ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக அமைதி தினமாக கொண்டாடப்படுகிறது. இதே நாளன்று ஐநா மன்றத்தில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலும் தாக்கல் செய்யப்படுகிறது. சென்ற வருடத்தைப் போலவே இந்த ஆண்டும் முதலிடத்தை பின்லாந்து தட்டிச் சென்றிருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

மகிழ்ச்சியின் பட்டியல்
மொத்தம் ஆறு வகையில் நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வருமானம், சுதந்திரம், ஆரோக்கியம், நம்பிக்கை, சமூக ஒத்துழைப்பு மற்றும் பெருந்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட கணக்கெடுப்பில் பின்லாந்து முதலிடம் பிடித்திருக்கிறது.
பின்லாந்து
கண்ணைக்கவரும் வடக்கொளி, சாண்டா கிளாஸ் தாத்தாவின் பயணங்கள் குறித்த சுவாரஸ்ய கதைகள், எங்கு நோக்கினும் வெண்பனி என மனதினைக் கிளர்ச்சியடையச் செய்யும் விஷயங்கள் பின்லாந்தில் ஏராளம். இந்நாட்டின் குடிமக்கள் மட்டுமன்றி இங்கு அகதிகளாக இருப்போரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்களாம்.

இந்த ஆய்வினை மேற்கொண்டவருள் ஒருவரான ஹெல்லிவேல், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசியராக இருக்கிறார். ஆய்வு குறித்து பேசும்போது, “பின்லாந்து மக்கள் சமூக பாதுகாப்பிற்காக அதிக அளவு பணத்தினை வரியாக கட்டுகின்றனர். சமூக முன்னேற்றம் மற்றும் இயலாதோருக்கு உதவுவதில் ஒவ்வொரு பின்லாந்து குடிமகனும் அக்கறை கொள்கிறான். அதனால் தான் பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது” என்றார்.

மாற்றங்கள்
சென்ற வருடம் 133 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 7 இடங்கள் பின்தங்கி 140 வது இடத்தில் இருக்கிறது. எதிர்மறையான எண்ணங்களும், உதவு செய்யும் மனப்பான்மை குறைந்ததும் இந்தியாவின் இந்த பின்னேற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
முன்னேறிய நாடுகளான அமெரிக்கா 19வது இடத்திலும், இங்கிலாந்து 15 ஆம் இடத்திலும், 17 ஆம் இடத்தில் ஜெர்மனியும், ரஷ்யா 68 வது இடத்திலும் இருக்கின்றன. எனவே அதீத பொருளாதார, ராணுவ பலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாகிறது.

முதல் 10 இடங்கள்
- பின்லாந்து
- டென்மார்க்
- நார்வே
- ஐஸ்லாந்து
- நெதர்லாந்து
- சுவிட்சர்லாந்து
- ஸ்வீடன்
- நியூசிலாந்து
- கனடா
- ஆஸ்திரேலியா
மொத்தம் 156 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மகிழ்ச்சியே இல்லாமல் துன்புறும் நாடுகளின் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கீழே காண்போம்.
- தெற்கு சூடான்
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு
- ஆப்கானிஸ்தான்
- தான்சானியா
- ருவாண்டா
- ஏமன்
- மலாவி
- சிரியா
- போட்ஸ்வானா
- ஹைதி