கடந்த ஆண்டில் உருவெடுத்த கொரோனா தொற்று, மக்களின் அன்றாட வாழ்வை முடக்கிப்போட்டதன் மூலம் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது. பெரும்பாலும், வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு, போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டதால் பெரும்பாலான மக்கள் மன உளைச்சலில் உள்ளனர். இதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில், கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவிற்கான தடுப்பூசியினை உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது மக்களுக்குப் போட துவங்கியுள்ளனர்.
இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா ஊரடங்கால், மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. எனவே, பெரும்பாலானோர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலம் தாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிய பல தருணங்களை நினைவுகூர்ந்து, மீண்டும் அதே இடங்களைச் சுற்றிப் பார்க்க விருப்பம் கொள்கின்றனர்.

எனவே, மனதை சுற்றுலா செல்ல தூண்டும் விதமாக, உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் உள்ள இந்தியாவை சுற்றியுள்ள 5 அழகான நாடுகள் தேர்தெடுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நேபாளம் சுற்றுலா:

நேபாளம், இந்தியாவிலிருந்து செல்ல மிக எளிமையான நாடாகும். இந்துக்களின் புகழ் பெற்ற ஆன்மீக தலமாக விளங்கும் பசுபதிநாத் கோவில், தக்சினாகாளி கோவில், சங்கு நாராயணன் கோவில் போன்றவை இங்குள்ளது. உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர்களை கொண்ட நேபாளத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் போன்றவை சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவா்ந்துள்ளது. இங்கு, அதிகபட்சம் 10 நாளுக்கான சுற்றுலா செலவு (இந்திய மதிப்பில்) 15,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்.
இங்குள்ள பனிச் சிகரங்களும், பார்ஸா காட்டுயிர் பூங்கா, நீரூற்றுகளும், தேவி நீர்வீழ்ச்சி, சிச்சின் மானாஸ்டரி, லும்பினி, புத்தாநாத் ஸ்தூபம், ஷுக்லபந்தா தேசிய பூங்கா போன்றவை சுற்றுலா பயணிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, நீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்பினால் நேபாளம் உங்களுக்கு ஏற்ற இடமாகும்.
கண்கவர் இலங்கை சுற்றுலா:

இலங்கையானது சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் பெற்ற நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் 23 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு அமைந்துள்ள கொழும்பு உள்ளிட்ட சில இடங்களில், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் குறைந்த செலவில் கிடைக்கின்றன. இங்கு ஒரு நாளைக்கான சுற்றுலாக் கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 1500 முதல் 2000 மட்டுமே.
இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான, காலி நகரம், அனுராதபுர பொலநறுவை, பெளத்த விகாரகைகள் மற்றும் தேசிய பூங்காக்கள் போன்றவை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய உணவு, கொட்டிக்கிடக்கும் வளம், துறைமுகம், புவியியல் அமைவிடம், காலநிலை, புனித மேரி தேவாலயம் போன்றவை காண்போர் கண்களை மட்டுமல்லாது மனதையும் கவரும் வண்ணம் உள்ளன.
இலங்கையர்கள், விருந்தினர்களை உபசரிக்கும் தன்மையில் பிற நாட்டினரைக் காட்டிலும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். இலங்கையின் இரண்டாவது பெரிய யாழ் தேசிய பூங்கா, மத்திய மலைநாட்டு இயற்கை காட்சிகள், முன்னொரு காலத்தில், சிங்கள மன்னர்களின் கோட்டையாக இருந்த கண்டி, போன்ற இடங்கள் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது.
மியான்மர்:

இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான நாடு. மியான்மரில், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கின்ற இடங்களாக யாங்கோன் மற்றும் மாண்டலே போன்ற பெரிய நகரங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கான சுற்றுலா கட்டணம் (இந்திய மதிப்பில்) 3000 ரூபாய்க்கும், ஒரு வாரத்திற்கு 10,000 முதல் 15,000-க்குள்ளேயும் செலவாகும்.
இங்குள்ள இரவு சந்தைகள், பாரம்பரிய சுற்றுலா, கலாச்சாரங்கள் தெரிந்து கொள்வது, ஆன்மீக சுற்றுலா, சைக்கிள் பயணம், இயற்கை சுற்றுலா போன்றவை இந்திய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன. மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மியான்மருக்கு குறைவான சுற்றுலா பயணிகளே வருவதால், பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக உள்ளது.
வியட்நாம்:

வியட்நாம் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான நாடுகளில் ஒன்றாகும். இங்கு வளமான கலாச்சாரங்களும், வரலாற்று அம்சங்களும், தனித்துவமிக்க பாரம்பரிய இடங்களும் காணப்படுகின்றன. இங்கு ஒரு நாளைக்கான சுற்றுலா கட்டணம் (இந்திய மதிப்பில்) ரூ. 2,000 முதல் 3000 மட்டுமே. இங்கு, அற்புதமான உணவு மற்றும் படகு சவாரி போன்றவற்றிற்கு குறைந்த செலவில் விலை நிர்ணயம் செய்திருப்பது சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இங்குள்ள பழங்கால கட்டிடங்கள் அனைத்தும் இன்றுவரை அதிக உறுதியுடன் நிற்கின்றன. இயற்கை காட்சி, கலாச்சார சுற்றுலா, தீவுகளுக்கு பயணம், காட்டு சுற்றுலா உள்ளிட்ட பல சுற்றுலா இடங்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி செல்கின்றனர். இங்கு ஹனோய், நவீன வரலாறு, ஹோ சி மின் சிட்டி, அழகான கடற்கரைகள், அழகிய நிலப்பரப்புகள், மெகேங் டெல்டா உள்ளிட்ட பல இடங்கள் சுற்றுலா செல்வோர் காணத்தவறாத இடங்களாகும்.
மாலத்தீவு:

மிகவும் குட்டி நாடான மாலத்தீவு, உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரியதாகும். இந்த நாட்டின் வருமானம் முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கிறது. இந்தியாவும், இலங்கையும் மாலத்தீவின் அண்டை நாடுகளாக இருப்பதால், இவ்விரு நாட்டு மக்களுக்கும் மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு திகழ்கிறது. இங்கு ஒரு நாளைக்கான சுற்றுலா கட்டணம் (இந்திய மதிப்பில்) 2,000 ரூ முதல் 2,500 ரூ மட்டுமே. இங்கு விதவிதமான உணவுகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.
இங்குள்ள அழகான மணல் வெளிகள், தென்னைமரங்கள், அமைதியான பூங்காக்கள் போன்றவை காண்போர் மனதைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், வெள்ளி தொழுகை மற்றும் ஹுல் ஹுமாலே தீவு போன்றவற்றிற்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
எனவே, நீங்கள் குறைந்த செலவில் அதிக நாடுகளை சுற்றி பார்க்க விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் உங்கள் பாதுகாப்பிற்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்றதாக இருக்கும்.
Also Read: ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் நீங்கள் பார்க்க வேண்டிய சிறந்த 10 இடங்கள்!