இன்று உங்களுக்கு மிக பிடித்த உணவுகளில் சில, ஒரு காலத்தில் ஏதோ ஒன்றை தயார் செய்யும் போது, ஏற்பட்ட பற்றாக்குறைகளாலும், தற்செயலாக நிகழ்ந்ததாகவும், ஏன் போர்க்கால சூழலிலும் கூட உண்டானவைகளே. அவ்வாறு உருவான சில சுவையான உணவுகள் இங்கே:
சாக்லேட் குக்கீஸ் (Chocolate Chip Cookies)

ரூத் வேக்ஃபீல்ட், தனது விருந்தினர்களுக்காக சாக்லேட் குக்கீஸ்களை தயார் செய்து கொண்டிருந்தார். சாக்லேட் பவுடர் தீர்ந்துபோனது நினைவிற்கு வர, அவர் ஒரு நெஸ்லே சாக்லேட்டை நொறுக்கி கலந்துவிட்டார். சில சாக்லேட் துண்டுகள் லேசாக மட்டும் உருகி இருந்ததால் அவருக்கு ஏமாற்றமாகியது. ஆனால் வந்திருந்த விருந்தினர்கள் அந்த தயாரிப்பை விரும்பி சாப்பிட்டார்கள். அடுத்து நிகழ்ந்ததுதான் ஆச்சரியமான விஷயம். அவரது இந்த செய்முறை ஒரு பாஸ்டன் செய்தித்தாளில் வெளிவந்தது. இதன்மூலம் நெஸ்லேவின் சாக்லேட் பார் விற்பனை அதிகரித்தது. பின்னர், நெஸ்ட்லே நிறுவனம், ரூத் தனது செய்முறையில் நெஸ்ட்லே சாக்லேட்டை குறிப்பிட்டதற்கான வெகுமதியாக, நெஸ்ட்லே சாக்லேட்களை வாழ்நாள் முழுவதும் வழங்கியது.
குழம்பி (Coffee)

காபி எத்தியோப்பியாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது. கால்டி என்ற ஆடு மேய்ப்பவர் தனது ஆடுகள் குறிப்பிட்ட மரத்தின் பெர்ரிகளை சாப்பிட்ட பிறகு இரவில் தூங்காமல் இருப்பதையும், மிகவும் சுறுசுறுப்பாக ஆற்றல் மிக்கவையாகவும் இருப்பதை கவனித்திருக்கின்றார். அவர் இதை ஒரு உள்ளூர் மடாலயத்திற்கு சென்று அங்கிருப்பவர்களிடம் தெரிவித்திருக்கிறார். உடனே ஒரு துறவி காப்பிக் கொட்டைகளை சுடுநீரில் கொதிக்கவைத்து குடித்திருக்கிறார். காப்பியைப் பற்றிய ஞானம் உலகத்திற்கு வந்தது அப்போதுதான். காலம் கி.பி 800. அதனை தொடர்ந்து காபி கொட்டைகள் அரேபிய தீபகற்பத்தை அடைந்தது.
சீஸ் பப்ஸ் (Cheese Puffs)

சீஸ் பஃப்ஸ் நாம் அறிந்து கொள்வதற்கு முன்பே, அவை உண்மையில் விலங்குகளுக்கான உணவாகும்! 1930 களில், அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த எட்வர்ட் வில்சன், ஓரளவு சமைத்த விலங்கு தீவனத்தை, பிசைந்து வாய்த்த சோள மாவில் வைத்து ருசிக்க முடிவு செய்தார். மேலும் சில சுவையூட்டும் காரணிகளை சேர்ப்பதன் மூலம், அது உண்மையில் மோசமானதல்ல என்பதை உணர்ந்தார் மற்றும் ஒரு நல்ல சிற்றுண்டி செய்ய முடியும் என்றும் எண்ணினார். பின்னர், அவர் பணியாற்றிய ஃப்ளாக்கால் கார்ப்பரேஷனின் நிறுவனர்கள் அந்த தயாரிப்புக்கு காப்புரிமை பெற்றனர். இப்போது 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்படுகின்றது.
ஐஸ் (Ice)

11 வயதான “ஃபிரான் எப்பர்சன்” தண்ணீர் மற்றும் சோடா தூள் கலவையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அதனை கிளறிக்கொண்டிருந்த மரக் குச்சியுடன் மறந்து அப்படியே விட்டுவிட்டார். ஒரே இரவில் அது உறைந்து போனது. அடுத்தநாள் அதனைப் பார்த்தபோது, 11 வயது நிரம்பியவர் செய்வதைப் போல, அவர் அதை லேசாக சுவைத்துப் பார்த்திருக்கிறார். பின்னர் அவர் அது ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு என்பதை உணர்ந்தார். உடனே தனது சுற்றுப்புறத்தில் ‘எப்சிகல்ஸ்’ விற்பதன் மூலம் தொடங்கி பின்னர் பொழுதுபோக்கு பூங்காக்களில் விற்கத் துவங்கினார். மேலும் அவர் தனது தயாரிப்புக்கு காப்புரிமையும் பெற்றார். அதன் பெயரை 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பாப்ஸிகல்ஸ்’ என்று மாற்றினார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.
நியூடெல்லா (Nutella)

பியட்ரோ ஃபெரெரோ என்ற இத்தாலிய பேக்கர், 1940 களில் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட பற்றாக்குறையின் விளைவாக சாக்லேட்டிற்கு மாற்று ஒன்றை உருவாக்க முயன்றார். ஹேசல்நட், சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை கோகோ ஆகியனவற்றை கலந்தபோது இப்படி ஒரு சிறந்த இனிப்பு உருவாகும் என்று அவர் நினைத்திருக்கவில்லை.
அடுத்த பதிவில் மேலும் சில உணவுகள் எப்படி உருவானது என்று பார்க்கலாம்.