டிசம்பர் மாத இந்தியா என்பது சொல்லும்போதே உறையவைக்கும் குளிர்காலம். அதுவும் காஷ்மீர் என்றால் கேட்கவே வேண்டாம். திரும்பிய பக்கமெல்லாம் பனி படர்ந்து கிடக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக நிலைமை இன்னும் மோசம். மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் குளிரில் மொத்த காஷ்மீர் மாநிலமும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்ரீநகர் பகுதியில் வெப்பநிலையானது மைனஸ் 8.8 ஐத் தொட்டிருக்கிறது.

சில்லாய் கலான்
டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான காலம் சில்லாய் கலான் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டின் கடுமையான பனிப்பொழிவு இப்போதுதான் நடைபெறுகிறது. இதனால் காய்ச்சல், ஜன்னி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள் காஷ்மீரைச் சேர்ந்த குழந்தைகள். வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலைமையில் உள்ளனர்.
கடுங்குளிர்
அமர்நாத் யாத்திரை துவங்கும் இடமான பஹல்காமில் 8.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு/ பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கார்கில் பகுதியில் மைனஸ் 16.2 ஆக வெப்பநிலை பதிவாயிருக்கிறது. இருப்பதிலேயே லே – லடாக் பகுதியில் தான் வெப்பநிலையானது மைனஸ் 17.1 ஆக இருக்கிறது. இதனால் இயல்புநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

உறையும் ஏரிகள்
வெப்பநிலை கடுமையாக குறைந்திருப்பதால் காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற தால் ஏரியில் (Dal Lake) உள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாகி விட்டது. இதனால் அதன் வழியே படகுகளை செலுத்த முடியாமல் மக்கள் திணறுகின்றனர். மேலும் நகர நிர்வாகம் வழங்கும் குடிநீர்க் குழாய்களில் நீரானது உறைந்துவிட்டது. இப்படி பனியின் பிடியில் ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலமும் சிக்கியிருக்கிறது. அதிலிருந்து மீள இன்னும் ஒருமாதம் அவர்கள் காத்திருக்க வேண்டும்.
காஷ்மீர் மட்டுமல்ல
வட மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் இதே நிலைமை தான். காலை 9 மணிக்கு மேலேதான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். பனிமூட்டம் காரணமாக அனைத்து போக்குவரத்து வசதிகளும் தாமதமடைந்து வருகின்றன. இந்திய வானிலை ஆராய்ச்சிமையம் வட மாநிலங்களில் நிலவிவரும் பனிமூட்டம் படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் நவம்பர் 2 முதல் தொடங்கிய பனிப்பொழிவு சீசனை பலரும் உற்சாகத்தோடு வரவேற்றதை நமது எழுத்தாணி தளத்தில் ஒரு காணொளியில் பதிவு செய்திருந்தோம். அந்த விடியோவை இங்கே காணலாம்.
அப்போது உற்சாகமாக இருந்த மக்கள் இப்போது குளிரில் நடுங்கிக்கொண்டு இருக்கின்றனர்.