன்ச் நீளமும், 15 இன்ச் அகலமும் கொண்டுள்ள இந்தக் கால்தடத்தை புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர் இந்திய வீரர்கள்.
இதற்கு முன்
இமயமலையில் பனிமனிதனைப் பார்த்ததாக இதற்குமுன்னரே பலபேர் தெரிவித்திருக்கிறார்கள். அதில் சிலவற்றில் விளங்காத புதிராக சில சாட்சியங்கள் இருந்தாலும் மற்றவையெல்லாம் கர்ண பரம்பரைக் கதைகளே. எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணம் மேற்கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த சில மலையேறிகளிடம் ஹென்றி என்ற நிருபர் கடந்த 1921-ம் ஆண்டு பேட்டி எடுத்தார். அவர்கள் பனிமலைப் பகுதியில் பெரிய கால் தடத்தை பார்த்ததாகத் தெரிவித்தனர். அப்போதிருந்தே பனிமனிதன் பற்றிய பேச்சுகள் வரத்தொடங்கிவிட்டன.
1942-ம் ஆண்டு இமயமலையில் பயணம் செய்த இருவர், பனிமலைப் பகுதியில் இரு ராட்ச உருவம் நடந்து சென்றதை பார்த்ததாக கூறினர். அந்த உருவங்கள் 8 அடிக்கு குறைவாகவும், தலை முழுவதும் நீண்ட முடிகளுடனும், மடிந்த காதுகளுடனும், உடலில் செம்பழுப்பு நிறத்திலான முடியும் இருந்ததாகத் தெரிவிக்க பனிமனிதன் விஷயம் தீவிரமாக பேசப்பட்டது.
கடந்த 1986-ம் ஆண்டு அந்தோணி உல்ட்ரிட்ஜ் என்ற மலை ஏறும் வீரர், 500 அடி தூரத்தில் பனிமனிதனைப் பார்த்ததாக கூறினார். அதற்கு சாட்சியாக புகைப்படம் ஒன்றையும் காட்டினார் உல்ட்ரிட்ஜ். இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர் குறிப்பிட்ட இடத்தில் சென்று சோதனை நடத்தினர். அங்கு கருங்கல் ஒன்றினைத்தவிர பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை. தூரத்தில் இருந்து பார்க்கும்போது அந்த கரும்பாறை தான் பனிமனிதனைப் போல் காட்சியளித்திருக்கிறது என்று அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.
மேற்கண்ட நிகழ்சிகள் எல்லாம் சுற்றுலா/மலையேறிகள் கண்ட காட்சிகளின் அடிப்படையில் நிகழ்ந்தவை. ஆனால் தற்போது இந்திய இராணுவமே தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பனிமனிதனின் காலடித்தடத்தை பதிவு செய்திருக்கிறது என்பதால் மக்களிடையே குழப்பமும் ஆர்வமும் ஒருங்கே அதிகரித்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவிவருகிறது.