மனிதனால் புரிந்துகொள்ள முடியாத ஒரே ஒரு விஷயம் இயற்கைதான். கண்ணைக்கட்டிக்கொண்டு யானையை தடவிப்பார்த்து பதில்சொன்ன கதைதான் மனிதனின் இயற்கைசார் ஆராய்ச்சிகள். 87 லட்சம் உயிரினங்கள் இருக்கும் இதே உலகில் நமக்கு 1 சதவிகித உயிரனம் பற்றிக்கூட முழுமையாக தெரியாது. அதிர்ச்சியளித்தாலும் அதுதான் உண்மை. அப்படி வெகுநாட்கள் இந்த பூமியில் வாழ்ந்தும் மனிதர்களுக்கு பரிட்சயம் இல்லாத 7 உயிரினங்களை பற்றிப்பார்ப்போம்.
1.ஜெப்ரோஸ்

பெரும்பாலும் பாலைவனப்பகுதியில் வாழும் இது நீண்ட காதுகளை உடையது. ஆறாண்டுகள் வரையும் வாழக்கூடிய ஜெப்ரோஸ் அரேபியா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் இருக்கின்றன. கங்காருவைப்போன்று கால்கள் கொண்ட இது மணிக்கு 24 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இதன் கேட்கும் திறம் மற்ற பாலைவன விலங்குகளை விட மிக அதிகம்.
2. ஜியோடக்ஸ்

விலங்குகள் உலகத்திலேயே மிகவும் அதிக ஆயுட்காலம் கொண்ட உயிரினங்களில் ஜியோடக்சும் ஒன்று. பார்க்க ஏதோ கிராபிக்ஸ் மாதிரி இருந்தாலும் இவை உண்மையிலேயே இருக்கத்தான் செய்கின்றன. உண்ணக்கூடிய இவை அதிகமாக மேற்கு கனடாவில் வாழ்கின்றன. அதிகபட்சமாக 15 முதல் 20 சென்டிமீட்டர் வரை வளரக்கூடிய இவை 140 வருடங்கள் உயிர்வாழக்கூடியவை. ஆய்வுக்காக எடுக்கப்பட்ட மாதிரிகள் சில 168 ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கிறதாம்.
3. ஆஸ்ட்ராகோட்ஸ்

ஆஸ்ட்ராகோட்சும் ஒருவித கடல் உயிரினம் தான். ஒருகாலத்தில் 70,000 ஆக இருந்த இவை தற்போது 13,000 தான் இருக்கின்றன. 1 முதல் 30 மில்லிமீட்டர் வரை வளரக்கூடிய இது மற்றுமொரு சிறப்பையும் பெற்றிருக்கிறது. அதன் உடலோடு ஒப்பிடும்போது அதிக விந்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன் அதற்கு இருக்கிறது. உலகின் வேறந்த உயிரினத்திற்கும் இந்த அளவு “திறன்” கிடையாதாம். மற்றுமொரு கூடுதல் தகவல் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பிடிக்கப்பட்ட ஆஸ்ட்ரோகோட்ஸ் ஒன்று தான் உலகின் மிகப்பழைமையான ஆணுறுப்பைக் கொண்டுள்ள உயிரினமாம்.
4. டஃப்டட் மான்

மானின் வகை தான் என்றாலும் இவை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வசிக்கின்றன. மியான்மர் மற்றும் மத்திய சீனப் பகுதிகளில் இவை அதிகமாக வாழ்கின்றன. உணவிற்காக அதிகம் வேட்டையாடப்படும் இனங்களில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் ஜோடிகளாகவே காட்டில் உலவித்திரியும் இந்த வகை மான்கள் மிகவும் அழகு வாய்ந்தவை. 1988 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த வகை மான்கள் 3 முதல் 5 லட்சம் எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
5.மயில் சிலந்தி

பெயரே வித்தியாசமாக இருக்கிறதா? ஆமாம். இந்த சிலந்தியின் வயிற்றுப் பகுதி முழுவதும் வண்ணங்களால் நிரம்பியிருக்கிறது. அதிக வண்ணம் இருக்கும் பெண் சிலந்தியை அடைய ஆண் சிலந்திகள் போட்டியிடுமாம். ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் இந்த வகை சிலந்திகள் சீனாவிலும் ஒன்றிரண்டு இருக்கின்றன. இதில் அதிர்ச்சி என்னவென்றால் இந்த உலகத்தில் தற்போது எஞ்சி இருக்கும் மொத்த மயில்சிலந்திகளின் எண்ணிக்கை வெறும் 80 மட்டுமே.
6. அக்ஸலோடிஸ்

மெக்ஸிகோ நாட்டின் மிகப் பிரபல்யமான உணவு இதுதான். பார்ப்பதற்கு சாலமாண்டர் போலவே இருக்கும் இது ஆக்ஸலோடிஸ் எனப்படுகிறது. இதனை மெக்சிகோவில் நடக்கும் மீன் என்றும் அழைக்கின்றார்கள். இதைப்பற்றிய வெகு சுவாரசியமான செய்தி ஒன்று உள்ளது. தன்னுடைய மொத்த ஆயுளில் இது அதிக காலங்களை இளமைப் பருவத்தில் கழிக்கிறது. அதாவது பிறந்ததிலிருந்து இளமைப் பருவத்தை அடையும் வரை குறைந்த காலமும், இளமைப் பருவத்தில் அதிக காலம் உயிர் வாழும் வினோத பிராணி இந்த ஆக்ஸலோடிஸ் .
7. கோபிளின் ஷார்க்

கடலின் அடி ஆழத்தில் மட்டுமே வசிக்கக்கூடிய இந்த அரிய வகை இனம் மூன்று முதல் நான்கு மீட்டர் வரை வளரக்கூடியது. பூமியில் இந்த சுறா இனம் தோன்றி சுமார் 125 மில்லியன் ஆண்டுகள் ஆவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பிங்க் நிறத்தில் இருக்கும் இதன் தோல் மற்றும் தாடை பகுதிக்கு மேலே நீட்டிக்கொண்டிருக்கும் வினோத மூக்குப்பகுதி இதனை மற்ற சுறாக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. மேலும் இன்றைய உலகில் மிட்சுகர்னிடே (Mitsukurinidae) குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரே உயிரினம் இந்த கோப்ளின் சுறா மட்டுமே.
Also Read: நீங்கள் இதுவரை பார்த்திராத 10 வெள்ளை நிற விலங்குகள் – இவற்றைப் பார்ப்பது உண்மையில் அதிர்ஷ்டமா?