கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ளது தான் இந்த கேரளாவின் கவிதை என்று வர்ணிக்கப்படும் அரண்மனை. அது ஏன் கேரளாவின் கவிதை? என்று உங்களுக்கு தோன்றலாம். ஏனெனில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அரண்மனை அமைந்திருந்தாலும், பத்மநாபபுரம் அரண்மனை கேரள தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
இது கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து கேரளா செல்லும் வழியில் பத்மநாபபுரம் பகுதியில் அமைந்துள்ளது. அந்த காலத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இந்த பகுதி திகழ்ந்ததால், அரண்மனை இப்பகுதியில் கட்டப்பட்டது.

இந்த அரண்மனை கிபி 1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவி வர்ம குலசேகர பெருமாள் கட்டி முடித்தார். முன்னதாக 1550ஆண்டுகளிலிருந்து தாய் கொட்டாரம் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
Also Read:சுற்றுலா செல்வோமா? – இயற்கையின் கொடை கல்வராயன் மலை
இந்த அரண்மனை, மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதியில் அமைந்துள்ளதோடு சுற்றிலும் விவசாய நிலங்களும் கொண்டுள்ளது. இது அந்த காலத்தில், இயற்கை வளங்கள் எளிதில் கிடைப்பதற்காக இதுபோன்ற நடைமுறை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கிபி 1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னன், அரண்மனையை விரிவுபடுத்தினார். 1795 ஆம் ஆண்டு வரை பத்மநாபபுரம் திருவிதாக்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது. அதன்பின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
தற்போது இந்த அரண்மனை 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. நுட்பமான மரவேலைபாடுகள் இந்த அரண்மனையில் நீங்கள் காணலாம். அத்துடன், இந்த அரண்மனை தான் ஆசியாவின் மிகப்பெரிய மரவேலைபாடுகள் கொண்ட அரண்மனையாக திகழ்கிறது.

அரண்மனையின் முகப்பு வாயிலில் அமைந்துள்ள இரட்டை கதவுகள் கருகற்களால் ஆன தூண்ணில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கதவில் அழகான வடிவங்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் கிட்டத்தட்ட 90 வகைத் தாமரைப் பூக்கள் செதுக்கப்பட்டுள்ளது.
பூமுகத்தில், சீனர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது. அந்த படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும்.
பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் உரையாடுவார் என்று கூறப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளி அறையினுள் வரும் படி செய்யப்பட்டுள்ளது.
மந்திரச்சாலைக்கு அடுத்து மணிமாளிகை அமைந்துள்ளது. இது அந்த கிராமத்தில் இருந்த ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அமைத்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மணிமாளிகயின் மணிக்கூண்டு மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் அதை 3 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்களால் கேட்க முடியுமாம்.
அதற்கு அடுத்தப்படியாக உணவருந்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அன்னதானம் வழங்கும் இடம். இதில், 2000 பேர் அமரும் அளவு இடம் உள்ளது. அதில், ஊறுகாய் பேணுவதற்கான சாடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அன்னதாக மண்டபத்தின் அடுத்து அமைந்துள்ளது தாய்க் கொட்டாரம். இது மாளிகைத் தொகுதியில் மிகவும் பழமையான மாளிகையாகும். இது மரத்தூண்களுடன் சுதேச பாணியில் செதுக்கப்பட்டுள்ளது.
தாய்க் கொட்டாரத்தின் வட பகுதியில் ஹோமபுரம் காணப்படுகிறது. இங்குதான் யாகம் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அதன் கிழக்கு பகுதியில் சரஸ்வதி கோவிலொன்றும் காணப்படுகிறது.
அடுத்துக் காணப்படுவது உப்பரிகை. மன்னர் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750ல் அமைக்கப்பட்டது. இந்த மாளிகை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. முதலாவது மாடியில் மரத்தாலான கட்டிலொன்று காணப்படுகிறது. இரண்டாவது மாடியில் மன்னர் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. மூன்றாவது மாடியில் இராமாயணம், மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களை சித்தரிக்கும் வகையிலான ஓவியங்கள் காணப்படுகின்றன.
Also Read: வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட 10 ஓவியங்கள் !!
அடுத்தப்படியாக அந்தப்புரம் உள்ளது. அந்தபுரத்தில் ஆள் உயர கண்ணாடி உள்ளது. அங்கு சமஸ்தானத்தின் வரலாற்று சிறப்பு நிகழ்வுகளை குறிக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல வெவ்வேறு வித பகுதிகளை நீங்கள் காணமுடியும். பத்மநாபபுரம் அரண்மனையின் வாசல் மிகவும் ஒடுக்கமானதாக இருக்கும். அதில், ஒருவர் பின் ஒருவராகவே செல்ல முடியும். பிரதான கட்டத் தொகுதியில் சுரங்கப்பாதைக்கான வழியும் உள்ளது.

தற்போது இந்த அரண்மனை கட்டப்பட்டு 400 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தற்போது வரை அந்த அரண்மனையில் செயற்கை மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. போதிய வெளிச்சம் தற்போதும் இருக்கிறது. சுற்றுலா பயணிகள் காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரை உள்ளே சென்று பார்க்கலாம்.
இந்த அரண்மனை தமிழ்நாட்டில் இருந்தாலும், இதன் நூதன சாலைகள் உள்பட அனைத்தும் கேரள அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டின் வழக்கங்கள் இல்லாமல் இந்த அரண்மனை முழுக்க கேரள பாரம்பரியத்திலேயே இருப்பதை நீங்கள் அங்கு சென்றால் காண முடியும்.