கூகுள் நிறுவனம் இன்று வடதுருவத்தில் துவங்கும் கோடைக்காலத்தை வரவேற்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றினை தனது முகப்புப் பகுதியில் வைத்துள்ளது. இன்று வட அரைக்கோளத்தில் வாழும் மக்கள் இந்த வருடத்தின் மிக நீண்ட பகலை சந்திக்க இருக்கிறார்கள். அதே சமயம் தென்துருவத்தில் இருக்கும் மக்கள் இந்த வருடத்தின் மிக குறுகிய பகலை அல்லது மிக நீண்ட இரவை சந்திக்க இருக்கிறார்கள். அதெப்படி ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு வகையான நிகழ்வுகள் நடக்கும்? காரணம் பூமியின் சாய்வு தான்.

பருவகாலங்கள்
பூமியில் பருவகாலங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பது புரிந்தால் இதுவும் புரிந்துவிடும். நம்மில் பலர் சூரியனில் இருந்து பூமி வெகுதூரம் விலகிச்செல்வதால் குளிர்காலமும், சூரியனை பூமி நெருங்கிவருவதால் கோடைகாலமும் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. சொல்லப்போனால் ஜூன், ஜூலை மாத காலங்களில் சூரியனிலிருந்து பூமி வெகு தொலைவில் இருக்கும். இதற்கு காரணம் பூமியின் சாய்வு மற்றும் அதன் இயக்கமாகும்.
பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் பூமி தன்னுடைய அச்சில் 23 1/2 டிகிரி சாய்வாக தன்னைத்தானேவும் சுற்றிக்கொள்கிறது. இந்த சாய்வு காரணமாக பூமியின் ஏதோ ஒரு கோளம் (வட அரைக்கோளம் அல்லது தென் அரைக்கோளம்) மட்டுமே சூரியனுக்கு அருகில் அமைந்திருக்கும். உதாரணமாக டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பூமியின் வடகோளம் சூரியனிலிருந்து தொலைவிலும், தென்கோளம் சூரியனுக்கு அருகாமையிலும் இருக்கும். இதனால் தென்துருவப்பகுதியில் அப்போது கோடைகாலம் நிலவும். அதே சமயம் சூரியனிலிருந்து தொலைவாக இருப்பதால் வடஅரைக்கோளத்தில் அப்போது குளிர்காலமும் நிலவும்.
அதேபோல இன்று பூமியின் வட அரைக்கோளம் சூரியனுக்கு அருகில் அமைந்திருக்கும் இதனால் தான் இன்று சூரிய ஒளி அப்பகுதியில் அதிகமாக விழுகிறது. இது இப்படி இருக்கையில் தென்துருவத்தில் உள்ள அண்டார்டிக்காவில் இன்று முழுவதும் சூரிய ஒளியே இருக்காது. லேசாக தலை வலிக்கிற மாதிரி இருக்கிறதா? கீழே உள்ள வீடியோவை பார்த்தால் முடிந்தது தலைவலி.