அந்தமான் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும் வட – மேற்காக இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள கஜா புயல் அதிதீவிரமாக வலுவடைந்து வருவதாகவும், வரும் 15 – ஆம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா
கஜா மேற்கு, தென் மேற்காக நகர்ந்து வருகிறது. தற்போது கஜா புயல் நாகை மாவட்டத்திற்கு வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 15 – ஆம் தேதி கடலூருக்கும் பாம்பனிற்கும் இடையே முன்பகலில் கஜா கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் 90 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய பலத்த காற்றுடன் கடலோரப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் டெல்டா பகுதியில் நுழைந்து 85 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து அரபிக்கடலில் வரும் 16 – ஆம் தேதி இறங்குகிறது. புயல் நெருங்கும் சமயத்தில் அதாவது 14 – ஆம் தேதி தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை காற்றுடன் கூடிய கனமழை இருக்கும். புயல் காரைக்காலில் கரையைக் கடக்க இருப்பதால் கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கை
கஜா புயலினை எதிர்கொள்வதற்கான திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய மற்றும் மீட்புக்குழு அதிகாரிகள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். புயலின் காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

புயல் கரையினைக் கடந்து இயல்பு நிலை திரும்பும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கடலில் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் மீனவர்களை கரைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 80 – 100 கிலோமீட்டர வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வடகடலோர மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.