விடாமல் தொந்தரவு செய்த வண்டு! கொசு அடிக்கும் பேட்டால் வீட்டையே கொளுத்திய 80 வயது தாத்தா..!!

Date:

மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா? என தமிழில் ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? இதற்கு நிஜ எடுத்துக்காட்டு சொல்வதற்கு பத்துப் பொருத்தமும் பக்காவாக பொருந்தும்படி ஒரு சம்பவம் பிரான்சில் நடந்துள்ளது.

80 வயது தாத்தா ஒருவர் டோர்டோக்னே (Dordogne) வில் உள்ள தனது வீட்டில் எப்போதும்போல மத்தியான உறக்கத்தில் இருந்திருக்கிறார். அவரை சீண்டிப் பார்த்திருக்கிறது ஒரு வண்டு. கடித்தால் கூட பரவாயில்லை ஆனால் அந்த வண்டு ங்கோங்.. என சத்தமிட்டு தாத்தாவை காண்டாக்கியிருக்கிறது.

பொருத்தது போதும் பொங்கியெழு என எழுந்த தாத்தாவின் கையில் அகப்பட்டது ஒரு கொசுப்பேட். தூக்கம் கலைந்த எரிச்சலும், வண்டின் சப்தமும் தாத்தாவை மேலும் டென்ஷனாக்க, எப்படியும் வண்டிற்கு இன்று கதிமோட்சம் கொடுத்துவிடவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அதை துரத்த ஆரம்பித்திருக்கிறார் தாத்தா.

வீட்டைச்சுற்றி வேட்டைக்காரன் மாதிரி லொங்கு லொங்கென்று கொசுப் பேட்டுடன் ஓடிக்கொண்டிருக்க அந்த வண்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது. வெற்றிவேல், வீரவேல் என வீட்டிற்குள் நுழைந்த தாத்தா பேட்டால் எங்கேயோ தட்ட சிறிய தீப்பொறி உண்டாகியிருக்கிறது. அதுமட்டும் தான் தாத்தாவால் பார்க்க முடிந்தது. டமார் என ஒரு சப்தம். வீடு பற்றியெரியத் துவங்கியது.

என்ன ஆச்சு என்பதைத் தெரிந்துகொள்ள, தாத்தா கொசு பேட்டுடன் வீட்டைச்சுற்றி வருகையில் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக வீட்டிற்குள் அப்போது எரிவாயு கசியத் துவங்கியிருக்கிறது. இது தெரியாமல் வண்டினை வதைக்க ஓடிவந்த தாத்தா டப்பென்று எதையோ அடிக்க, மேற்கூரை பற்றியெரியத் துவங்கிவிட்டது.

தாத்தா சிறிய காயங்களுடன் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சியளித்தாலும் இத்தனைக்கும் காரணமான அந்த வண்டு எஸ்கேப் ஆகிவிட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இதென்ன பிரமாதம் இதற்கும் மேலே சுவாரஸ்யமான சம்பவத்தை செய்திருக்கிறார் பிரேசில் ஆசாமி ஒருவர்.

பிரேசிலின் தெற்குப் பகுதியில் உள்ள நகரமான இனியாஸ் மார்கேஸ்-ல் (Enéas Marques) சென்ற ஆண்டு ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. சீசர் சிமிட்ஸ் (Cesar Schmitz) என்னும் பெயர் வைத்த ஆசாமி தனது மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கையில் தங்களது வீட்டின் பின்புறத்தில் கரப்பான்பூச்சி கூட்டுக்குடும்பம் நடத்துவதாகவும் தனக்கு அச்சமாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார் அவரது மனைவி.

பெண்களுக்கு கரப்பான்பூச்சி என்றால் பயம் என்பது உலக நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும் என்ற அரிய தகவலை தெரிந்துகொண்டு அடுத்த பாராவிற்குச் செல்லவும்.

மனைவியே சொல்லிவிட்டார் இனி கரப்பான் பூச்சியே இருக்காமல் செய்கிறேன் என சூளுரைத்த அந்த கணவர், நேரடியாக பெட்ரோலும் தீப்பெட்டியுமாய் பின்புறத்திற்கு ஓடியிருக்கிறார். சிறிய துளை ஒன்று தரையில் இருப்பதை பார்த்த அந்த கணவருக்கு மூளையின் ஒரு மூளையில் தீப்பொறி பறந்தது.

அவர் செய்த அடுத்தவேலை அந்த துளை வழியாக மொத்த பெட்ரோலையும் ஊற்றி தீயைப் பற்ற வைத்தது தான். முதலிரண்டு குச்சிகளுக்கு தேமே என்றிருந்த அந்த இடம், மூன்றாம் குச்சி மண்ணில் விழுந்ததும் மொத்தமாக வெடித்துச் சிதறியது. உண்மைதான். வேண்டுமென்றால் கீழேயுள்ள வீடியோவைப் பாருங்கள்.

மனைவிடம் நற்பெயர் வாங்க எத்தனையோ வழி இருக்கையில், தீயோடு என்ன விளையாட்டு? என நெட்டிசன்கள் அப்போதே அறிவுரை அண்டாவை சமூக வலைத்தளங்களில் பொங்கவைத்தனர் என்பது வரலாற்று உண்மை.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட் போடுங்க… அப்டியே உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க…

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!