இந்தியாவிற்கு வட கிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவமழை போல உலகம் முழுவதும் வெவ்வேறு மாதங்களில் மழைப்பொழிவு நடைபெறுகிறது. பெருங்கடல்களின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் காரணமாக கடல் நீர் ஆவியாகி மேகமாகிறது. இம்மேகக்கூட்டங்கள் காற்றின் இடப்பெயற்சியினால் குளிர்ந்து மழையினைத் தருகின்றன. தற்போது பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பது மழைப்பொழிவினைக் கடுமையாக பாதிக்கிறது. இவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆறு மாதம் பூமியின் மீது பெய்ய வேண்டிய மொத்த மழை உண்மையில் 12 நாட்களில் பொழிகிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம்
அமெரிக்காவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சி மையமான NCAR , மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையங்கள் மூலம் 1999 முதல் 2014 வரை பொழிந்த மழையின் அளவுகள் குறித்த தரவுகள் பெறப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
ஆய்வின் முடிவு சில வினோதமான கூற்றுக்களை முன்வைக்கிறது. உதாரணமாக ஆண்டின் பாதியளவு பொழிய வேண்டிய மொத்த மழையும் 12 நாட்களில் பொழிந்து விடுகிறது. சில நாடுகளில் பருவமழை 3 மாதங்கள் நீடித்தாலும் அந்த நாட்களில் மழைப் பொழிவு இருப்பதில்லை. குறிப்பிட்ட நாட்களில் தான் பெரும்பான்மையான மழை பெய்திருக்கிறது. அந்தந்த கண்டங்களில் நிலவும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த நாட்கள் மாறுபடுகின்றன.
காற்றில் இருக்கும் ஈரப்பதமும் இதற்கு முக்கியக்காரணம். உயரும் வெப்பநிலையால் காற்றழுத்தம் உருவாகி மழை மேகங்களை ஈர்க்கும். இதனால் மழைப்பொழிவு நடைபெறும். இதில் ஆச்சர்யம் என்னவெனில் கோடை காலத்தின்போது உலகின் மொத்த மழை அளவில் 5.2 % மழை பெய்திருக்கிறது. மாறாக மழைக்காலத்தில் 3.4 % மழை பெய்திருக்கிறது.

குறையும் நாட்கள்
குறைந்த நாட்களில் கடும் மழைப்பொழிவு நடைபெறுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கலாம். தற்போது 12 நாட்களில் பெய்யும் மழையானது 2100 ஆம் ஆண்டு 11 நாட்களில் பெய்துவிடும். இதனால் காலநிலை கணிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே புவியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனில் நாம் இம்மாதிரியான பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.