பனிப் பிரதேசம் என்றவுடன் நம் கண் முன் தோன்றுவது அதன் வெண்மை நிறம் தான்.. எங்குப் பார்த்தாலும் வெண்மை நிறத்தில் பனிப் பாறைகள் பரவிப் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அண்டார்டிகாவில் உள்ள உக்ரைனின் வெர்னாட்ஸ்கி ஆராய்ச்சி தளத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் (Ukraine’s Vernadsky Research Base) அங்கு சற்று வித்தியாசமான நிறத்தில் பனிப் பாறைகளைக் கண்டனர். எப்போதும் பளீரென வெள்ளை நிறத்தில் இருக்கும் பனி, அதன் இயல்புக்கு மாறாக இரத்த சிவப்பு நிறத்திலிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பார்ப்பதற்கு ஏதோ பேய் படத்தில் காட்டப்படும் கோரமான நிகழ்வு போல இருக்கும் இந்த நிகழ்விற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா?

அண்டார்டிக் நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட போது உக்ரைனின் தேசிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த கடல் சூழலியல் நிபுணர் ஆண்ரே சோடோவ் (Andrey Zotov) என்பவர் தான் இந்த படங்களை எடுத்து தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
ஏதோ பல உயிர்களைக் கொன்று குவித்து அவற்றின் இரத்தத்தைத் தெளித்தது போல யூகிக்க வைக்கும் இந்த நிகழ்விற்குக் காரணம், நாம் நினைப்பது போல எந்த ஒரு ராட்சத உயிரினமும் கிடையாது. நுண்ணோக்கியால் மட்டுமே காணக்கூடிய அளவு மிக மிகச் சிறிய கிளமைடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்ற பாசி (Algae) தான் இதற்குக் காரணம்!
கிளமைடோமோனாஸ் நிவாலிஸ், ஆர்க்டிக் முதல் ஆல்பைன் பகுதிகள் வரை பூமியின் அனைத்து பனிக்கட்டி மற்றும் பனிப் பிரதேசங்களிலும் பரவிக் காணப்படும் உயிரிகள் !
கிளமைடோமோனாஸ் நிவாலிஸ்
இந்த நுண்ணிய பாசிகள் ஒரு வகை ஒற்றை செல்லுலார் கடற்பாசிகள். இவை ஆர்க்டிக் முதல் ஆல்பைன் பகுதிகள் வரை பூமியின் அனைத்து பனிக்கட்டி மற்றும் பனிப் பிரதேசங்களிலும் பரவிக் காணப்படும் உயிரிகள். இவை முதலில் பச்சை நிறமாகத் தான் இருக்கும். இவற்றின் ஒளிச்சேர்க்கை குளோரோபிளாஸ்ட்களால் தான் இவை பச்சை நிறத்தில் இருக்கும். இவற்றிற்கு Flagella எனப்படும் வால் போன்ற அமைப்பு உள்ளது. அதாவது பார்ப்பதற்கு வால் இருப்பது போல இருக்கும்.அந்த வால் சுழலும் போது அவை அந்த பாசியையும் சுழற்றி அதை முன்னோக்கிச் செலுத்தும். கிட்டத்தட்ட சிறிய சாட்டை போலத் தான் இந்த வால் இருக்கும்.இதன் மூலம் பாசியால் நகரவோ நீந்தவோ முடியும்.
நிறமிகள்
இந்த உயிரிகள் நன்கு வளர்ந்த பின்பு அவற்றின் நகரும் திறனை இழந்து, மிக மோசமான தட்பவெப்பநிலையில் கூட சமாளித்து வாழும் தகவமைப்பைப் பெற்று விடும். இந்த வளர்ச்சியில் இரண்டாம் நிலை காப்பு செல் சுவர் மற்றும் சிவப்பு கரோட்டினாய்டுகளின் (Carotenoids) அடுக்கு ஆகியவை அடங்கும்.இந்த கரோட்டினாய்டு தான் பூசணிக்காய் மற்றும் கேரட்டின் ஆரஞ்சு நிறத்திற்குக் காரணமான நிறமி. இந்த பாசிகள் மனிதர்களுக்கு நச்சுத்தன்மையுள்ளவை என்பதால் இந்த பனியை எக்காரணம் கொண்டும் சாப்பிடக் கூடாது.

சூரிய ஒளியில் மாற்றம்
மிக மோசமான பனிக் காலங்களில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும் இவற்றிற்கு, இவற்றை மூடியிருக்கும் பனியை மிருதுவாக்கும் அளவு சூரிய ஒளி கிடைக்க ஆரம்பித்தால் போதும். சூரிய ஒளி கிடைத்தவுடன் இந்த பாசிகள் விழித்துக் கொள்ளும். இவை அவற்றின் தொகையில் விரைவாக அதிகரிக்க முயற்சி செய்யும். ஆனால் அதற்குப் பனி உதவாது. உறைபனி நீர் தான் தேவை.
கோடைக் காலத்தில் பாசியில் உள்ள கரோட்டினாய்டுகள் அதிக வெப்பத்தை உறிஞ்சி, பாசியை சூரியனின் புற ஊதா கதிர்களிடம் இருந்து காப்பாற்றுகின்றன. இதன் மூலம் இந்த பாசிகள் மரபணு மாற்றம் நிகழும் என்ற ஆபத்து இல்லாமல் சூரிய ஒளியில் இருக்கும் ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள முடியும்.இப்படி கரோட்டினாய்டுகள் மூலம் வெப்பம் அதிகரிப்பதால்,பாசிகளால் எளிதாகச் சுற்றி இருக்கும் பனியை, தான் செழித்து வளர தேவைப்படும் உறைபனி நீராக உருக்க முடியும்.
அபாயங்கள்
இது பாசிகளைப் பொறுத்தவரையில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு நன்மை தான் என்றாலும் உண்மையில் சில கெடுதல்களை இருக்கத் தான் செய்கின்றன.
காரணம் இது காலநிலை மாற்றத்திற்கும் புவி வெப்பமயமாதலுக்கும் வழிவகுக்கும். ஏனெனில் இவை சூரிய ஒளியைக் குறைவாகவே பிரதிபலித்து, அதிக வெப்பத்தை உறிஞ்சி பனியை வேகமாக உருக்குகிறது. இரத்த சிவப்பு நிறம் அதிகமாக அதிகமாக வளர்ந்த முதிர்ந்த பாசிகள் எண்ணிக்கையில் அதிகமாகிவிட்டன என்று அர்த்தம். விளைவு உறிஞ்சப்படும் சூரிய ஒளி வெப்பமும் அதிகமாகும். பாசிகளின் எண்ணிக்கையும் இன்னும் வேகமாக அதிகமாகும். அவ்வளவு வேகமாகச் சுற்றியுள்ள பனியும் உருகி, புவி வெப்பமயமாதலும் அதிகமாகும்.
அலாஸ்கன் பனிக்கட்டிகளில் வாழ்ந்த நுண்ணுயிரிகள், அவை இருந்த இடங்களில் பனி உருகியதில்,ஆறில் ஒரு பங்கு அளவிற்குப் பங்கு வகித்துள்ளன!!
ஆய்வு முடிவுகள்
2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பனி பாசிகள், பனியிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியின் அளவை, அதன் உருகும் காலங்களில் 13 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று விளக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி பிரதிபலிக்கப்படவில்லை என்றால் அது அப்படியே பூமியிலேயே தங்கி வெப்பமயமாதல் அதிகமாகும். 2017 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், அலாஸ்கன் பனிக்கட்டிகளில் வாழ்ந்த நுண்ணுயிரிகள், அவை இருந்த இடங்களில் பனி உருகியதில்,ஆறில் ஒரு பங்கு அளவிற்குப் பங்கு வகித்ததாகக் கணக்கிட்டனர். இந்த நுண்ணுயிரிகளில் கிளமைடோமோனாஸ் நிவாலிஸ் பாசியும் அடங்கும் என்பதே வருத்தமான விஷயம்.இதன் படி உருகிய உறைபனி நீர் இருந்த இடங்கள், 50 சதவீதம் அதிகமான பாசிகள் வளர்ச்சிக்கு வழிவகுத்தன. அதிக பாசிகள் என்றால் அதிக அளவு வெப்பம் தக்கவைக்கப்படுவதோடு இன்னும் இன்னும் பாசிகள் பெருகி இன்னும் இன்னும் வெப்பம் உறிஞ்சப்படும்.

அண்டார்டிகாவில் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கோடைக் காலம் என்பதால் 2019 ஆம் ஆண்டு வெப்பம், எப்போதையும் விட அதிக அளவு காணப்பட்டது.இதனால் மிக அதிகமான அளவிற்குப் பனிப் பாறைகள் உருகியதால் அதிக பாசிகள் உருவாகி அவை இன்னும் இன்னும் பனியை உருக்கின. விளைவு முதிர்ந்த பாசிகளின் அளவு, கடந்த காலங்களை விட அதிகரித்து,பனிப் பாறைகள் எல்லாம் இரத்த நிறத்தில் காட்சி அளித்துள்ளது.
மொத்தத்தில் அண்டார்டிகா பனிப்பாறைகளின் இந்த இரத்த நிறம், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதை சொல்லாமல் சொல்லியுள்ளது!! அதனால் வெப்பமயமாதலை தடுக்க இனியாவது எல்லா நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும்!