சென்னையில் மழை – பருவமழை தொடங்கி விட்டதா?

0
115
rain in chennai

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களில் பருவ மழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்திருக்கிறார்.  தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்குப் பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

rain in chennaiஅக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய வடகிழக்குப் பருவமழை மாதம் முடியப் போகும் நிலையிலும் தொடங்காமல் இருந்தது. டிட்லி மற்றும் லூபான் புயல்களின் காரணமாகப் பருவமழை தள்ளிப் போவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் சுழற்சியால் வடகிழக்குப் பருவக்காற்று வீசத் தொடங்கி நவம்பர் 1 முதல் பருவமழையைக் கொண்டு வரும் என்று வானிலை மையம் கூறி இருக்கிறது.

ஏற்கனவே, அக்டோபர் மாதத்தில் பெய்த மழையின் அளவு பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிக்காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. எனவே, பருவமழை போதுமான அளவு பெய்யுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று காலை முதலே சென்னையில் வித்தியாசமான வானிலை நிலவுகிறது. காலை வேளையில் சென்னையில் சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. கரையான்சாவடி, குமரன் சாவடி, மாங்காடு, குன்றத்தூர், வேலப்பன்சாவடி, திருவேற்காடு, மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

rain in chennaiஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், கேளம்பாக்கம், மகாபலிபுரம்,  தரமணி ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழை தற்போது தான் பெய்யத் தொடங்கியுள்ளது. படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் இதே போன்று மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.