கொடைக்கானல் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பச்சை பசேல் என்று இருக்கும் மரங்கள், காடுகள், பெரிய மலைகள், நீர்வீழ்ச்சி, மலையேற்றம் போன்றவை. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முந்தைய பதிவில் ஊட்டியில் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்களை பார்த்தோம். நாம் இந்த வாரம் சுற்றுலா செல்லப் போகப்போகும் இடம் கொடைக்கானல். வாருங்கள் சுற்றுலா செல்லலாம்…
1. கிரீன் வேலி வியூ (Green Valley View)

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ள சமவெளி, பள்ளத்தாக்கு, மலைகளின் அற்புதமான காட்சியை கிரீன் வேலி வியூவில் இருந்து பார்க்க முடியும். ஆழமான மற்றும் அடர்ந்த பள்ளத்தாக்காக அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு 5,000 அடிக்கு மேல் உள்ளது. இந்த பள்ளத்தாக்கிலிருந்து பார்ப்பதற்கு சரியான நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை. 3 மணிக்கு மேல் பள்ளத்தாக்கு மூடுபனியால் சூழ்ந்துகொள்ளும். கொடைக்கானல் கோல்ஃப் கிளப்புக்கு மிக அருகில் உள்ளது. உங்கள் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்ற பல கடைகள் இங்கு உள்ளது. சாக்லேட்டுகள், ஆபரணங்கள் மற்றும் பெரிய அளவிலான பூக்கள் இங்கு கிடைக்கும்.
2. பியர் ஷோலா நீர்வீழ்ச்சி (Bear Shola Falls)

பசுமையான காட்டில் இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான நீர்வீழ்ச்சி. உங்கள் விருப்பமானவர்களோடு ஓய்வெடுக்க ஏற்ற இடம். இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சிறந்த நேரம் மழைக்காலங்கள் தான். விருப்பமிருந்தால் மலையேற்றம் செல்லலாம். ஒரு கி.மீ தூரம் வரை செல்லலாம்.
3. கோக்கர்ஸ் வாக் (Coakers Walk)

இயற்கை, காதலர்களுக்கு அற்புதமான இடமாக இருக்கும். நீண்ட வளைந்த நடைபாதை. இருபுறங்களிலும் மிக நீண்டு வளர்ந்த மரங்கள், பூக்கள் இருக்கின்றன. அங்கு உள்ள தொலைநோக்கியின் மூலம் பள்ளத்தாக்கு மற்றும் மலையின் அழகை பார்த்து ரசிக்க முடியும். நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் முடியும். சைக்கிள் ஒட்டலாம். நுழைவுச் சீட்டு பெறவேண்டும். நடைபயணம் மேற்கொள்ள சிறந்த நேரம் மதியம் 2.30 வரை. பிறகு, பனி கீழே வர ஆரம்பிக்கும். மேகங்களுக்கு நடுவில் இருப்பது போல உணர முடியும்.
4. தூண் பாறை (Pillar Rocks)

செங்குத்தாக காணப்படும் மூன்று பாறைகளைக் கொண்டு தான் தூண் பாறை என பெயர் வந்தது. இந்த பாறை 400 அடி உயரம் கொண்டது. இந்த பாறையின் மேல் நின்று பார்த்தால் இயற்கையின் அழகிய காட்சியை பார்த்து ரசிக்க முடியும். மூடுபனி மற்றும் மேகங்களால் சூழப்பட்ட பாறைகளையும் காணமுடியும். தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. குணா பாறை எனவும் பெயர் பெற்றது. கமல்ஹாசன் நடித்த குணா படப்பிடிப்பு இங்கே தான் எடுக்கப்பட்டது.
5. தலையர் நீர்வீழ்ச்சி (Thalaiyar Falls)

தலையர் நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சியாகும். 297 மீட்டர் உயரம் கொண்டது. பழனி மலைத்தொடரில் பசுமை நிறைந்த சரிவுகளில் அமைந்துள்ளது. கருப்பு பாறை குன்றின் முகத்தின் பின்னணியில் ஒரு வெள்ளைநிற நீண்ட மற்றும் குறுகிய நீர் வருவதை காணமுடியும்.
6. பேரிஜம் ஏரி (Berijam Lake)

பேரிஜம் ஏரி காட்டுக்குள் உள்ளது. இந்த ஏரிக்கு யானை, நீலகிரி லங்கூர், காட்டெருமைகள், பாம்பு, சிறுத்தை, மான் போன்ற பல விலங்குகளின் வாழ்விடத்தையும் இந்த ஏரியில் தண்ணீர் பருக வருவதால் இந்த ஏரிக்கு செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். இயற்கையின் அழகில் பைன் மரங்களால் பேரிஜம் ஏரி சூழப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகரமான பெரியகுளத்திற்கு குடிநீரின் முக்கிய ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. அக்டோபர் முதல் மே மாதம் வரை சுற்றுலா செல்ல ஏற்ற நேரம்.
7. டால்பின் மூக்கு (Dolphin’s Nose)

சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடம் டால்பின் மூக்கு. இந்த இடம் 6,600 அடி உயரத்தில் உள்ளது. இங்கு காணப்படும் பாறை டால்பின் மூக்கு வடிவில் இருப்பதால் டால்பின் மூக்கு என்று அழைக்கப்படுகிறது. மலைத்தொடரின் பைன் மரங்களுக்கு நடுவே 3 கி.மீ தூரம் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும். நடை பயணம் மேற்கொள்ள சுற்றிலும் பசுமையோடு கலந்த நீர்வீழ்ச்சி மற்றும் உள்ளூர் கிராமங்களை பார்வையிட முடியும். பார்வையிட குறைந்த பட்ச நேரம் அரை நாள் தேவைப்படும். சுற்றுலா பயணியை வசீகரிக்கக் கூடிய இடம்.
8. கொடைக்கானல் ஏரி (Kodai Lake)

கொடைக்கானல் ஏரி நட்சத்திர வடிவில் அமைந்துள்ளது. இந்த ஏரி 60 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. படகு சவாரி செய்யவும் மீன் பிடிக்கவும் ஏற்ற இடம். குதிரை சவாரி, சைக்கிள் பயணம், ஏரியை சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள சிறந்த இடம். பழனி மலைத்தொடரில் அமைந்துள்ளது.
9. மலையேற்றம் (Trekking)

சாகச விரும்பிகளுக்கு ஏற்ற இடம். ஒவ்வொருவரின் மலையேறும் திறனுக்கேற்ப பாதையை தேர்வு செய்து கொள்ளலாம். மலையேற்ற பாதை சுமார் 18 கி.மீ தூரம் கொண்டது. 7 மணி நேரத்தில் பயணத்தை முடிக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்ல ஏற்ற இடம்.
10. குறிஞ்சி ஆண்டவர் கோவில் (Kurinji Temple)

குறிஞ்சி கோவில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் குறிஞ்சி மலர்கள் இங்கு ஊதா நிற போர்வை போர்த்தி காட்டும். ஜூலை முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும். அருகில் சிறிய கிராமங்களில் கேரட் விளைவிக்கப்படுகிறது.
Also Read: தேனி சுற்றுலா: தேனியில் பார்க்க வேண்டிய முக்கியமான 10 இடங்கள்!
கோடை விடுமுறையைக் கொண்டாட கர்நாடகாவின் சிறந்த 5 சுற்றுலா தலங்கள்!
கன்னியாகுமரி சுற்றுலா: நீங்கள் கண்டுகளிக்க சிறந்த 10 இடங்கள்…!