இந்தியாவின், மலைப்பாதை ரயில் அல்லது பொம்மை ரயில் என்பது, 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மலைப் பகுதிகளில் கட்டப்பட்ட, ஐந்து முக்கிய ரயில் பாதைகளைக் குறிக்கும். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை இவை இயக்கப்படுகின்றன. இவை 2008ல் உலக பராம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டன.
இந்தப் பொம்மை ரயில்கள், அழகான பள்ளத்தாக்குகள், விண்ணை முட்டும் அளவிற்கு அமைந்துள்ள அழகிய மலைகள், கண்ணுக்கெட்டும் தூரம் வரை அடர்ந்த வனங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள், தேயிலைத் தோட்டங்கள் வழியாக கடந்து செல்லும்போது, நம் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை கொண்டு வருகிறது.

இந்தியாவில் மொத்தம் 6 பொம்மை ரயில்பாதைகள் உள்ளன. டார்ஜிலிங் இமாலயன் ரயில் பாதை, கால்கா-சிம்லா ரயில் பாதை, காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில் பாதை, காஷ்மீர் ரயில்வே, நீலகிரி மலை ரயில் பாதை, மாதெரன் மலை ரயில் பாதை ஆகியவையாகும். இவை, ஒவ்வொன்றாக கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. நீலகிரி பொம்மை ரயில்:

நீலகிரி மலை ரயில்பாதை பிரபலமான சுற்றுலா தளமாகும். தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி பொம்மை ரயில் இயக்கப்படுகிறது. பொதுவாகவே ஊட்டி என்றால் அனைவரின் மனதிற்குள்ளும் வந்து செல்லும் ஒரே எண்ணம் பொம்மை ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஒரே ஆசை தான். ஏனெனில், மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் இருப்பதால் இந்த பொம்மை ரயிலில் சுற்றி வருவதே ஒரு தனி அனுபவம் தான்.
இந்த ரயில் 250 பாலங்கள், 16 சுரங்கங்களை கடந்து செல்கிறது. எனவே, இப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் போது குன்னூரில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன. சுமார் 46 கிலோ மீட்டர் தூரம் இந்த ரயிலில் பயணம் செய்யும் போது, பயணிகளை இயற்கை கட்டி தழுவுவது போன்ற உணர்வு ஏற்படும்.
2. கல்கா-சிம்லா பொம்மை ரயில் பாதை:

சுற்றுலாத் தலத்தின் மிகப்பெரிய மையமாக இமாச்சலப் பிரதேசம் திகழ்கிறது. கல்கா- சிம்லா ரயில் பாதை 1903 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இமயமலை அடிவாரத்தில் உள்ள ஹரியானா மாநிலம் கல்கா பகுதியில் இருந்து சிம்லா வரை இதன் பயணம் இருக்கும். இதன், ஐந்து மணி நேர பயணத்தில், 20 ரயில்வே நிலையங்கள், 103 சுரங்கங்கள், 800 பாலங்கள், மற்றும் 900 வளைவுகள் 96 கிலோமீட்டர் (60 மைல்களுக்கு) கடந்து செல்லும். இதன் 103 வது பாதை ஒரு பேய் சுரங்கப்பாதை என்று இன்று வரை நம்பப்படுகிறது.
பெரும்பாலும், இந்த ரயில் பயணத்தின் போது, ஏராளமான மலை பகுதிகளை கடந்து செல்வதால், இந்த வழித்தடத்தில் செல்லும் பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்த படி செல்கின்றனர். குறிப்பாக, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு செல்வது சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாகும். மேலும், கல்கா – சிம்லா மலைப்பாதைத் தொடருந்து 2008 ஆம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3. மாதெரன் பொம்மை ரயில்:

மத்தியரன் மலை ரயில் பாதை அல்லது மத்தியரன் பொம்மை ரயில் பாதை என்பது இந்தியாவின் மகாராஷ்டிராவில் 2 அடி (610 மி.மீ) குறுகிய பாரம்பரிய ரயில் பாதை ஆகும். இது முதன் முதலில் 1907 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது. நேராலில் இதன் தொடக்கத்திலிருந்து சுமார் 21 கி.மீ தூரத்தை உள்ளடக்கியது. அதேசமயம், அதன் பாதை மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான பள்ளத்தாக்குகள் வழியாக அமைத்திருக்கும்.
இந்த ரயிலில் பயணம் செய்வது, நம் அனைவருக்கும் இயற்கை காட்சிகளை கண் முன்னே கொண்டு வரும். மேலும், மத்தியரன் மலை ரயில் பாதை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
4. காங்க்ரா பள்ளத்தாக்கு பொம்மை ரயில்

காங்க்ரா பள்ளத்தாக்கு பொம்மை ரயில், மற்ற பொம்மை ரயில்களிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், இது இரண்டு சுரங்கங்கள் வழியாக உங்களை அழைத்துச் செல்லும். இந்த ரயில் பாதை 164 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைந்துள்ளது. இந்தியாவில் 1929 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட மிக நீளமான கடைசி மலை ரயில் பாதை ஆகும்.
இதன் முழு பயணமும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட்டில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் ஜோகிந்தர் நகர், காங்க்ரா (தர்மசாலா அருகில்) மற்றும் பாலம்பூர் வழியாக சுமார் 10 மணி நேரம் சுற்றி வரும். இயற்கை அழகு மிகுந்த இந்த ரயில் பயணங்கள் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சிறந்த அனுபவத்தை வழங்குகின்றது.
5. டார்ஜிலிங் பொம்மை ரயில்:

இது 1881 – ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட மிக குறுகிய ரயில் பாதை ஆகும். டார்ஜிலிங் இமயமலை ரயில் என்று சொல்லப்பட்டாலும், இது அழகாக பொம்மைபோல் இருப்பதால் இன்று வரை ”டார்ஜிலிங் பொம்மை ரயில்” என்று அழைக்கப்படுகிறது. இந்த ரயில் பாதை 1999 – ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் பாதை மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரியிலிருந்து சிலிகுரி, குர்சியோங் மற்றும் கூம் வழியாக டார்ஜீலிங் வரை 80 கி.மீ. தூரம் செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் இருக்கும் இடம்தான் கூம். மிக குறுகிய ரயில் பாதையாக இருப்பினும், இந்த ரயில் ஐந்து பெரிய பாலங்களையும் 450 – க்கும் மேற்பட்ட சிறு பாலங்களையும் 870 – க்கும் மேற்பட்ட வளைவுகளையும் கடந்து செல்லும் போது நமக்கு மகிழ்ச்சியான ஓர் அனுபவத்தை வழங்குகின்றது. மேலும், இந்தியாவில் மீதமுள்ள சில நீராவி எஞ்ஜின்கள் கொண்ட ரயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, நீங்கள் வரும் ஆண்டின் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ரயில் பயணங்களை தேர்வு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மன மகிழ்ச்சியோடு கண்டுகளிக்க வாழ்த்துக்கள்!
Also Read: பயணத்திற்கு தயாராகும் உலகின் அதிவேக புல்லட் ரயில்