அலைச்சறுக்கு (Surfing) என்பது சுமார் 9 அடி நீளம் கொண்ட பலகையைக் காலில் கட்டிக்கொண்டு, சீறும் அலைகள் மீது நின்று சறுக்கி விளையாடும் ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டைக் கடலில் மட்டுமே விளையாடுவர்.
இந்த விளையாட்டில், தனி நபர் பங்கேற்பதால் ஆழமான கடல்களில் உலாவும் போது அடியில் உயிரினங்களும் தென்படுவதை பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கும். உலக அளவிலும் இதற்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது போன்று சமீபத்தில் நடந்த அலைச்சறுக்கு விளையாட்டு ஒன்றில், மாட் வில்கின்சன் (Matt Wilkinson) என்பவர் வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்லினா கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்த போது, அவருக்கு அடியில் ஒரு பெரிய வெள்ளை சுறா இருந்ததை ட்ரோன் படம் பிடித்துள்ளது.

அந்த காட்சியில், சுமார் இரண்டரை மீட்டர் நீளம் கொண்ட வெள்ளை சுறாவானது, மாட் வில்கின்சன் கால்களைத் தாக்கத் தயாராக இருந்தது. இதையடுத்து, உடனே ட்ரோன், சுறா அருகில் இருப்பதை வில்கின்சனிடம் அறிவுறுத்தியது. கடைசி நிமிடத்தில் அதிஷ்டவசமாக சுறா வில்கின்சனை எதுவும் செய்யாமல் விட்டு விட்டது.
ட்ரோன், வில்கின்சனுக்கு மேல் வந்தபோது தான், அவர் மீண்டும் கரைக்கு வர முடிவு செய்தார். அவர் மீண்டும் கரைக்குத் திரும்பிய போது, ட்ரோனை இயக்கியவர்கள் அவருக்கு காட்சிகளைக் காட்டினர்.

இது குறித்து வில்கின்சன், “நான் ஆழமான கடல் பகுதியில் உலாவிக் கொண்டிருக்கும் போது, ட்ரோன் எனக்கு மேலே வந்து, அந்தப் பகுதியில் ஆபத்தான சுறா இருப்பதாகவும், கடற்கரைக்குத் திரும்புமாறும் என்னை அறிவுறுத்தியது. நான் கரைக்கு திருப்பிய போது, அந்த காட்சி பதிவுகளை கண்டு மிகவும் மெய் சிலிர்த்தது” எனக் கூறினார். அந்த காட்சியை நீங்களும் பாருங்கள்.
ட்ரோனை இயக்கியவர் இது குறித்து தெரிவிக்கும் போது, “சுறாவானது, எப்படி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. திடீரென வில்கின்சன் அருகில் மிகவும் வேகமாக நகர்ந்து சென்றது. நான் அதைக் கண்காணித்து மெய்க்காப்பாளர்களுக்கு அறிவித்தேன். உடனே ட்ரோனில் உள்ள ஒலிபெருக்கி உதவியால் அனைவரையும் தண்ணீரிலிருந்தும் வெளியேற்றினேன்” என்று தெரிவித்தார். மேலும் அவர் “சுறாவானது 10 விநாடி வரையில் வில்கின்சன் அருகில் இருந்தது, அடுத்த ஐந்து விநாடிகள் கழித்து அது மறைந்துவிட்டது” என்றார்.