சோலையாறு அணை (Sholayar Dam)

சோலையாறு அணை கோயமுத்தூர் மாவட்டத்தின் ஆனைமலையில் உள்ள மலைவாசஸ்தலமான வால்பாறையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 160 அடி. சோலையாறு அணை, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த நீர்த் தேக்கத்தில் உள்ள உபரி நீர் பரம்பிக்குளம் நீர்த்தேக்கத்தை சென்று அடைகிறது. 1965 ஆம் ஆண்டு சோலையாறு அணை திறக்கப்பட்டது. இதன் உயரம் 66 மீட்டர் ஆகும். சோலையாறு அணை நீளம் 6 முதல் 7 கி.மீ கொண்டது. அணையின் மொத்த கொள்ளளவு 150.20 மில்லியன் கன மீட்டர்.
ஆழியாறு அணை (Aliyar Dam)

ஆழியாறு அணை பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும். ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடல் என்று பொருள்படும். கடல்போன்ற பெரிய ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்திய தர நிர்ணய பட்டியலில் இந்த அணை பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது. இந்த அணை 1957-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1962-ல் இந்த அணை திறக்கப்பட்டது. இந்த அணை காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆழியாறு அணையின் உயரம் 44.19 மீ கொண்டது. அணையின் நீளம் 3200.4 மீ ஆகும். ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 2940 க.மீ3 கொண்டது.
மேட்டூர் அணை (Mettur Dam)

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை என்று அழைக்கப்படுகிறது. ஸ்டேன்லி என்பவரால் கட்டப்பட்டது அதன் காரணமாக ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணையிலிருந்து நீர் வந்து சேர்கிறது. மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன. இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் அணையின் உயரம் 120 அடி கொண்டது. அணையின் நீளம் 1700 மீட்டர் ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 93.4 பில்லியன் கன அடி (2.64 கி.மீ³)
மணிமுத்தாறு அணை (Manimuthar Dam)

மணிமுத்தாறு அணை திருநெல்வேலி மாவட்டத்தில் மணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இந்த நீர் மழைக்காலத்தில் தாமிரபரணியில் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதல்வராக இருந்த காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம். சிங்கம்பட்டி எனும் இடத்திற்கு அருகே 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் 3 கி.மீ. ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 5,511 மில்லியன் கனஅடி. இந்த அணையின் மூலம் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாபநாசம் அணை (Papanasam Dams)

பாபநாசம் அணை திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். அணையில் உயரம் 143 அடிவரை நீரைத் தேக்க முடியும். அணையின் நீளம் 744 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. 1942 இல் ஆங்கிலேயர் காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது. இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன.
கிருஷ்ணகிரி அணை (Krishnagiri Dam)

கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இது கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அணை 1955 ல் கட்டத்தொடங்கி 1958 இல் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உயரம் 29.26 மீ ஆகும். அணையின் நீளம் 990.59 மீ ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 1666 மில்லியன் கன அடிகள்.
திருமூர்த்தி அணை (Thirumoorthi Dam)

திருமூர்த்தி அணை உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. 1967 ஆம் ஆண்டில் பாலாற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 34.14 மீ ஆகும். அணையின் நீளம் 2679.79 மீ கொண்டது.
மொர்தானா அணை (Mordhana Dam)

வேலூர் பகுதியில் குடியாத்தம் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் மொர்தானா அணைஉள்ளது. வேலூரிலிருந்து 31 கி.மீ தூரத்தில் குடியாத்தம் உள்ளது. இந்த அணை 220 மீ நீளமும் 33 மீட்டர் உயரமும் கொண்டது. 2000 ஆண்டில் இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது.
சாத்தனூர் (Sathanur Reservoir)

சாத்தனூர் அணை, தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் ஒன்றாகும். இது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்னகேசவ மலைகளில் தண்டரம்பேட்டை தாலுகாவில் பென்னையார் நதி என்றும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரத்திலிருந்து 30 கி.மீ (19 மைல்) சாலை வழியாக அணையை அடையலாம். இது 1953 ல் கட்டப்பட்டு 1958 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 119 அடி. அணையின் நீளம் 4500.59 மீ.
கெலவரப்பள்ளி நீர்தேக்கம் (Kelevarapalli Dam)

கெலவரப்பள்ளி நீர்தேக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள கெலவரப்பள்ளி என்ற ஊரில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி நீர்தேக்கம் அமைந்துள்ளது. 1993 இல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் கொள்ளளவு 481 மில்லியன் கன அடி. இந்நீர் தேக்கத்தின் வலப்புற கால்வாய் 22.6 கி.மீ நீளமும், இடப்புற கால்வாய் 32.5 கி.மீ நீளமும் கொண்டது.
Also Read: நிரம்பி வழியும் மேட்டூர் அணை – கடலுக்குச் செல்லும் காவிரி!!