ஏற்காடு
ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1515 மீட்டர் (4969 அடி) உயரத்தில் உள்ளது. ஏற்காட்டை “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படுகிறது. ஏரிக் காடு மருவி ஏற்காடு என்று மாறிவிட்டது. சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்காடு அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஏற்காட்டில் பார்க்க வேண்டிய முக்கியமான 10 இடங்கள்!
விவசாயம்
ஏற்காட்டில் காப்பிச்செடி தோட்டங்கள், பலா, நட்சத்திர ஆப்பிள், அத்திபழம், நீர் ஆப்பிள், பேரிக்காய், வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் மரங்களும் ஏராளமாக காணப்படுகின்றன.
விலங்குகள்
காட்டு விலங்குகளான காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப் பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து, புல்புல், கருடன், சிட்டு குருவி மற்றும் ஊர்குருவி வகைகள் ஏற்காட்டில் வாழ்கின்றன.
கோடை விழா
ஏற்காட்டில் கோடை விழா ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த கோடை விழாவில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி மற்றும் படகு போட்டி நடைபெறும்.
கிளியூர் நீர்வீழ்ச்சி (Kiliyur Falls)

ஏற்காடு ஏரியில் இருந்து 3.9 கி.மீ தொலைவில் கிளியூர் அருவி அமைந்துள்ளது . மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது. ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது. கிளியூர் அருவியை கண்டுகளிக்க ஏற்ற மாதம் ஜூலை முதல் ஆகஸ்ட்.
பகோடா பாயிண்ட் (Pagoda Point)

ஏற்காட்டிலிருந்து 4.5 கி.மீ தொலைவில் உள்ளது. பகோடா பாயிண்ட் அற்புதமான சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சிகளை வழங்குகிறது. பகோடா புள்ளியில் இருந்து கிராமத்தின் அற்புதமான காட்சியை காணமுடியும். முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. ஏற்காட்டின் கிழக்கு முனையில் அமைந்துள்ள இந்த காட்சிமுனை பிரமிட் பாய்ன்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
ஏற்காடு ஏரி (Yercaud Lake)

ஏற்காட்டிலிருந்து 1.3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்று. ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. ஏரியில் படகு சவாரி வசதி உள்ளது. மான் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, அண்ணா பூங்கா உள்ளது. பூங்காவில் ஜப்பானிய தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் உள்ளது. இந்த ஏரியை மரகத ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. படகு சவாரி செய்ய காலை 9 முதல் மாலை 5.30 வரை.
லேடி சீட், ஜென்ஸ், சில்ரன்ஸ் சீட் (Lady’s seat, Gent’s Seat and Children’s Seat)

ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த லேடி சீட், ஜென்ஸ் சீட், குழந்தைகள் இருக்கை என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே இடத்தில் உள்ளன. சில நிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வெடுக்க ஏற்ற இடம் மற்றும் அழகான காட்சி. தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கணலாம்.
தாவரவியல் பூங்கா (Botanical Garden)

ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேசிய தாவரவியல் பூங்கா 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தேசிய தாவரவியல் பூங்காவின் மொத்த பரப்பளவு சுமார் 18.4 ஹெக்டேர். இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. அங்கு உள்ள மணிப்பாறையில் கல்லால் மோதினால் மணிச்சத்தம் கேட்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட நல்ல இடம். ஒவ்வொரு வருடமும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
பட்டு பண்ணை (Silk worm Museum )

ஏற்காட்டிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள பட்டு பண்ணையில் மெல்பெரி செடிகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. இங்கு பட்டு பூச்சி வளர்ப்பையும், அதிலிருந்து பட்டு நூல் தயாரிப்பையும் காணலாம்.
ரோஜா தோட்டம் (Rose Garden)

ரோஜா தோட்டத்தில் பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு ரோஜா செடிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
கிரேஞ்ச் ட்ரீடாப் சாகசம் (Grange TreeTop Adventure)

ஏற்காட்டில் இருந்து 1.8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சாகச பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற இடம்.
சேர்வராயன் கோவில் (Shevaroy Temple)

ஏற்காட்டில் இருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைகளின் மேல் ஒரு குகைக் கோயில். குளிர்காலத்தில் கடும் காற்றுடன் கூடிய அடர்ந்த மூடுபனியை இங்கு காணலாம். இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு பெருமாள் குகைக்கோவிலாகும். மே மாதத்தில் இங்கு நடைபெறும் திருவிழா மிக வண்ணமயமானதாகவும் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கொண்டாடுவதாகவும் உள்ளது. பார்வை நேரம் காலை 6 முதல் இரவு 8 வரை.
நல்லூர் நீர்வீழ்ச்சி (Nallur WaterFalls)

ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ தொலைவில் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.
Also Read: ஏலகிரி சுற்றுலா: நீங்கள் பார்க்க வேண்டிய சிறந்த 10 இடங்கள்
கொடைக்கானல் சுற்றுலா: ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் நீங்கள் பார்க்க வேண்டிய சிறந்த 10 இடங்கள்!
தேனி சுற்றுலா: தேனியில் பார்க்க வேண்டிய முக்கியமான 10 இடங்கள்!