பொதுவாக, ஆமை குஞ்சு ஒன்று அல்லது பத்து குஞ்சுகள் மணல் திட்டின் மேற்பரப்புகளில் ஊர்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான குஞ்சுகள் ஒரு சுனாமியின் அலைகளைப் போல ஒன்றின் மேல் ஒன்றாக வெளிவருவதை கற்பனை செய்து பாருங்கள்.
சமீபத்தில், பிரேசிலின் அமேசான் ஆற்றின் துணை நதியான புருஸ் ஆற்றின் குறுக்கே பாதுகாக்கப்பட்ட பகுதியில் கரையில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆமை குஞ்சுகள் வெளிவருகின்ற மூச்சடைக்க வைக்கும் காட்சிகளை வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு (WCS) வெளியிட்டுள்ளது. அதாவது இந்த புரூஸ் ஆற்றின் கரையோரம், இரண்டு நாட்களில் சுமார் 92,000 ஆமைக்குட்டிகள் பிறந்துள்ளன என்று அந்த வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் முதல் நாளில் மட்டுமே 71,000 குட்டிகள் பிறந்ததாகவும், அடுத்தடுத்த தினங்களில் 21,000 குட்டிகள் பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை “ஆமை சுனாமி” என்று வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த பாதுகாவலர்கள் கூறிவருகின்றனர். பொதுவாக ஆமைகள், 80-120 என்ற அளவிலேயே தொகுப்பாக முட்டையிடுகின்றன. மேலும் அடைகாக்கும் 60 நாட்கள் காலத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாத பகுதியை தேர்ந்தெடுக்கின்றன.