இன்னொரு வாட்டி ராஜா…! இசைஞானி பிறந்த நாள் சிறப்பு பதிவு!

Date:

ராஜா பாட்டு ஒவ்வொண்ணும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஞாபகத்தை நினைவு என்னும் நூலில் போட்டு கோர்த்து எடுக்கும்..

அப்படி ஒரு வினோதமான வேடிக்கையான சம்பவம் பற்றி தான் இந்த பதிவு…

2000 ஆம் ஆண்டு கல்லூரியில் ஒரு ஆறு பேர் மதுரை பக்கம் பயணம் போனோம். கொடைக்கானல், பூம்பாறை, தேனி, கம்பம், கும்பக்கரை, சுருளி அருவி எல்லாம் சுத்திட்டு பெரியகுளம் வந்து சேர்ந்தோம். அந்த டூர்ல்ல ஒரு நிகழ்வு என்னன்னா காலை சாப்பாட்டில் இருந்து ராசாப்பாடு வரைக்கும் அனைத்தும் அசைவம் மட்டுமே. தெக்கத்தி அசைவ சாப்பாட்டை அப்படி இது வரை இன்னொரு முறை அனுபவிக்கவில்லை.

காரில் எப்போதும் ஏதாவது ராஜா பாட்டு கேட்டு கொண்டே இருக்கும். இருக்க வேண்டும்.

Ilayaraja in suit

ஆறு பேருக்கு ஒரு டாய்லெட் சரி பட்டதால், அவுட் சைட் போகும் சுகமே சுகம் என கையில் சொம்போடு கம்மாக்கரைக்கு சுமோவில் தான் பயணம். கடமைகள் நடக்கும் போதும் தள்ளி நிற்கும் காரிலிருந்து ராஜ இசை ஒலித்துக் கொண்டிருக்கும்.

பயண இரவுகளின் சம்பிராதாயமான சீட்டுக் கச்சேரியை நடத்த சில நாட்கள் தவறிய பின் அன்று பெரிய குளத்தில் சீட்டுக் கட்டு வாங்கி கொண்டோம். ராச்சாப்பாட்டுக்கு பின் பாயை விரித்து சீட்டைப் போட்டோம்.

ஆட்டம் ஏனோ சூடு பிடிக்கல, எல்லாருக்கும் கண்ணைச் சொக்கியது. ஒரு நண்பன் மட்டும் சீட்டு ஆடியே தீரணும் என்பதில் உறுதியாக இருந்தான். பாட்டைப் போடு, கேட்டுட்டே ஆடுவோம் என்றோம்.

கார் வெளியே நின்றது. டிரைவர் காரைப்பூட்டிட்டு மாடி சென்று படுத்துவிட்டார். நண்பன் விடுவதாக இல்லை, அடுத்த வீட்டுக்குப் போய் டேப் ரிக்கார்டர் வாங்கி வந்து விட்டான். ஒரு நண்பனின் பையில் கேசட்கள் இருந்தன, அதில் இந்தி பாட்டு இருந்துச்சு, அதை எடுத்து போட்டான். மற்றது எல்லாம் காரில் மாட்டிக்கொண்டது. இந்தி பாட்டு அந்த மூடுக்கு யாருக்கும் செட் ஆகாமல் போக, நண்பன் பக்கத்தில் போய் யாரையோ பிடித்து ஒரு ராஜா ஹிட்ஸ் வாங்கி வந்தான்.

அந்த காலத்தில் 60/90 என்பது பாடல் கேசட்டை அதன் கால நேரம் வைத்து குறிப்பது. 60 என்றால் 30 நிமிடங்கள் ஒரு பக்கம் ஓடும், அடுத்த பக்கம் இன்னொரு முப்பது நிமிடங்கள். 60 கேசட்டில் ஒரு பக்கம் 5-6 பாடல்கள் பதியலாம், மொத்தம் 12-13 பாடல்கள் வரும். அப்படி ஒரு டிடிகே ( அப்போதைய பிரபல கேசட் கம்பெனி) 60 இல் பாடல்கள் ஓட ஆரம்பித்தன.

ilayaraja old pics

லேசான உற்சாகம் தொற்றி கொள்ள சீட்டு ஆட்டம் துவங்கியது. என்ன என்ன பாடல்கள் என்று நினைவில்லை, ஒரே ஒரு பாட்டைத் தவிர. கிட்டத்தட்ட பாடல் வரிகளை ஆளுக்கு ஒரு ஸ்ருதியில் பாடிக்கொண்ட ஆட்டம் தொடர்ந்தது.

முதல் பக்கத்தின் முடிவு பாடல் என்று ஞாபகம், சுமார் பத்தரை மணி இருக்கும். அப்போது ஒலிக்க ஆரம்பித்தது அந்த பாடல். பாடகர் ஜெயச்சந்திரன், சுசீலா அவர்கள் பாடிய பாடலது.

ராஜா இசையில் வாலி எழுதி விஜய்காந்த் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் வந்த பாட்டு அது. இந்நேரத்திற்குள் எல்லாரும் யூகிச்சுருப்பீங்களே. அதே பாட்டு தான்.

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்…

முதல் வாட்டி ஓடி முடிந்தது. கூடவே உற்சாகமாய் பாடிய நண்பன் பாட்டு முடிந்ததும் அப்படியே சிலையாகிவிட்டான்.

மாப்ளே அந்தப் பாட்டை மறுக்க போடுடா என்றான்.

கேசட்டில் எல்லாம் இப்போ மாதிரி ஒரே டச்சில் முந்தைய பாட்டுக்கு போக முடியாது. ரீவைண்ட் என்று ஒரு பொத்தான் இருக்கும், அதை அழுத்த வேண்டும். டேப் ரீல் பின்னால் ஓடும், குத்து மதிப்பா பாட்டு துவங்கும் இடத்துக்கு சுத்திருச்சான்னு ஒரு கணக்கு வச்சு, மீண்டும் ப்ளே பொத்தானை அமுக்கி பாட வைக்கணும்.

ஒரு சமயம் அளவுக்கு அதிகமா ரீவைண்ட் ஆகி, முந்தைய பாட்டுக்கு போயிரும் இல்ல கம்மியா ரீவைண்ட் ஆகி பாதி பாட்டில் இருக்கும். சரியாப் பார்த்து செய்யணும். நான் தான் அதை செய்தேன். அடுத்த முறை ஓடியது.

அவன் கண்கள் லேசாக கலங்கியது. இப்போதும் பாடினான் கொஞ்சம் சோகம் சேர்த்து.

இன்னொரு வாட்டி டா என்றான்.

பாதியில் இருந்து ஆரம்பித்தது

முதல்ல இருந்து போடுடா.

போட்டேன்.

இந்த முறையும் பாடினான், குரல் கம்மி போயிருந்தது.

இன்னொரு வாட்டி….
இன்னொரு வாட்டி….
இன்னொரு வாட்டி..

மணி இரண்டைத் தாண்டி இருந்தது.

அவன் சீட்டும் கையுமாக அழுது கொண்டே இன்னொரு வாட்டி கேட்டான்.

நான் என் வேலையை அடுத்த நண்பனிடம் கொடுத்து விட்டு ஷிப்ட் மாறியிருந்தேன்.

இன்னொரு வாட்டி
இன்னும் ஒரே வாட்டி டா..

மணி நான்காயிருந்தது. இரண்டு மூன்று பேர் தூங்கிவிட்டிருந்தார்கள்.

சீட்டுக் கச்சேரி முடிந்து, சுவரோரம் சாய்ந்து அவன் கதை சொல்லிக்கொண்டிருந்தான்.

தூங்கணும்டா, கடைசி வாட்டி என்றான்.

ஐந்து மணி ஆனது, அந்த பாட்டை முணுமுணுத்தப் படி உறங்கிப் போனான்.

ஐந்தரை மணிக்கு டிரைவர் எழும்பி வந்தார், அவர் வரும் போது பாட்டு பாதியில் இருந்தது.

செம்ம பாட்டுல்ல தம்பி, இன்னொரு வாட்டி வைக்குறீங்களா என்று கேட்டார்.

வெளியே சேவல் கூவும் சத்தம் கேட்டது.

இப்போதும் அந்த பாட்டைக் கேட்டால் அந்த பெரியகுள இரவு என் மனக்கண்ணில் வந்து போகும்.

இன்னொரு வாட்டி ராஜா பிறந்த நாளுக்கு அந்தப் பாட்டைக் கேப்போமா…


பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசைஞானி…

DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!